Published : 01 Jan 2015 02:34 PM
Last Updated : 01 Jan 2015 02:34 PM
தோனியின் ஓய்வு பற்றியும் அவரது கிரிக்கெட் பற்றியும் கூறிய ஆஸி.விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின், கோலி பற்றிய கேள்விக்கு தவிர்ப்பு மனோபாவத்தில் பதில் அளித்தார்.
பிராட் ஹேடின் கூறியதாவது: “தோனி கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு உண்மையான ஜெண்டில்மேன். தோனியிடம் மிகப்பெரிய விஷயம் என்னவெனில் அவரது பொறுமை. ஆட்டம் எந்ததிசை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றி கவலைப்படமாட்டார். என்ன சூழ்நிலையிலும் ஒரேமாதிரியான தலைமை உத்தி மிக்கவர். இதனால்தான் அவரால் இவ்வளவு போட்டிகளில் 3 வடிவங்களிலும் கேப்டனாக் நீடிக்க முடிந்துள்ளது.
அவர் ஓய்வு அறிவித்தவுடன் நான் ஆச்சரியமடைந்தேன். இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய சேவகர் தோனி. அவர் சூழ்நிலைகளைக் கையாண்ட விதம், மற்றும் அவரது அமைதியான அணுகுமுறை ஆகியவற்றால் இந்திய கிரிக்கெட் அணியை தலைமை வகிப்பது என்ற மிகமிகக் கடினமான ஒரு பணியை அவர் செவ்வனே செய்துள்ளார் என்றே நான் கருதுகிறேன்.
அவருக்கு எதிராக விளையாடுவது ஒரு பெரிய விஷயம். அவர் கிரிக்கெட் ஆட்டத்தின் உண்மையான ஜெண்டில்மேன். அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிலையில் இருந்ததை விட இந்திய அணியை நல்ல நிலையில் விட்டுச் சென்றுள்ளார் என்றே நான் கருதுகிறேன்” என்றார்.
தோனிக்கு அடுத்ததாக சிட்னியில் கோலி கேப்டன் பொறுப்பை எடுத்துக் கொள்வது மற்றும் ஆஸ்திரேலிய அணியினரை அவர்களுக்கு நிகராக வார்த்தைகளிலும் சரி பேட்டிங்கிலும் சரி ஆக்ரோஷம் காட்டிவருவது பற்றி ஹேடினிடம் கேட்ட போது, அதாவது கோலிக்கு என்று பிரத்யேகமாக ஏதாவது உத்திகளை வகுப்பீர்களா என்ற கேள்விக்கு ஹேடின் சற்றே தவிர்ப்பு மனோபாவத்துடன், “நான் கோலியப் பற்றி பேச இங்கு வரவில்லை” என்றார்.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஹேடின் இறங்கும்போது கோலி சில வார்த்தைகளை அவரை நோக்கி பிரயோகித்தார். டேவிட் வார்னர் கூட அதனை கண்டித்திருந்தார்.
மீண்டும் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் விராட் கோலி களமிறங்கி ஆடிக் கொண்டிருந்த போது பிராட் ஹேடின் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் கோலியை நோக்கி “எல்லாம் உன்னைப்பற்றித்தான், எல்லாம் உன்னைப்பற்றித்தான்” என்று கேலி செய்தனர்.
ஏனெனில் ஆஸ்திரேலிய வீரர்கள் எது பேசினாலும் அது தன்னை நோக்கியே என்றவாறு கோலி எல்லாவற்றுக்கும் பதில் கூறியதே இத்தகைய கேலிப்பேச்சுக்கு வழி வகுத்தது. ஆனால் கோலி அன்று நடுவரிடம் ஏதோ இதுபற்றி பேசப்போக ஷேன் வாட்சன் உடனே புகுந்து “இது தவறு கோலி’ என்று கூறினார்.
இவையெல்லாம் சானல் 9 ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகக் கேட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து “கோலியை பற்றி நான் இங்கு பேசவரவில்லை” என்று ஆஸி. விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT