Published : 05 Jan 2015 12:19 PM
Last Updated : 05 Jan 2015 12:19 PM
20-வது ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. ஒற்றையர் பிரிவு போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் யென் சுன் லூவை சந்திக்கிறார்.
ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. 11-ம் தேதி நிறைவடைகிறது.
நடப்பு சாம்பியனும் சர்வதேச தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, இந்தமுறையும் ஏர்செல்-சென்னை ஓபன் போட்டியில் கலந்துகொள்வதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்றமுறை சென்னை ஓபன் போட்டியை வென்றபிறகு முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியை (ஆஸ்திரேலிய ஓபன்) வென்றார் வாவ்ரிங்கா. அதனால் அவர் மீண்டும் இந்தப் போட்டியை வெல்ல மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்.
ஒற்றையர் பிரிவில் வாவ்ரிங்கா, பெலிசியானோ லோபஸ், ராபர்டோ பாடிஸ்டா அகட், கில்லர்மோ கார்சியா லோபஸ், மார்செல் கிரானோலர்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். இவர்களில், வாவ்ரிங்கா, லோபஸ், பாடிஸ்டா அகட், டேவிட் காஃபின் போன்ற வீரர்களுக்கு முதல் சுற்றில் ‘பை’ கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் நேரடியாக 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.
இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், தரவரிசையில் 38-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் யென் சுன் லூவை சந்திக்கிறார். ராம்குமார் ராமநாதன், தரவரிசையில் 93-வது இடத்தில் உள்ள ஜப்பானின் தட்சுமா இடோவை எதிர்கொள்கிறார்.
இரட்டையர் பிரிவு போட்டியில் முன்னணி வீரர்கள் பங்கேற்பதால் அந்தப் போட்டி, ஒற்றையர் பிரிவு போட்டியைவிட அதிக சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் சுற்றில் மகேஷ் பூபதி- சாகேத் மைனேனி ஜோடி, கொலம்பியாவின் அலெஜாண் ட்ரோ ஃபலா - கான்ஸலஸ் ஜோடி யை சந்திக்கிறது. ராம் பாலாஜி - ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, சன் லூ, ஜோனதன் மேரே ஜோடியை எதிர்கொள்கிறது. இரட்டையர் பிரிவில் தென் ஆப்பிரிக்காவின் ரவென் கிளாசனுடன் இணைந்து களமிறங்குகிறார் லியாண்டர் பயஸ்.
தகுதிச் சுற்றுப் போட்டி
நேற்று நடந்த ஒற்றையர் தகுதிச்சுற்று போட்டியின் 2-வது சுற்றில் விஜய் சங்கர் பிரசாத், வினாயக், சசி குமார் முகுந்த் ஆகியோர் வெற்றி பெற்றார்கள். விஜய் சங்கர், யுகி பாம்ப்ரியை 1-6, 7-6(3), 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT