Published : 16 Jan 2015 04:33 PM
Last Updated : 16 Jan 2015 04:33 PM
முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வெற்றிக்குத் தேவையான 235 ரன்கள் இலக்கை 40 ஓவர்களில் எட்டியதால் ஆஸ்திரேலிய அணி போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற்றது.
டேவிட் வார்னர் 115 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தபடியாக ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே அதிகபட்சமாக 37 ரன்களை எடுத்தார்.
ஏரோன் பின்ச் 15 ரன்களிலும் வாட்சன் 16 ரன்களிலும் ஜார்ஜ் பெய்லி 10 ரன்களிலும் ஹேடின் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் அவசர கதியில் 4 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது. ஆனாலும் போனஸ் புள்ளிகளுடன் வெற்றி பெற முடிந்தது.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குக் கைப்பற்றினார். ஜோர்டான், மொயீன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். பிராட் ஹேடின் பொபாராவிடம் ரன் அவுட் ஆனார்.
ஆஸ்திரேலிய அணிக்கு 5 புள்ளிகள் கிடைத்துள்ளது.
இங்கிலாந்து எடுத்த 234 ரன்கள் என்பது இந்த சிட்னி பிட்சிற்கு எந்த நிலையிலும் போதாது. ரன்களும் போதவில்லை. இங்கிலாந்தின் பவுலிங்கும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஒன்று வைட் ஆஃப் ஸ்டம்பில் வீசினர் அல்லது லெக் திசையில் வீசி வார்னருக்கு சிலபல எளிதான பவுண்டரிகளை கொடுத்தனர். அவர் இருக்கும் பார்முக்கு அத்தனை பரிசுகளையும் பவுண்டரிகளாக மாற்றினார்.
6-வது ஓவரில் ஸ்டீவ் ஃபின் தன் பந்து வீச்சில் ஏரோன் பின்ச்சிற்கு தானே கேட்ச் ஒன்றைக் கோட்டைவிட்டார். ஆனால் பின்ச் நீண்ட நேரம் நீடிக்கவில்லை அவர் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து வோக்ஸ் பந்தை பேக்ஃபுட் பன்ச் ஆட முயன்று பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு ஆட்டமிழந்தார்.
வார்னர் தளர்வான ஃபின் பந்து வீச்சை நன்றாகப் பயன்படுத்தி விளாச, ஃபின் 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஒவ்வொரு பவுலரும் வார்னரின் பலத்திற்குப் பந்து வீசினர். அவரை அசவுகரியப் படுத்தவே இல்லை. தொடக்கத்திலேயே மொயீன் அலியின் ஆஃப் ஸ்பின்னை வார்னரை சந்திக்க வைத்திருக்கலாம். ஆனால் எந்த ஒரு புதிய முயற்சியையும் இங்கிலாந்து கேப்டன் செய்யவில்லை.
16 ரன்கள் எடுத்த வாட்சன், கிறிஸ் ஜோர்டான் வீசிய ஷாட் பிட்ச் பந்தை எங்கு வேண்டுமானாலும் அடித்திருக்கலாம் ஆனால் மிட்விக்கெட்டில் அடிக்க பந்து உயரே எழும்ப வோக்ஸ் அதனை சில அடிதூரம் ஓடிப் பிடித்தார்.
ஸ்டூவர் பிராட் ஓவர்க்கு 7 ரன்கள் வீதம் கொடுத்து வந்தார். கடைசி வரையில் அவர் 7 ஓவர்களை வீசி ஓவருக்கு 7 ரன் விகிதம் என்ற அடிப்படையில் ரன்களை விட்டுக் கொடுத்து வந்தார். அவரது பந்து வீச்சு இன்று எதிர்பார்ப்பிற்கு இணங்க இல்லை என்பதே இங்கிலாந்தின் ஒரு பெரிய சங்கடம். 8 பவுண்டரிகளுடன் 48 பந்துகளில் வார்னர் அரை சதம் எடுத்தார்.
ஸ்மித் களமிறங்கி அவரது டெஸ்ட் ஃபார்மை தொடர்ந்தார். மொயீன் அலியை இறங்கி வந்து சிக்ஸர் அடித்தார். 47 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சரருடன் 37 ரன்கள் அடித்த அவர் மொயீன் அலி பந்தை இன்சைட் அவுட் ஷாட் ஆட முயன்று பந்தைக் கோட்டைவிட்டு பவுல்டு ஆனார்.
34-வது ஓவரில் வார்னர் மீண்டும் மொயீன் அலி வீசிய லெக் திசைப் பந்தை பவுண்டரி அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3-வது சதத்தை எடுத்து முடித்த்தார்.
பவர் பிளேயில் அதன் பிறகு 50 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது. போனஸ் புள்ளிகளுக்காக ஆடியதால் கடைசியில் 4 விக்கெட்டுகளை சடுதியில் இழந்தது. ஆனாலும் கடைசியில் பாக்னர் 2 ரன்களை அடிக்க ஆஸ்திரேலியா 40 ஓவர்களில் இலக்கை எட்டி போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றது.
மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரில் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இங்கிலாந்து மீளவில்லை என்றே அந்த அணியின் இந்தத் தோல்வி எடுத்துரைக்கிறது.
ஆட்ட நாயகனாக மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக் கிழமை (ஜன.18) ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மெல்போர்னில் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT