Published : 10 Feb 2015 10:21 AM
Last Updated : 10 Feb 2015 10:21 AM
கிரிக்கெட் உலகில் பன்னெடுங்காலம் கோலோச்சிய மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பைப் போட்டி, பல்வேறு சர்ச்சைகளுக்காகவும், பரபரப்பான திருப்பங்களுக்காகவும், இன்றும் நினைவில் நிற்கிறது. பெரிய அளவுக்கு நிதி வசதியில்லாத மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் இப்போட்டிகளை நடத்தி முடிப்பதற்குப் படாதபாடுபட்டது.
போட்டி நடந்த புதிய மைதானங்கள் கடைசி நேரம் வரை முழுவதுமாக தயாராகாதது, மைதானப் பணியாளர்களையே பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுமதிக்காமல் போனது எனப் பல்வேறு சொதப்பல்கள் அரங்கேறின.
மேற்கிந்தியத் தீவுகளுக்கே உரிய டிரம்ஸ், சங்கு, மற்றும் நடனம் ஆகியவை மைதானங்களில் தடைசெய்யப்பட்டன. ரசிகர் கூட்டம் குறைவாக இருந்தது. வெளி நாட்டு ரசிகர்களுக்குக் கூடுதல் முக்கியத் துவம் தரப்பட்டது போன்ற பல காரணங் களுக்காக ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தனது அதிருப்தியை வெளியிட்டு, கண்டனத்துக்காளானார். பயிற்சி மேற்கொள்வதற்கான போதிய வசதிகள் இல்லை என்று ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் தங்கள் பங்குக்குக் குறை கூறின.
இப்போட்டியின்போது, தர வரிசையில் முதல் 3 இடங்களில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூஸிலாந்து அணிகள் இருந்தபோதிலும், 4-வது மற்றும் 5-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளின் மீது பெரும்பாலானோரின் கவனமும் பதிந்திருந்தது.
தலைசிறந்த பயிற்சியாளர், முதல் முதலில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வீரர்கள், எதிரணிகளின் குறை, நிறைகளை ஆராய்ந்து அதற்கேற்க வியூகம் வகுத்தவர் என்றறியப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த பாப் உல்மர், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்ததும், ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரெக் சேப்பல் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்ததுமே அதற்கு முக்கியக் காரணம்.
சேப்பல் சர்ச்சைகளின் நாயகர். அணித் தலைவராக இருந்த சவுரவ் கங்கூலியிடம் மோதி, அவரது தலைமைப் பதவி பறிபோகவும், அணியில் இருந்து நீக்கப்படவும் காரணமாக இருந்தவர். அவருக்கு கங்குலி, வி.வி.எஸ். லக்ஷ்மன் போன்ற சில சீனியர்களை ஏனோ பிடிக்கவேயில்லை. பின்னர், ஒருவழியாக அணியில் கங்குலி இடம்பிடித்து, 2007 உலகக் கோப்பைக்கும் தேர்வு செய்யப் பட்டார்.
ராகுல் திராவிட் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற அணி, சேப்பலின் எதேச்சதிகார அணுகுமுறை காரணமாகச் சுரத்திழந்திருந்தது. ஹர்பஜன் சிங், கங்கூலிக்கு ஆதரவாக வெளிப்படையாக்க் கருத்து தெரிவித்ததே அணி பிளவுபட்டிருந்ததைப் படம்பிடித்துக் காட்டியது. இந்த சூழலில்தான் இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகள் போய்ச் சேர்ந்தது.
வழக்கமான இரண்டு குழுக்களுக்குப் பதில், இம்முறை தலா நான்கு அணிகள் அடங்கிய நான்கு குழுக்கள் ஏற்படுத்தப் பட்டன. பிரிவுகளின் விவரம்: ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, தென்னாப் பிரிக்கா, ஸ்காட்லாந்து. ‘பி’ பிரிவில், இந்தியா, இலங்கை, வங்கதேசம், பெர்முடா, ‘சி’ பிரிவில், இங்கிலாந்து, நியூஸிலாந்து, கனடா, கென்யா, ‘டி’ பிரிவில், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து.
பாப் உல்மர் மரணம்
மார்ச் 14-ல் தொடங்கிய முதல் போட்டியில், ஆஸ்திரேலியா, எளிதில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. ஆனால், மார்ச் 17-ம் தேதி, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்குப் பேரிடி காத்திருந்தது. அன்று, வங்கதேசத்துடன் மோதிய இந்தியா, தோல்வியடைந்தது.
முதலில் ஆடிய இந்தியா, முர்தஸா, ரசாக் உள்ளிட்டோரின் சிறப்பான பந்து வீச்சில் 49.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பின்னர், தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பாலின் சிறப்பான ஆட்டத்தால், 48.3 ஓவரிலேயே வங்கதேசம் வென்றது. அதேநாளில், முதல்முறையாக உலகக் கோப்பையில் இடம்பிடித்த அயர்லாந்து அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
அன்றைய இரவு, கிங்க்ஸ்டனில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் பாப் உல்மர் இறந்து கிடந்தார். அது கொலை என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சில மாதங்களுக்குப் பிறகு, அது இயற்கையான மரணம் என ஒருவழியாக முடித்துவைக்கப்பட்டது.
மனம் நொந்த நிலையில் ஆடிய பாகிஸ்தான், கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை படுதோல்வியடையச் செய்து ஆறுதல் தேடிக்கொண்டாலும், அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, ‘சூப்பர் 8’ பிரிவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன், கற்றுக்குட்டி அயர்லாந்து தகுதி பெற்றது.
‘ஏ’ பிரிவில் இந்தியாவை புறம்தள்ளி, இலங்கையும், வங்கதேசமும், அடுத்த கட்டத்துக்கு முன்னேறின. 1983-க்குப் பிந்தைய உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளில் ஒன்றுகூட அரையிறுதிக்குத் தகுதி பெறாதது அதுவே முதல்முறையாகும். இந்திய ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். ஆட்டம் பற்றியும் அணியில் நிலவும் சூழல் பற்றியும் பல சர்ச்சைகள் எழுந்தன. கிரெக் சேப்பல் ராஜினாமா செய்தார்.
மகேந்திர சிங் தோனியின் முதல் கோப்பையாக அமைந்த இந்தத் தொடர் திராவிட், கங்கூலிக்குக் கடைசி உலகக் கோப்பைத் தொடராகவும் அமைந்தது.
1996 தோல்விக்குப் பழி
சூப்பர் 8 பிரிவில் தென்னாப் பிரிக்காவை 67 ரன்னில் வீழ்த்தி வங்கதேசம் அசத்தினாலும், அரையிறுதிக்கு வலுவான ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப் பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளே தகுதி பெற்றன. அரையிறுதியில் நியூஸிலாந்தை வீழ்த்தி, இலங்கையும், வலுவான தென்னாப்பிரிக்காவை எளிதில் ஊதித் தள்ளி ஆஸியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
அதுவரை நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில், ஏற்கெனவே மோதிய இரு அணிகள் மீண்டும் இறுதியில் மோதியதில்லை. ஆனால்,
இலங்கையிடம் 1996-ல் இறுதிப் போட்டியில் தோற்ற ஆஸி, இம்முறை மீண்டும் அந்த அணியை இறுதியில் (ஏப்ரல் 28) சந்தித்தபோது, அதற்குப் பழிவாங்கியது மட்டுமன்றி, தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையைத் தட்டிச்சென்று ‘ஹேட்ரிக்’ சாதனையும் புரிந்தது முத்தாய்ப்பாக அமைந்தது.
இறுதிப் போட்டி சர்ச்சை
மழை காரணமாக 36 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் இரண்டாவதாக ஆடிய இலங்கைக்கு 281 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், 36 ஓவர்களில் 269 ஆக அது மாற்றப்பட்டது. அதன்பிறகு, 33-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால், 37 ரன்களில் ஆஸி வென்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினர். ஆனால் அது தவறு என்று கூறி, 18 பந்துகளில் 61 ரன்கள் எடுக்க வேண்டும் என்று மீண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெளிச்ச மின்மையால் மறு நாள் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே, தொடர்ந்து ஆடுவதாகக் கூறியதும், எதிரணி கேப்டன் பான்டிங், ஸ்பின்னர் களை மட்டுமே பயன்படுத்துவ தாகக் கூறினார். இருட்டில் ஆடிய இலங்கை, 9 ரன்களை மட்டுமே மேலும் சேர்க்க முடிந்தது. இந்தச் சொதப்பலுக்காக நடுவர்கள் மன்னிப்பு கேட்டாலும் 2007-ல் நடந்த 20 ஓவர் போட்டிக்கு அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு சர்ச்சைகள் நிறைந்ததாக 2007 கோப்பை அமைந்தது.
சுவாரஸ்யங்கள், சாதனைகள்
பெர்முடாவுக்கு எதிராக இந்தியா அடித்த 413 ரன்களே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோராகும்.
நெதர்லாந்துடனான ஆட்டத்தில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்து, சாதனை புரிந்தார் தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ்.
127 கிலோ எடையுள்ள பெர்முடாவின் லிவராக், ஸ்லிப்பில் பாய்ந்து பிடித்த உத்தப்பாவின் கேட்ச், இன்றளவும் பேசப்படுகிறது.
அயர்லாந்து அணிக்காக உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆடிய எட்ஜாய்ஸ், உலகக் கோப்பையின்போது இங்கிலாந்து அணியில் ஆடினார்.
அயர்லாந்து அணியில் விளையாடிய தென்னாப்பிரிக்கரான இயன் மார்கன், 2015 உலகக் கோப்பையின் இங்கிலாந்தின் கேப்டனாகக் களம் காண்கிறார்.
முதல் முறையாக அதிக அணிகள் (16) இடம்பெற்றன. சூப்பர் 8 சுற்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT