Last Updated : 17 Feb, 2015 12:47 PM

 

Published : 17 Feb 2015 12:47 PM
Last Updated : 17 Feb 2015 12:47 PM

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி: சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை

பாகிஸ்தானை விட தென் ஆப்பிரிக்க அணி “பலவிதங்களில் சிறந்தது” என்று சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியை எச்சரிக்கை செய்துள்ளார்.

இது குறித்து ஹெட்லைன்ஸ் டுடே-யில் சச்சின் கூறும்போது, “தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்கம் பலமாக அமைய வேண்டும். மேலும் ரன்கள் ஓடும் போது எச்சரிக்கை அவசியம்.

தென் ஆப்பிரிக்க ஃபீல்டிங்கில் சிங்கிள்கள் எடுப்பது அவ்வளவு எளிதல்ல. தென் ஆப்பிரிக்க பீல்டர்கள் மிக விரைவாக நகர்வார்கள். அவர்கள் த்ரோவும் மிகத் துல்லியமானது. பவுண்டரி அருகே அவர்கள் பல்வேறு வழிகளில் பீல்டிங்கை நிகழ்த்துவார்கள். பாகிஸ்தானை விடவும் இந்த விதங்களில் தென் ஆப்பிரிக்க அணி பலம் வாய்ந்தது.

தென் ஆப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெய்ன் மிகச்சிறந்த பவுலர். அவர் நம்பமுடியாத அளவுக்கு சில சமயங்களில் சிறப்பாக வீசக்கூடியவர். அவரை எப்படி விளையாட வேண்டும் என்பதை ஒருவரும் முன்கூட்டியே தீர்மானிக்கவியலாது. அந்தக் கணத்தில்தான் முடிவெடுக்க முடியும், மேலும் ஸ்டெய்னுக்கு மதிப்பளிப்பது அவசியம். தொடக்கத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும், அதே நேரத்தில் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரோஹித் சர்மா மீது நான் எந்த வித அழுத்தத்தையும் ஏற்படுத்த விரும்பவில்ல. அடுத்த போட்டியில் அவர் சரியாகி விடுவார் என்று நம்புகிறேன்.

உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் அணி முழுதும் சீராக தொடர்ந்து நன்றாக ஆடினால்தான் முடியும், ஓரிரு தனிநபர்கள் பற்றியதல்ல உலகக்கோப்பை என்பது.” என்று கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

வரும் ஞாயிறன்று மெல்போர்னில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய அணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x