Published : 01 Jan 2015 12:15 PM
Last Updated : 01 Jan 2015 12:15 PM
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி, கிரிக்கெட்டில் மட்டுமல்ல இதர துறையைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் முன்னுதார ணமாக திகழ்கிறார் என்று இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் டெஸ்ட் முடிந்தபிறகு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார் எம்எஸ் தோனி. இது தொடர்பாக இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறும்போது, “தோனியின் தலைமையில் நான் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். அவரால் செய்ய முடியாத ஒன்றை அடுத்தவர் செய்ய வேண்டும் என்று நினைக்கமாட்டார். குழப்பமில்லாத தலைவர். அணி வீரர்களுக்கு ஒரு முன்னுதார ணமாக இருப்பார். வெறும் வார்த்தைகளால் அல்ல, செயலால் அணியை வழிநடத்தியவர்.
மூத்த வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு இளைஞர்களைக் கொண்ட அணியை வழிநடத்தினார். ராஞ்சி போன்ற ஒரு சிறிய ஊரிலிருந்து கிளம்பி, இந்திய அணியின் கேப்டனாகி, மொத்தமாக 90 டெஸ்டுகளில் விளையாடியுள்ளார். இதனால் அவர் தலைமைப் பண்பின்மீது அனைவரும் அதிக மதிப்பு உண்டு. கிரிக்கெட்டில் மட்டுமல்ல இதர துறைகளில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கும் தோனி ஒரு முன்னுதாரணம்.
அவருடைய ஓய்வு அறிவிப்பு எதிர்பாராதது. டெஸ்ட் தொடரின் நடுவில் இந்த முடிவை எடுப்பார் என்று நினைக்கவில்லை. ஒருவேளை 3-வது டெஸ்டிலேயே இந்திய அணி தொடரை இழக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் கடைசி டெஸ்டில் தோனி விளையாடியிருப்பார். தொடரில் தோற்றுவிட்டதால் கோலி மற்றும் சாஹாவுக்கு ஒரு வாய்ப்பளித்து இந்திய டெஸ்ட் அணியை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறார்.
இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவர் தற்காப்பு உத்தியை கடைபிடிக்கவில்லை. நம்மிடம் சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் எப்போதும் தாக்குதல் பாணியில்தான் அணியை வழிநடத்துவார். ஆனால், வெளிநாடுகளில், கடந்த மூன்று, நான்கு வருடங்களில் இந்திய பவுலர்களால் 20 விக்கெட்டுகளை எடுப்பது கடினம் என்பதை உணர்ந்து தற்காப்பு உத்தியை கடைபிடித்தார்” என்றார். -
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT