Published : 19 Feb 2015 03:33 PM
Last Updated : 19 Feb 2015 03:33 PM
பாகிஸ்தானுக்கு எதிரான அழுத்தம் மிகுந்த உலகக்கோப்பை போட்டியில் வென்ற பிறகு இந்திய அணி மீண்டும் தீவிரப் பயிற்சிக்குத் திரும்பியது.
வரும் ஞாயிறன்று தென் ஆப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அந்த அணியின் ஆலோசனை நபர்களில் இந்திய வீரர்களைப் பற்றி நன்கு அறிந்த கேரி கர்ஸ்டன், மைக் ஹஸ்ஸி ஆகியோர் உள்ளனர். ஏற்கெனவே தென் ஆப்பிரிக்கா அணியை உலகக்கோப்பையைக் கைப்பற்றச் செய்வோம் என்று கேரி கர்ஸடன் அன்று கொல்கத்தாவில் சூளுரைத்துள்ளார்.
செயிண்ட் கில்டாவின், தி ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி நேற்று தனது தீவிர பயிற்சிக்குத் திரும்பியது.
மொகமது ஷமி பேட்டிங்கில் சில பெரிய ஷாட்களை ஆடி பயிற்சி மேற்கொண்டார், இது வழக்கமான பயிற்சிகள் முடிந்த பிறகு.
கேப்டன் தோனி ஒரு மணிநேரத்துக்கு மேலாக பேட்டிங் செய்தார். மொகமது ஷமி தனது வேகப்பந்து வீச்சினால் பேட்ஸ்மென்களின் கால் நகர்த்தல்களுக்கு சில சோதனைகளை ஏற்படுத்தினார்.
அன்று பாகிஸ்தானுக்கு எதிராக 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை ஷமி எடுத்தாலும் அவருக்கு அதற்கான போதிய பாராட்டுதல்கள் கிடைக்கவில்லை. இதற்கும் காரணம் உண்டு. யூனிஸ் கான் விக்கெட்டை கூர்மையான பவுன்சர் மூலம் கைப்பற்றிய அவர், கடைசியில் ஷாகித் அஃப்ரீடிக்கு புல்டாஸை வீசினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அது அவுட் ஆனது. வஹாப் ரியாஸ் ஒரு டெய்ல் எண்டர். மிஸ்பா உல் ஹக் விக்கெட் எப்படியிருந்தாலும் வீழ்ந்தேயாக வேண்டிய நிலையில்தான் ஆட்டம் இருந்தது. எனவே ஷமி பவுலிங் பற்றி அன்று பெரிதாகப் பேசப்படவில்லை.
ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஷமி 41 ஆட்டங்களில் இதுவரை 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கடைசி 30 போட்டிகளில் 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் மொகமது ஷமி. ஆகவே அவரது பந்துவீச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றே பொருள். அஜித் அகார்க்கருக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திய பெருமையும் ஷமியைச் சாரும்.
உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய பவுல்ர் என்ற வகையில் வெங்கடேஷ் பிரசாத் முதலிடம் வகிக்கிறார். 1999 உலகக்கோப்பையில் ஓல்ட் டிராபர்ட் வெற்றியில் இவர் 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அன்று பாகிஸ்தானுக்கு எதிராக ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முக்கியப் போட்டியில் ஷமி மீது கவனக்குவிப்பு அதிகமாகியுள்ளது.
ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அஸ்வின் ஒரு முக்கிய ஆயுதமாக இருப்பார் என்பதும் இந்திய அணியின் பயிற்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT