Last Updated : 17 Jan, 2015 08:31 PM

 

Published : 17 Jan 2015 08:31 PM
Last Updated : 17 Jan 2015 08:31 PM

உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும்: இன்சமாம் உல் ஹக் நம்பிக்கை

வரும் உலகக்கோப்பையில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தி வரலாறு படைக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடிலெய்டில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதில்லை. அதனை இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மாற்றியமைக்கும் என்கிறார் இன்சமாம்.

"என்னுடைய கிரிக்கெட் வாழ்நாள் முழுதும் இந்திய அணியை பல போட்டிகளில் வீழ்த்தியிருக்கிறோம், ஆனால், ஏதோ காரணங்களினால் உலகக்கோப்பை போட்டிகளில் அவர்களை வீழ்த்த முடியாமல் போயுள்ளது. இது எனக்கு ஒரு பெரிய ஏமாற்றமாகவே உள்ளது.

இந்த பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தும் என்று நான் நம்புகிறேன்.

உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவது என்ற சவால் வித்தியாசமானது. ஆனால், 1992 உலகக் கோப்பையின் போது கேப்டன் இம்ரான் கானின் வழிகாட்டுதலின் படி நாங்கள் அழுத்தங்களை சிறப்பாக வெற்றி கண்டோம்.

இந்த உலகக் கோப்பையில் சயீத் அஜ்மல் விளையாடுவாரா என்பது தெரியவில்லை, ஆனால் 1992 உலகக் கோப்பை போட்டிகளின் போதும் வக்கார் யூனிஸ் ஆடமுடியாமல் போனது. ஆனால் இம்ரானின் கேப்டன்சியில் மற்றவர்கள் அவரது இடத்தை நிரப்பினர். இதுதான் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

1996 உலகக் கோப்பை காலிறுதியிலும் பிறகு 2003ஆம் ஆண்டு செஞ்சூரியன் மைதானத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது இன்னமும் கூட நெஞ்சைப் பிசைகிறது. ஆனால், தற்போதைய பாகிஸ்தான் அணி நிலைமையை சரிசெய்யும் என்றே தெரிகிறது.

இரு அணிகளிடத்திலும் பலம், பலவீனம் இரண்டு இருப்பதால், விறுவிறுப்பான, பதட்டமான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.” இவ்வாறு கூறினார் இன்சமாம்.

லாகூரில் இன்சமாம் பெயரில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் அகாதமியின் அறிமுக விழாவில் அவர் கலந்து கொண்டு இவ்வாறு பேசினார்.

1996 உலகக் கோப்பை காலிறுதியில் அஜய் ஜடேஜாவின் அதிரடி ஆட்டம் பாகிஸ்தானிடமிருந்து ஆட்டத்தை பறித்தது. மேலும் இலக்கைத் துரத்திய போது பாகிஸ்தான் தொடக்க வீரரான அமீர் சொஹைல், சாதுவான இந்திய வேகப்பந்து வீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத்தின் கோபத்தைச் சீண்டினார். உன்னை எங்கு போட்டாலும் அடிப்பேன் என்பது போன்ற செய்கையை அவர் செய்தார். அடுத்த பந்தே பவுல்டு ஆனார். அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து பாகிஸ்தான் தோல்வி தழுவியது.

2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை கதை வேறு, சச்சின் தன் வாழ்நாளின் சிறந்த உலகக் கோப்பை இன்னிங்ஸை ஆடி விட்டார் என்ன செய்வது? அவர் பாகிஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்தார். 274 ரன்கள் இலக்கு என்பது முதல் 10 ஓவர்கள் அதிரடியிலேயே 88 ரன்கள் என்று ஆட்டம் ஒன்றுமில்லாமல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்தப் போட்டியில்தான் சச்சின் 12,000 ஒருநாள் போட்டி ரன்களைக் கடந்து சாதனை படைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x