Published : 23 Jan 2015 09:43 AM
Last Updated : 23 Jan 2015 09:43 AM

1979 உலகக் கோப்பை.. காலிங்ஸ், ரிச்சர்ட்ஸ் ஆடிய தாண்டவம்

இறுதிப் போட்டி லார்ட்ஸில் மே.இ.தீவுகள் இங்கிலாந்து அணிகளுக்கிடையே 25,000 ரசிகர்கள் முன்னிலையில் ஜூன் 23, 1979 அன்று நடந்தது.

இங்கிலாந்து கேப்டன் மைக் பிரியர்லி எடுத்த எடுப்பில் ஒரு தவறு செய்தார். டாஸ் வென்ற அவர் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தார். மே.இ.தீவுகளின் மட்டையாளர்களின் அபார ஃபார்மைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களை பேட் செய்ய அழைத்தார். இந்த முடிவு இங்கிலாந்துக்கு எதிராக முடியும் என்று ஒருவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இங்கிலாந்தின் அபாய வீச்சாளர் பாப் வில்லிஸ் காயம் காரணமாக இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனதும் இங்கிலாந்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. லார்கின்ஸ் என்ற கூடுதல் மட்டையாளரைச் சேர்த்ததால் பாய்காட், கூச், லார்கின்ஸ் ஆகியோரையும் பந்து வீச்சாளர்களாகப் பயன்படுத்த நேரிட்டது. இவர்கள் போட்ட 12 ஓவர்களில் மே.இ. தீவு மட்டையாளர்கள் 86 ரன்களைக் கதறக் கதறக் கறந்தார்கள்.

கார்டன் கிரீனிட்ஜ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ராண்டலின் அபாரமான பீல்டிங் மற்றும் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். மிட்விக்கெட்டில் பந்தை சட்டென பீல்ட் செய்த அவர், அரைக் கணமும் தாமதிக்காமல் அப்படியே பவுலர் முனையில் இருந்த ஸ்டெம்பைப் பார்த்துப் பந்தை எறிந்தார். கிரீனிட்ஜ் கோட்டைத் தொடுவதற்குள் குச்சிகள் சரிந்தன. ஹெய்ன்ஸ் 20 ரன்களில் ஓல்டின் ஸ்லிப் கேட்சிற்கு ஹெண்ட்ரிக்சிடம் அவுட் ஆனார்.

ஆல்வின் காளிச்சரணின் ஸ்டெம்பை லெக் ஸ்டம்ப் திசையில் பந்து வீசிச் சாய்த்தார் ஹெண்ட்ரிக்ஸ். கிளைவ் லாய்டும் கிறிஸ் ஓல்டின் அபாரமான டைவிங் கேட்சிற்கு வெளியேற மே.இ.தீவுகளின் இன்னிங்ஸ் 99/4 என்று ஆட்டம் கண்டது.

அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. வேளை வரும்போது வீரன் வெளிப்படுவான் என்பார் களே அது நடந்தது. கிரிக்கெட் வட்டாரத்தில் புழங்கிவரும் சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாக மாறிய ஆட்டம் அரங்கேறியது. விவ் ரிச்சர்ட்ஸ், காலின்ஸ் கிங் கூட்டணி இங்கிலாந்தின் பந்து வீச்சைச் சிதற அடித்தார்கள். ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஆட்டம் அது.

துணிச்சலான ஹிட்டர் கிங். எதைப் பற்றியும் அவர் கவலைப் படுவதாக இல்லை. ரிச்சர்ட்ஸும் அவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 139 ரன்களில் 86 ரன்களை கிங் மட்டுமே எடுத்தார். 66 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சர்களை அவர் விளாசியிருந்தார்.

அப்போதெல்லாம் பீல்டிங் கட்டுப்பாடுகள் இல்லை. லெக் திசையில் பந்து போனாலே வைட் என்னும் விதியும் இல்லை. எகிறு பந்துகளுக்கான கட்டுப்பாடும் இல்லை. அந்த விதிமுறைகளுக்குட்பட்டு கிங்கும் ரிச்சர்ட்ஸும் ஆடிய ஆட்டம் கிரிக்கெட்டின் மறக்க முடியாத காவியங்களில் ஒன்றாக மாறியதில் ஆச்சரியம் இல்லை.

அதிரடிக்குப் பேர்போன ரிச்சர்ட்ஸ் அன்று கிங்குக்கு வழிவிட்டு அடக்கி வாசித்தார். கிங் ஆட்டமிழந்த பிறகே ரிச்சர்ட்ஸ் தனது சதத்தை 52-வது ஓவரில் எடுத்து முடித்தார். பிறகு அதிரடியைத் தொடர்ந்த ரிச்சர்ட்ஸ் 157 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 138 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மே.இ.தீவுகள் 60 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்தைச் சாய்த்த கார்னர்

தொடக்கத்தில் பாய்காட், பிரியர்லி நிதானமாகத் தொடங்கி 2 மணி நேரம் தாக்குதல் பவுலிங் கைச் சமாளித்தனர். பாய்காட் அநியாயத்துக்கு நிதானமாக ஆடினார். இரட்டை இலக்கத்தை எட்டவே 17 ஓவர்கள் எடுத்துக் கொண்டார். பிரியர்லியும் பாய் காட்டும் இணைந்து 38 ஓவர்களில் 129 ரன்களைச் சேர்த்தனர்

(பிரியர்லி 64, பாய்காட் 57). இருவரையும் மைக்கேல் ஹோல்டிங் வீழ்த்தினார்.

இப்போது கடைசி 22 ஓவர்களில் 158 ரன்கள் தேவை என்ற நிலை. கூச் (32 ரன்கள், 28 பந்துகள் 4 பவுண்டரிகள்), ராண்டல் (15) கொஞ்சம் தாக்குதல் ஆட்டம் ஆட முயன்றனர். ஆனால் மாடியிலிருந்து வீசுவது போன்ற உயரத்திலிருந்து வீசும் ஜொயல் கார்னர் 11 பந்துகளில் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் இருமுறை அவர் ஹாட்ரிக் வாய்ப்பைப் பெற்றார்.

38-வது ஓவரில் 129/1 என்ற நிலையிலிருந்த இங்கிலாந்து, 51-வது ஓவரில் 194 ரன்களுக்குச் சுருண்டு, உலகக் கோப்பையை நழுவ விட்டது. இன்று வரை அந்த அணிக்குச் சாம்பியனாகும் வாய்ப்பு வரவேயில்லை. 1984-ஆம் ஆண்டு டெஸ்ட் தகுதி பெற்ற இலங்கை அணிகூட உலகக் கோப்பையை வென்றுவிட்டது. கிரிக்கெட்டின் தொட்டிலான இங்கிலாந்தால் இன்றும் அது முடியவில்லை. 1987, 1992 என்று வாய்ப்புகள் வந்தும் இங்கிலாந்து கோப்பையைக் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்தைக் கவிழ்த்த பாய்காட்!

தங்கள் அணி வெற்றிக்கான இலக்கை (287) எட்டவிடாமல் செய்ததில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களான ஜெஃப் பாய்காட் மற்றும் மைக் பிரியர்லி ஆகியோரின் பங்களிப்பு மிக அதிகம்.

விவ் ரிச்சர்ட்ஸ் மகத்தான மட்டையாளர். ஆனால் பந்து வீச்சில் சூரப்புலி அல்ல. அவரது மென்மையான ஆஃப் ஸ்பின் பந்தைக்கூட பாய்காட்டும், பிரியர்லியும் லொட்டு வைத்து ஆடி இங்கிலாந்தின் பதற்றத்தை அதிகரித்தனர்.

பாய்காட் தேநீர் இடைவேளைக்குப் பிறகு விவ் ரிச்சர்ட்ஸ் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று கிளைவ் லாய்டிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் லாய்ட் அதனைத் தவறவிட்டார். ஏற்கெனவே மற்றொரு மந்த ஆட்டக்காரரான பிரியர் லிக்கும் ஒரு கேட்சை அவர் விட்டிருந்தார். லாய்ட் அபாரமான பீல்டர். அவர் வேண்டுமென்றே இவர்கள் கேட்சுகளைத் தவறவிட்டார் என்று சொல்லப்பட்டது. இவர்களுக்குப் பிறகு கூச், ராண்டல், போத்தம் வந்து அடித்து ஆடத் தொடங்கி விட்டால்…? எனவேதான் லாய்ட் கேட்சை விட்டார் என்பதாகப் பேசப்பட்டது.

“அவர்கள் இருவரும் ஆடுவதை நாள் முழுவதும் பார்க்கவே விரும்பினேன். ஏனென்றால் ஒவ்வொரு ஓவரையும் அவர்கள் கடக்கக் கடக்க இங்கிலாந்து சவப்பெட்டியின் மீது ஒவ்வொரு ஆணியாக அடிக்கப்படும் என்பது எனக்குத் தெரியும்” என்று போட்டி முடிந்த பிறகு சொன்ன லாயிட், “வேண்டுமென்றே நான் கேட்சை விட்டதாகப் பலரும் நினைத்தனர். அது உண்மையல்ல என்றாலும் அது ஒரு மோசமான உத்தி என்று சொல்வதற்கிடமில்லை” என்று முத்தாய்ப்பு வைத்தார்.

ரிச்சர்ட்ஸ் கண்டுபிடித்த ஷாட்

கம்பீரமும் நளினமும் பொருந்திய மட்டையாளர் விவியன் ரிச்சர்ட்ஸின் ஆட்டத்தைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சி. மே.இ.தீவுகள் இன்னிங்ஸில் கடைசி வரை நின்ற ரிச்சர்ட்ஸ் 132 ரன்களில் இருந்த போது 60-வது ஓவரை மைக் ஹெண்ட்ரிக் வீசினார். கள வியூகத்தில் கட்டுப்பாடுகள் இல்லாததால் அனைவரும் எல்லைக் கோட்டில் நிறுத்தப்பட்டனர்.

ஹெண்ட்ரிக் ஆஃப் திசையில் பந்து வீசினார். ஆஃப் திசையில் அதிகத் தடுப்பாளர்கள் இருந்தார்கள். ஸ்டெம்பை விட்டு ஆஃப் திசையில் நன்றாக நகர்ந்து வந்த ரிச்சர்ட்ஸ், பந்த லெக் திசையில் வீசப்பட்ட பந்தாக மாற்றிக்கொண்டார். ஸ்கொயர் லெக் திசையில் ஸ்டைலாக ஃபிளிக் செய்தார். பந்து எல்லைக் கோட்டைத் தாண்டிப் பறந்தது. அன்றுவரை யாரும் அப்படி ஒரு ஷாட்டை அடித்ததில்லை. பிறகு 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவின் யாஷ்பால் சர்மா அதேபோன்ற ஷாட் ஒன்றை ஆடி சிக்சர் அடித்தார்.

(நாளை… வரலாறு படைத்த இந்தியா)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x