Last Updated : 24 Jan, 2015 02:34 PM

 

Published : 24 Jan 2015 02:34 PM
Last Updated : 24 Jan 2015 02:34 PM

துவண்டு போன இந்திய அணியை அச்சுறுத்த வருகிறார் மிட்செல் ஜான்சன்

திங்கட்கிழமையன்று முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று, சிட்னியில் மிட்செல் ஜான்சன் தனியாக வேகப்பந்து பயிற்சியில் ஈடுபட்டபோது பயிற்சியாளர் டேரன் லீ மேன் உட்பட அணித் தேர்வாளர்களும் அருகில் இருந்து அவரது உடல் தகுதி, வேகம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

3 வெற்றிகளுடன் இறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலிய அணி சிட்னியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் சில பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக பயிற்சியாளர் டேரன் லீ மேன் தெரிவித்தார்.

ஜான்சன் டெஸ்ட் தொடர் முழுதும் அவரது முழு வேகத்துடன் வீசவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் தனது முழுவேகத்திற்காக கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டார் என்று ஆஸ்திரேலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணி ஏற்கெனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் (ரோஹித் சர்மா தவிர) மற்ற வீரர்கள் திக்கித் திணறி வருகின்றனர். மேலும், இந்திய பந்துவீச்சு எந்த ஒரு பெரிய ஸ்கோரையும் கூட பாதுகாக்கத் திராணியற்றதாக இருக்கிறது.

3-ஆம் நிலையில் களமிறங்கி 5,000 ரன்களுக்கும் மேல் குவித்து பல போட்டிகளை வெற்றிபெற்றுத் தந்த விராட் கோலியை 4ஆம் நிலையில் களமிறக்கச்செய்யும் ‘கேப்டன் கூல்’அவர்களின் விசித்திர முடிவும் அவர் அதற்குத் தரும் விசித்திர விளக்கங்களும் ஏற்கெனவே அதன் விளைவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஜான்சன் வேறு இந்திய அணியை மேலும் துன்புறுத்த களமிறக்கப்படுகிறார் என்ற செய்தி, ஷிகர் தவன் உள்ளிட்ட வீரர்களுக்கு பெரிய பிரச்சினைதான்.

இதோடு மட்டுமல்லாமல் ஜார்ஜ் பெய்லி, டேவிட் வார்னர், அதிரடி ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆகியோரும் அணிக்குள் வரலாம் என்று டேரன் லீ மேன் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஜான்சன் தேர்வு பற்றி லீ மேன் கூறும்போது, “அணியில் விளையாடுவதற்கு நெருக்கமான வாய்ப்புகள் அவருக்கு உள்ளது. அவர் நன்றாக வீசிவருகிறார். நாளை முழு பயிற்சி மேற்கொள்கிறார், இதனால் தேர்வுக்கு தயாராக இருக்கிறார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x