Published : 24 Feb 2015 02:48 PM
Last Updated : 24 Feb 2015 02:48 PM
2019 உலகக்கோப்பை போட்டிகளுக்கு 10 டாப் அணிகள் மட்டுமே விளையாடுமாறு செய்யும் ஐசிசி திட்டத்தின் மீது பரவலான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் ஐசிசி நிர்வாகிகளின் மனநிலை பற்றி மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார். அசோசியேட் அணிகளுக்கான வாய்ப்புகள் ஏற்கெனவே குறைக்கப்பட்டு வரும் நிலையில் உலகக்கோப்பை, ஐசிசி போட்டிகளில் மட்டுமே அந்த அணிகள் ஆடி வருகின்றன.
தற்போது அதிலிருந்தும் இந்த வளரும் அணிகளை கழற்றி விடும் முடிவு குறித்து போர்ட்டர்ஃபீல்ட் கூறும்போது, "வெறும் டாப் 10 அணிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டால் அதனை உலகக்கோப்பை என்று அழைக்க முடியாது.
எப்போதும் நாங்கள் போட்டித் தொடர்களுக்கு வரும் போதெல்லாம் அணிகளின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி பேச்சு எழுவது வெறுப்பைக் கிளப்புகிறது. விளையாட்டு உலகில் கிரிக்கெட் மட்டுமே இப்படி நடத்தப்படுகிறது. ஐசிசி இவ்வாறுதான் விஷயங்களை அணுகுகிறது என்பது எங்களுக்கு ஏமாற்றத்தையும் வெறுப்பையும் அளிக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் முதன்மை நிலையில் உள்ள 8 அணிகளுக்கு எதிராக 9 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளோம். முதன்மை அணிகளுடன் ஆண்டுக்கு 2 போட்டிகள் என்பது எப்படி போதுமானதாக இருக்கும்? இதுதான் கிரிக்கெட்டை வளர்க்கும் முறையா? ஆட்டத்தைக் குறுக்கிக் கொண்டே போவதில் என்ன பயன்? கிரிக்கெட்டை விரிவு படுத்துவதுதான் அவசியம்.” என்றார்.
உலகக்கோப்பை போன்ற நிகழ்வுகள் ஸபான்சரக்ள், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் ஆகியோர்களது தேவைகளுக்காக குறைக்கப்பட்ட தொடராக அமையவேண்டியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த போர்ட்டர்ஃபீல்ட், “ஆண்டுக்கு 52 வாரங்கள் உள்ளன, இடையில் 4 ஆண்டுகள் உள்ளன. இதில் 6 வாரங்கள் ஒரு போட்டித் தொடர் நடப்பது குறுகிய காலம்தான். இதனை மேலும் குறுக்க என்ன இருக்கிறது?
இலங்கையை எடுத்துக் கொள்ளுங்கள் 20 ஆண்டுகளில் அந்த அணி உலகக்கோப்பைப் போட்டிகளை வென்றுள்ளதே. (1975 உ.கோப்பையிலிருந்து). நாங்களும் நன்றாக விளையாடி வருகிறோம், ஆப்கானிஸ்தான், இலங்கைக்கு எதிராக சிறப்பாக ஆடினர். ஸ்காட்லாந்தும் மோசமாக ஆடியது என்று கூற இடமில்லை. ஜிம்பாப்வேயிற்கு எதிராக யு.ஏ.இ. 285 ரன்களை எடுத்துள்ளனர். கிரெய்க் எர்வின் இல்லையென்றால் அது யு.ஏ.இ. வென்ற ஆட்டமாக மாறியிருக்கும்.” என்றார்.
பெரிய அணிகளுக்கு எதிராக இந்த அணிகளை விளையாட விடாமல், உலகக்கோப்பை போட்டிகளில் இந்த அணிகள் மோசமாக ஆடுகின்றன என்று கழற்றி விட முடிவெடுக்கும் ஐசிசி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT