Last Updated : 24 Feb, 2015 03:27 PM

 

Published : 24 Feb 2015 03:27 PM
Last Updated : 24 Feb 2015 03:27 PM

விமர்சகர்களைத் தவறென்று நிரூபித்த அஸ்வின், ஜடேஜா: விராட் கோலி கருத்து

அயல்நாட்டு ஆட்டக்களங்களில் அஸ்வின், மற்றும் ஜடேஜாவின் திறமைகளைக் குறைவாக மதிப்பிட்ட விமர்ச்கர்களின் கருத்துகளை தவறென்று இவர்கள் நிரூபித்துள்ளதாக விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுவரை, நடப்பு உலகக்கோப்பை போட்டியில் அஸ்வின், ஜடேஜா முறையே 4 மற்றும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். 36.2 ஓவர்கள் வீசி 175 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளனர். சிக்கன விகிதம் ஓவருக்கு 4.83.

இந்நிலையில் அணியின் துணை கேப்டன் விராட் கோலி இவர்கள் இருவரையும் ஆதரித்துக் கூறும்போது, “இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின் போதும் இவர்கள் இருவரும் இந்திய அணியின் முக்கிய வீச்சாளர்களாக திகழ்ந்தனர். ஜடேஜா சிறந்த வீச்சாளர் என்று தேர்வு செய்யப்பட்டார். அந்த நிலையில் ஸ்பின்னர்கள் இந்திய அணியின் சிறந்த வீச்சாளர்களாக இருப்பார்கள் என்று ஒருவரும் கருதவில்லை.

அப்போது முதல் விமர்சகர்கள் கருத்தை தவறென்று இருவரும் நிரூபித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் தற்போது சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

முதலில் விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற மனநிலையில் ஆட வேண்டும். அஸ்வின் அந்த மனநிலையில்தான் பாகிஸ்தானுக்கு எதிராக வீசினார். ஜடேஜா எப்போதும் தாக்குதல் குணமுள்ள வீச்சாளர்தான், பிட்சில் கொஞ்சம் உதவி இருந்தால் அவர் அபாயகரமான வீச்சாளராகத் திகழ்வார். இதனை சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது பார்த்தோம்.

ஆஸ்திரேலியாவில் மிக நீளமான பவுண்டரிகள், பக்கவாட்டிலும் நீளமான பவுண்டரிகள் எனவே கொஞ்சம் புத்தி சாதுரியத்துடன் வீசினால் பலன் நிச்சயம் உண்டு.

சில ஆண்டுகளாக அஸ்வின், ஜடேஜா நமது முக்கிய வீச்சாளர்களாக இருந்து வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் கூட இவர்கள் இருவரும் மோசமாக ஆடினார்கள் என்று கூற முடியாது.

இவர்கள் இருவரது பந்துவீச்சு கூட்டணி இந்திய வெற்றிக்கு மிக முக்கியம், இவர்களில் யார் ஆக்ரோஷம் காட்டுவது யார்? ஆக்ரோஷமாக வீசுவதற்கு எதிர்முனையில் உதவிகரமாக வீசப்போவது யார் என்பதை இவர்கள் இருவரும் முடிவெடுப்பது அவசியம்.

இந்த முடிவை எடுப்பதில் கேப்டன் தோனி எப்போதும் உதவி புரிவார். எனவே இவர்கள் இருவரும் மிக முக்கியமான உறுப்பினர்கள் என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக அஸ்வின், விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் வீசக்கூடியவர், அப்படி வீசும்போது அவரிடமிருந்து திறமைகள் வெளிப்படுகின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக அஸ்வின் பேட்ஸ்மென்களை ஆதிக்கம் செலுத்தினார். முதல் போட்டியில் அவர் வீசிய மெய்டன் ஓவர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது என்றால் அதுதான் உண்மை.

இதே மனநிலையில் அவர் உலகக்கோப்பை தொடர் முழுதும் வீசுவார் என்று எதிர்பார்க்கிறோம்.” இவ்வாறு கூறினார் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x