Published : 24 Feb 2015 06:07 PM
Last Updated : 24 Feb 2015 06:07 PM
கான்பராவில் நடைபெற்ற உலகக் கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி ஜிம்பாப்வேயை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆட்டம் லேசான மழையால் பாதிக்கப்பட்டதால் ஜிம்பாப்வேக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 48 ஓவர்களில் 363 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜிம்பாப்வே இந்த இலக்கை நம்பிக்கையுடன் துரத்தியது. ஆனாலும் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்து கொண்டிருக்க அந்த அணி கடைசியில் 44.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சத நாயகர்கள் கெய்ல், சாமுயெல்ஸின் அதிர்ஷ்டம்
முன்னதாக மே.இ.தீவுகள் டாஸில் வென்று முதல் ஓவரின் 2-வது பந்தில் டிவைன் ஸ்மித் விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன் பிறகு பன்யங்கராவின் இதே முதல் ஓவரின் 4-வது பந்தில் கிறிஸ் கெய்ல் பேடில் நேராக வாங்கினார். நடுவர் நாட் அவுட் என்றார். ஆனால் ரிப்ளேயில் பந்து ஸ்டம்புகளைத் தாக்கும் போல்தான் தெரிந்தது. ஆனாலும் நாட் அவுட் தீர்ப்பே வென்றது. மிகவும் நெருக்கமான ஒரு அவுட் கோரலில் கெய்ல் தப்பித்தார். ஜிம்பாப்வே கடும் ஏமாற்றமடைந்தது.
ஆட்டத்தின் 17-வது ஓவரில் சிகந்தர் ரசா வீச 27 ரன்களில் இருந்த சாமுயெல்ஸ் தப்பினார். அந்த ஓவரில் 5 பந்துகளில் ரன் வரவில்லை, 6-வது பந்தை அவர் வைடாக வீசினார். அதனால் வீசப்பட்ட இன்னொரு 6-வது பந்தில் சாமுயெல்ஸ் நேராக பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்தார். அந்த எளிதான வாய்ப்பு தவற விடப்பட்டது.
அதன் பிறகு கெய்லும், சாமுயெல்ஸும் அவ்வப்போது ஆக்ரோஷம் காட்டி ஸ்கோரை 40-வது ஓவரில் 220/1 என்று உயர்த்தினர். கடைசி 10 ஓவர்களில் 152 ரன்கள் விளாசப்பட்டது. ஒருநாள் போட்டி, உலகக்கோப்பை சாதனைகள் சில முறியடிக்கப்பட்டன. மே.இ.தீவுகள் 372/2 என்று மிகப்பெரிய இலக்கை எட்டியது.
டக்வொர்த் முறைப்படி 48 ஓவர்களில் 363 வெற்றி இலக்கு
ஜிம்பாப்வே அணி மிகப்பெரிய இலக்கை ஓரளவுக்குத் தன்னம்பிக்கையுடனேயே விரட்டியது. தொடக்கத்தில் சிகந்தர் ரஸா நம்பிக்கை அளித்தார். 20 பந்துகளில் அவர் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து 8-வது ஓவரில் ஹோல்டர் பந்தில் அவுட் ஆனார். 8 ஓவர்களில் ஜிம்பாப்வே 46/3 என்று இருந்தது.
அதன் பிறகு பிரெண்டன் டெய்லர், சான் வில்லியம்ஸ் சிறப்பாக ஆடி சவால் அளித்தனர். இருவரும் இணைந்து 12 ஓவர்களில் 80 ரன்களை விளாசினர். டெய்லர் 48 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்து சாமுயெல்ஸ் பந்தில் ராம்தின்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரன்விகிதம் அப்போது முதல் 6 ரன்களுக்கு மேலேயே ஜிம்பாப்வேயினால் பராமரிக்கப்பட்டு வந்தது.
வில்லியம்ஸ் 61 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து ஹோல்டர் பந்தில் வெளியேறினார். இவரும், கிரெய்க் எர்வினும் இணைந்து 7 ஓவர்களில் 51 ரன்களைச் சேர்த்தனர்.
எர்வின் அதன் பிறகு அட்டகாசமான சில ஷாட்களை அடித்து மட்சிகென்யேரியுடன் (19) இணைந்து 6 ஓவர்களில் 49 ரன்களைச் சேர்த்தார். எர்வின் 41 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து கெய்ல் பந்தில் பவுல்டு ஆனார்.
33.4 ஓவர்களில் 226/6 என்று ஆன ஜிம்பாப்வே அதன் பிறகு ஆட ஆளில்லாமல் 44.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜிம்பாப்வேயின் ரன் விகிதம் 6.49 என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு நல்ல தன்னம்பிக்கையுடன் கூடிய விரட்டல்.
மே.இ,தீவு அணியில் டெய்லர், ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சாதனை நாயகன் கிறிஸ் கெய்ல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனும் கிறிஸ் கெய்லே.
பந்துவீச்சில் சோடை போனாலும் பேட்டிங்கில் தங்கள் அணி ஒரு அபாயகரமான அணியே என்பதை ஜிம்பாப்வே மீண்டும் ஒரு முறை அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT