Published : 12 Feb 2015 10:11 AM
Last Updated : 12 Feb 2015 10:11 AM
கிளார்க் பொருத்தமானவர்
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் நியமனம் தொடர்பாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை வகித்துச் செல்ல மைக்கேல் கிளார்க் மிகச் சரியான நபர். ஆனால், இத்தொடருக்குப் பிறகு ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பை அவர் விட்டுவிட வேண்டும்.
டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 2, 3 ஆண்டுகளுக்கு கிளார்க்கின் உடலும் மனமும் ஒத்துழைக்கும். எனவே, உலகக் கோப்பை போட்டி முடிந்ததற்குப் பின், ஸ்டீவன் ஸ்மித்துக்கு ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பை வழங்கலாம். கிளார்க் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நீடிக்கலாம்.
இந்தியாவுக்கு அதிர்ச்சியளிப்போம்
உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தொடர் தோல்வியைச் சந்தித்து வருவது குறித்து பாகிஸ்தான் வீரர் அப்ரிதி கூறியதாவது:
வரும் 15-ம் தேதி அடிலெய்டில் நடைபெறவுள்ள போட்டியில், இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியுற்று வரும் வரலாற்றை மாற்றும் தகுதி, மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு உள்ளது.
அப்போட்டியை மற்றுமொரு சாதாரண போட்டி என்ற அளவிலேயே அணுகுவோம். அப்போட்டியில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் அதிர்ச்சியளிக்கும்.
துணைக் கேப்டன் பட்லர்
இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ்பட்லர், உலகக் கோப்பை தொடரில் அணியின் துணைக் கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோ ரூட் என அனுபவம் மிக்க வீரர்கள் இருந்த போதும், கேப்டன் இயான் மோர்கனின் விருப்பத்தின்பேரில் ஜோஸ் பட்லர் துணைக் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகக் கோப்பை போட்டி தொடங்கும் வரும் 14-ம் தேதியன்று, நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது இங்கிலாந்து.
வசைபாடினால் கடும் நடவடிக்கை
உலகக்கோப்பை போட்டிகளின் போது, ஸ்லெட்ஜிங் எனப்படும் உசுப்பேற்றும் சொற்களைக் கூறினாலோ அல்லது சைகைகளைச் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சங்கம் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதல்முறை இத்தவறு செய்தால் அபராதமும், ஏற்கெனவே செய்திருந்து தண்டனை பெற்று மீண்டும் செய்தால் போட்டி யிலிருந்து இடை நீக்கமும் (சஸ்பெண்ட்) செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இல்லாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு 6 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது. இதுபோன்று வசைபாடுபவர்களுக்கு கால்பந்து போட்டிகளைப் போல சிவப்பு, மஞ்சள் அட்டை முறை கொண்டு வரப்பட வேண்டும் என நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் மார்டின் குரோ தெரிவித்துள்ளார். தான் இதுவரை பார்த்ததிலேயே வார்னர்தான் மிக மோசமான, சிறுபிள்ளைத் தனமான வீரர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லேப்டாப்கள் திருட்டு
நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள நெட்பால் அரங்கில் வைக்கப்பட்டிருந்த உலகக்கோப்பை தொடர்பான தகவல்கள் அடங்கிய 5 லேப்டாப்கள் திருடு போயின. அதில் சில தகவல்கள் இருந்தபோதும், அது கடவுச் சொற்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் எவ்வித இழப்புகளும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT