Published : 16 Feb 2015 03:50 PM
Last Updated : 16 Feb 2015 03:50 PM

அஸ்வினின் 3 மெயிடன்கள்; கோலியின் சாதனை சதம்: இந்தியா - பாக். போட்டி முக்கியப் புள்ளிவிவரம்

அடிலெய்டில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் சதம் எடுத்த கோலி குறைந்த இன்னிங்ஸ்களில் 22 ஒருநாள் சதங்களை எட்டிய சாதனையை நிகழ்த்தினார்.

இந்திய-பாகிஸ்தான் போட்டியின் சுவையான தகவல்கள் சில:

உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் எவரும் சதம் எடுத்ததில்லை. அதனையும் தற்போது விராட் கோலி தன் சதம் மூலம் சாதித்துள்ளார். 2003 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த அபார இன்னிங்சில் சச்சின் எடுத்த 98 ரன்களே இதுவரை பாக்.க்கிற்கு எதிராக உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.

143 இன்னிங்ஸ்களில் 22 ஒருநாள் சதங்களை எடுத்துள்ளார் கோலி, சச்சின் டெண்டுல்கர் 206 இன்னிங்ஸ்களில் 22 ஒருநாள் சதங்களை எடுத்திருந்தார். ஆனால் சச்சின் முதல் 75 அல்லது 76 போட்டிகளில் தொடக்கத்தில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி உட்பட 5 வீரர்களே இதுவரை ஒருநாள் போட்டிகளில் 22 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை எடுத்துள்ளனர்.

சச்சின் - 49 சதங்கள்

ரிக்கி பாண்டிங் - 30 சதங்கள்

சனத் ஜெயசூரியா - 28 சதங்கள்

சவுரவ் கங்குலி - 22 சதங்கள்

விராட் கோலி - 22 சதங்கள்.

1979-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய ஸ்பின்னர் எஸ்.வெங்கட்ராகவன் மே.இ.தீவுகளுக்கு எதிராக 3 மெய்டன்களை வீசினார். அதன் பிறகு இப்போது அஸ்வின் இந்த உலகக்கோப்பை போட்டியில் 3 மெய்டன்களை வீசினார். ஒருநாள் போட்டிகளில் அதிக மைடன்களை வீசியவர் பிஷன் சிங் பேடி, அவர் 1975 உலகக்கோப்பை போட்டியில் கிழக்கு ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 8 மெய்டன்களை வீசி சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டிகளில் 2 சதக்கூட்டணி அமைவது இந்தியாவுக்கு 3-வது முறையாகும் இது. இதற்கு முன்னர் 2007 உலகக்கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 2 சதக்கூட்டணியும் 2011-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 சதக்கூட்டணியும் அமைத்துள்ளனர்.

நேற்றைய போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் 2 முறையே எதிரணியினருக்கு 300 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக ஒரு முறையும், அதற்கு முன்னதாக 2003 ஆம் அண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 310 ரன்களை பாக். விட்டுக் கொடுத்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பையில் இந்தியா 6-0 என்று உள்ளது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக தோற்காமல் அதிக வெற்றிகளை உலகக்கோப்பையில் வைத்திருக்கும் அணியும் பாகிஸ்தானே. இலங்கை அணியை உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் 7 முறை வென்றுள்ளது. இலங்கை இதுவரை பாகிஸ்தானை உலகக்கோப்பை போட்டிகளில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x