Published : 12 Jan 2015 09:14 AM
Last Updated : 12 Jan 2015 09:14 AM
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், பெடெனெயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா. 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதன் மூலம், சென்னை ஒபனில் அதிக முறை சாம்பியன் என்ற சாதனையைச் சொந்தமாக்கிக் கொண்டார் வாவ்ரிங்கா.
20-வது ஆண்டு சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடந்தது.
நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலக ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் 4-வது இடத்திலுள்ள ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவும், உலகத் தரவரிசையில் 156-வது இடத்திலுள்ள ஸ்லோவேனி யாவின் அல்ஜாஸ் பெடெனெயும் மோதினர்.
முன்னதாக சனிக்கிழமை நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் பெடெனெ, ஸ்பெயினின் பாடிஸ்டா ஆகுட்டை 3-6, 6-3, 7-6(8) என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இரண்டாவது அரையிறுதியில் வாவ்ரிங்கா, பெல்ஜியத்தின் டேவிட் கோபினை 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டியில் நுழைந் தார்.
நேர் செட்களில் வெற்றி
போட்டி தொடங்கியதிலிருந்தே வாவ்ரிங்கா ஆதிக்கம் செலுத் தினார். முதல் செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய வாவ்ரிங்கா, 2-வது செட்டை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி சாம்பியனானார். இப்போட்டி ஒரு மணி நேரம் 10 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. சாம்பியன் பட்டம் வென்ற வாவ்ரிங்காவுக்கு ரூ.45 லட்சம் ரொக்கப்பரிசும், 250 ஏடிபி புள்ளிகளும் வழங்கப்பட்டன.
இரண்டாமிடம் பிடித்த பெடெனெவுக்கு ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசும், 150 ஏடிபி புள்ளிகளும் வழங்கப்பட்டன.
4-வது முறையாக இறுதிப்போட்டியில்
வாவ்ரிங்கா சென்னை ஒபனின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவது இது நான்காவது முறையாகும். கடந்த 2010-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முதன் முறையாகத் தகுதி பெற்ற அவர் குரோசியாவின் மரின் சிலிச்சிடம் தோல்வியுற்றார். பின்னர், 2011 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பட்டத்தைக் கைப்பற்றினார். இம்முறையும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
இரட்டையர் போட்டி
ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ரஷ்யாவின் ரவென் கிளாசென், இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடியும், சீன தைபேயின் யென் சுன் லூ- பிரிட்டனின் ஜோனதன் மேரி ஜோடியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் லூ-மேரி ஜோடி வெற்றி பெற்றது. முதல் செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் லூ-மேரி ஜோடி எளிதில் கைப்பற்றியது. 2-வது செட்டில் பயஸ் ஜோடி கடும் போராட்டத்தை வெளிப்படுத்தியதால் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7-6(4) என்ற கணக்கில் வென்ற லூ-மேரி ஜோடி இரட்டையர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT