Published : 18 Feb 2015 04:42 PM
Last Updated : 18 Feb 2015 04:42 PM
கான்பராவில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வங்கதேசம் 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஷ்ரபே மோர்டசா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அந்த அணி 50 ஓவர்களில் 267 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் 43-வது ஓவரில் 162 ரன்களுக்குச் சுருண்டது.
வங்கதேச அணியில் பேட்டிங்கில் ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 114 ரன்களை சுமார் 15 ஓவர்களில் சேர்த்தனர். முஷ்பிகுர், ஷாகிப் இருவரும் அரைசதம் கண்டனர்.
ஆப்கான் அணியில் ஹமித் ஹசன், ஷபூர் சத்ரான், அப்டாப் ஆலம், மிர்வைஸ் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆப்கான் அணியின் பேட்டிங் வரிசையில் சமியுல்லா ஷென்வாரி (42), கேப்டன் மொகமது நபி (44) ஆகியோர் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தனர். மற்றபடி தொடர் சரிவு கண்டு தோல்வி தழுவியது.
வங்கதேச அணியில் கேப்டன் மோர்டசா 9 ஓவர்கள் வீசி 2 மைடன்களுடன் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றினார். ஷாகிப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆட்ட நாயகனாக 56 பந்துகளில் 71 ரன்கள் எடுத்த முஷ்பிகுர் ரஹிம் தேர்வு செய்யப்பட்டார்.
சுமாரான தொடக்கத்துக்கு பிறகு நிலைப்படுத்திய முஷ்பிகுர், ஷாகிப் அல் ஹசன்:
ஆப்கான் தனது தொடக்க பந்துவீச்சில் வங்கதேசம் எதிர்பார்த்த விரைவுத் தொடக்கத்திற்கு முட்டுக் கட்டை போட்டது. தமீம் இக்பால் மற்றும் அனாமுல் ஹக் இருவரும் இணைந்து 15-வது ஓவர் வரை ஆடியும் ஸ்கோர் 50-ஐ எட்டவில்லை. 47 ரன்களையே எட்டியது தமீம் இக்பாலும் அவுட் ஆகியிருந்தார்.
3-வது ஓவரில் ஆப்கான் செய்த தவறு:
3-வது ஓவரை ஹமித் ஹசன் வீச, அந்த ஓவரின் 5-வது பந்தை கவர் டிரைவ் அடித்து பவுண்டரி அடித்தார். ஆனால் அடுத்த பந்து 145 கிமீ. வேகம். அடிக்க முடியாத பந்தை தமீம் ஆட முயல பந்து எட்ஜில் பட்டு கேட்ச் ஆனது. ஹமித் ஹசன் உடனடியாக அப்பீல் செய்தார். ஆனால் நடுவர் ஸ்டீவ் டேவிஸ் அவுட் தர மறுத்தார். ஆனால், ஆப்கான் அணியினர் டி.ஆர்.எஸ்.-ஐ பயன்படுத்தவில்லை. பெரும் தவறிழைத்தனர். பந்து கிளீன் எட்ஜ் என்று ரீப்ளேயில் தெரிந்தது. கடைசியில் டி.ஆர்.எஸ். கேட்கலாம் எனும்போது அதற்கான 15 வினாடிகள் கால அவகாசம் முடிந்தது என்று நடுவர்கள் அறிவுறுத்தினர்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான் மிகத் துல்லியமாக, நல்ல திசை மற்றும் லெந்த்தில் பந்தை எழுப்பியும், ஸ்விங்கும் செய்தார். இதனால் அவர் வீசிய முதல் 3 ஓவர்களில் 4 ரன்களே வந்தது. அவரை இன்னும் 2 ஓவர்கள் வீசச் செய்திருக்கலாம். ஆனால் கட் செய்யப்பட்டார்.
47 ரன்கள் எடுக்க தட்டுத் தடுமாறிய வங்கதேசம் அந்த ரன்னில் தமீம் இக்பால் (19) விக்கெட்டை இழந்தது. ஆப்கான் விக்கெட் கீப்பர் அப்சர் ஸசாய் இந்த கேட்சை அற்புதமாகப் பிடித்தார். இடது புறம் டைவ் அடித்து பிடித்தார். பிடிக்கும் போது விட்டுவிடுவார் என்ற ஐயம் ஏற்பட்டது ஆனால் இரு கைகளையும் அவர் அபாரமாக, சமயோசிதமாகப் பயன்படுத்தினார்.
55 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த அனாமுல் ஹக், மிர்வைஸ் அஷ்ரப் பந்தில் எல்.பி.ஆனார். ஆட்டத்தின் 25-வது ஓவரில் சவுமியா சர்க்கார் முதல் சிக்சரை அடித்தார். மேலேறி வந்து லாங் ஆனில் அந்த சிக்சரை அடித்தார். 15 ஓவர்களில் 47 ரன்களிருந்து 25-வது ஓவரில் 101/2 என்று ஆனது வங்கதேசம்.
25 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 28 ரன்கள் எடுத்த சவுமியா சர்க்கார். ரன் விகிதத்தை கூட்ட அடிக்க நினைத்து இடது கை வேக வீச்சாளர் ஷபூர் சத்ரான் பந்தை விட்டுவிட அது கால்காப்பைத் தாக்க எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.
அடுத்து இறங்கிய ஷாகிப் அல் ஹசன் முதல் பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார். வங்கதேசத்தின் முக்கிய வீரர் மஹ்முதுல்லா 46 பந்துகள் விளையாடி பவுண்டரி அடிக்க முடியாமல் 23 ரன்களில் வீழ்ந்தார். சத்ரான் இவரது விக்கெட்டையும் கைப்பற்றினார். 30 ஓவர்கள் முடிவில் 122/4 என்று இருந்தது.
ஆட்டத்தின் 33-வது ஓவரில் ஆப்கான் பவுலர் ஷென்வாரி பிட்சை சேதம் செய்ததால் தொடர்ந்து வீச அனுமதிக்கப்படவில்லை. இடையில் ஷாகிப் அல் ஹசனுக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பு வந்தது. ஆனால் சத்ரான் மிட் ஆஃபிலிருந்து அடித்த த்ரோ ஸ்டம்புக்கு அருகில் சென்றது.
முஷ்பிகுர் ரஹிம் 41 ரன்களில் இருந்த போது அப்தாப் ஆலம் பந்தில் எல்.பி.ஆனார். அது அவுட்தான், நடுவர் கொடுக்கவில்லை. இவர்களும் டி.ஆர்.எஸ்.ஐ பயன்படுத்தவில்லை. மீண்டும் தவறிழைத்தனர். இது நடந்த அடுத்த பந்தே முஷ்பிகுர் ஸ்கொயர்லெக்கில் அபாரமான சிக்சரை அடித்தார்.
ஆட்டத்தின் 45-வது ஓவரில் ஹமித் ஹசன் ஓவரில் ஒரு அபாரமான பவுண்டரி மற்றும் சிக்சரை அடித்து 51 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்த ஷாகிப் அல் ஹசன் பவுல்டு ஆனார். இந்தச் சதக்கூட்டணி நன்றாக அமைய வங்கதேசம் நல்ல இலக்கை எட்ட முனைந்தது. ஆனால் நல்ல பந்து வீச்சு, மோசமான பேட்டிங் ஒன்று சேர அடுத்த 5 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு இழந்தது வங்கதேசம். கடைசியில் 267 ரன்களையே எடுக்க முடிந்தது.
ஆப்கான் சரிவு:
பெரிய லட்சியத்துடன் களமிறங்கிய ஆப்கான் அணியின் தொடக்க வீரர்கள் ஜாவேத் அகமதி, அஃப்சர் ஸசாய், 7 பந்துகள் வீசப்பட்ட நிலையில் பெவிலியன் திரும்ப ஸ்டானிக்ஸாய் 3-வது ஓவரில் வெளியேற ஆப்கான் அணி 3/3 என்று ஆனது.
அதன் பிறகு நவ்ரோஸ் மங்கல் (27), சமியுல்லா ஷென்வாரி (42) இணைந்து ஸ்கோரை 65 ரன்களுக்கு உயர்த்த மங்கோல் அவுட் ஆனார். கேப்டன் மொகமது நபி, ஷென்வாரி இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 58 ரன்களைச் சேர்த்தனர். பின்வரிசை வீரர்கள் சோபிக்கவில்லை. 43-வது ஓவரில் 162 ரன்களுக்கு சுருண்டது ஆப்கான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT