Published : 30 Jan 2015 09:35 AM
Last Updated : 30 Jan 2015 09:35 AM
முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் நுழைவது இந்தியாவா அல்லது இங்கிலாந்தா என்பதை நிர்ணயிக்கும் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எளிதாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். அதே நேரத்தில் மழையால் போட்டி தடைபட்டால் அல்லது டையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கி லாந்து இறுதி ஆட்டத்தை எட்டும்.
ஆஸ்திரேலியாவில் நடை பெற்று வரும் முத்தரப்பு தொடரில் இந்திய அணி இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட வெற்றி பெற வில்லை. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவை ஒருமுறை படு தோல்வியடையச் செய்துள்ளது.
ஆஸ்திரேலிய 3 வெற்றிகளைப் பெற்று 15 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து 1 வெற்றி, 2 தோல்வி களுடன் 5 புள்ளிகள் பெற்று உள்ளது. இந்திய அணி இரண்டு ஆட்டத்தில் தோற்றது. ஒர் ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. மொத்தம் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
திணறும் பேட்ஸ்மேன்கள்
ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 153 ரன்களில் சுருண்டது. எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் எழுச்சியுடன் விளையாடினால் மட்டுமே இப்போட்டியில் வெல்ல முடியும்.
காயமடைந்துள்ள தொடக்க வீரர் ரோஹித் சர்மா இந்த ஆட்டத்திலும் களமிறங்குவது சந்தேகம்தான். அவருக்கு பதிலாக ராஹானே தொடக்க வீரராக களமிறங்குவார் என்று தெரிகிறது.
பின்வரிசையில் ஸ்டூவர்ட் பின்னி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது வருகை இந்திய அணிக்கு பலம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முக்கியமாக ஷீகர் தவண் மிகவும் மோசமாக விளையாடி வருவது பிரச்சினையாக அமைந்துள்ளது. ரோஹித் களமிறங்கினால் தவண் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய விராட் கோலியால் ஒருநாள் போட்டியில் இதுவரை பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. ராயுடு, ரெய்னா, கேப்டன் தோனி உள்ளிட்டோரும் இத்தொடரில் இதுவரை பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
பந்துவீச்சில் அக் ஷர் படேல், முகமது சமி, இஷாந்த் சர்மா ஆகியோரை இந்திய அணி பெருமளவில் நம்பியுள்ளது.
மிரட்டும் மைதானம்
பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும். பந்துகள் பவுன்ஸ் ஆகும் என்பதால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஸ்டீவன் ஃபின், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளிப்பார்கள். பேட்டிங்கிலும் இங்கிலாந்து அணி வலுவாகவே உள்ளது. பெல், கேப்டன் மோர்கன், மொயின் அலி உள்ளிட்டோர் கடந்த போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளனர்.
எனவே பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து நிலைகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால்தான் வெற்றியை நெருங்க முடியும். இந்திய அணி அடுத்து உலகக் கோப்பையில் விளையாட உள்ள நிலையில் இப்போட்டியில் வெற்றி பெறுவது கூடுதல் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும்.
கேப்டனின் கருத்து
இந்த போட்டி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் தோனி, இந்திய பேட்ஸ் மேன்கள் கடைசி 10 ஓவர்களில் அதிக ரன் குவிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விராட் கோலியை 3-வது இடத்துக்கு பதிலாக 4-வது பேட்ஸ்மேனாக களமிறக்கி வருவதில் தவறு ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT