Published : 12 Jan 2015 05:51 PM
Last Updated : 12 Jan 2015 05:51 PM
மே.இ.தீவுகள் உலகக்கோப்பை அணியில் டிவைன் பிராவோ, பொலார்ட் தேர்வு செய்யப்படாதது பழிவாங்கும், கேலிக்குரிய செயல் என்று அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கடுமையாக சாடியுள்ளார்.
"அந்த இரு வீர்ர்களை எப்படி தேர்வு செய்யாமல் இருக்க முடியும்? என்னைப் பொறுத்தவரையில் இது பழிவாங்கும் செயல், பலிகடாக்களாக்கும் செயல், இது கேலிக்குரியது, இழிவானது. உண்மையில் இது என்னை மிகவும் காயப்படுத்துகிறது.
நேர்மையாக் கூற வேண்டுமெனில் என்னை இந்த முடிவு தூக்கி எறிந்து விட்டது. நம்மால் பேச மட்டுமே முடியும், நாம் நம் உணர்வுகளை வெளிப்படுத்தலாம், அதைத்தான் இத்தருணத்தில் நான் செய்து கொண்டிருக்கிறேன். இது மிகவும் வருந்தத்தக்க செய்தி.
அவர்களுடன்தான் எங்கள் அணி ஒரு பெரிய பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தது. இந்த அணி பலமானது அல்ல. 2 பெரிய வீரர்களை இழப்பது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சிறந்த ஆல்ரவுண்டர்கள், சிறந்த பீல்டர்கள். இதன் பின்னணியில் என்ன உள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த அணித்தேர்வு கேலிக்குரியது என்றே நான் கருதுகிறேன்.
எங்கள் கிரிக்கெட் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இத்தகைய நிலை வருந்தத்தக்கது. டி20 கிரிக்கெட் தொடரை பொலார்ட், பிராவோவுக்காக வென்றோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறென்.
நேர்மையாகக் கூற வேண்டுமெனில் பிராவோ என்னிடம் கூறியது என்னவெனில், அடுத்த உலகக் கோப்பைக்காக அணியை மறுகட்டுமானம் செய்ய இந்த உலகக் கோப்பைக்கு இந்த அணியைத் தேர்வு செய்ததாகக் கூறினார். இதன் மூலம் அவர்கள் தெரிவிக்கும் செய்தி என்னவெனில்: இந்த உலகக்கோப்பையை நாங்கள் வெல்லப்போவதில்லை..அதனால் அடுத்த உலகக்கோப்பைக்கு அணியை உருவாக்குகிறோம்... இது உண்மையில் கேலிக்குரியதாகும்.”
இவ்வாறு கூறினார் கிறிஸ் கெய்ல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT