Published : 26 Jan 2015 09:57 AM
Last Updated : 26 Jan 2015 09:57 AM
இலங்கைக்கு எதிரான 6-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரை நியூஸிலாந்து 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்டுகளிலும் வென்ற நியூஸிலாந்து டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் நியூஸிலாந்து 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது. நேற்று டுனெடினில் நடைபெற்ற போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது நியூஸிலாந்து.
டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட் செய்யத் தீர்மானித்து. தொடக்க வீர, மெக்கலம் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். கப்டில் 28 ரன்கள் எடுத்தார். அடுத்து வில்லியம்ஸன், டெய்லர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் குவித்தது. வில்லியம்ஸன் 95 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். பின்னர் டெய்லருடன் ஜோடி சேர்ந்த ஆண்டர்சன் 40 ரன்கள் குவித்தார். டெய்லர் 102 பந்துகளில் 96 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 50 ஓவர் முடிவில் நியூஸிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் குவித்தது.
இலங்கை தரப்பில் கேடிஜிடி பிரசாத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய இலங்கையின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. திரிமன்னே 29, தில்சன் 21 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய சங்கக்காரா 66 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஜெயவர்தனே (9), கருணாரத்னே (26), சண்டிமால் (9), மெண்டிஸ் (3), பெரெரா (2), பிரசாத் (2), லக்மல் (3) விரைவில் ஆட்டமிழக்க இலங்கை அணி 40.3 ஓவர்களில் 195 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூஸிலாந்து 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது.
ஆட்டநாயகன் விருது 4 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூஸிலாந்தின் ஆண்டர்சனுக்கு வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT