Published : 10 Jan 2015 12:30 PM
Last Updated : 10 Jan 2015 12:30 PM

சிட்னி டெஸ்ட் டிரா: ஆஸி.க்கு ஏமாற்றம் அளித்தது இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்றுவந்த கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

ஆஸ்திரேலிய நிர்ணயித்த 349 ரன்கள் வெற்றி இலக்கை இந்தியா எட்ட முடியாமல் போனது. ஆனாலும் மொத்த விக்கெட்டுகளையும் இழக்காமல் ஆட்டத்தை இந்தியா டிரா செய்தது.

6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை நேற்றைய ஆட்ட நேர முடிவில் எடுத்திருந்த ஆஸ்திரேலியா இன்று காலை டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 349 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. துவக்க வீரர்கள் ராகுல் மற்றும் விஜய் இருவரும் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.

5-வது நாள் களம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்காது என்பதால் ஆட்டத்தை டிரா செய்யும் முனைப்போடே இந்தியா ஆடியது. சென்ற இன்னிங்ஸில் சதமடித்த ராகுல் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். தொடர்ந்து ஆடிய ரோஹித் சர்மா, விஜய்யுடன் இணைந்து உணவு இடைவேளை கடந்து களத்தில் தாக்குப்பிடித்தார்.

ரோஹித் சர்மா 39 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்லிப் பகுதியைக் கடந்து பந்தை விரட்ட முற்பட்டபோது, ஸ்லிப்பில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் அதைத் தாவிப் பிடித்து ரோஹித் சர்மாவை ஆட்டமிழக்கச்செய்தார். இந்த ஆட்டத்தில் ஆஸி. வீரர்களின் ஃபீல்டிங்க் மோசமாக இருக்க, ஸ்மித்தின் இந்த அபாரமான கேட்ச் அவற்றுக்கு ஈடுகட்டும் விதமாக இருந்தது.

அடுத்து களமிறங்கிய கோலி, விஜய்யுடன் இணைந்து தன் பங்கிற்கு அணியை பாதுகாப்பான கட்டத்தை நோக்கி அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினார். இந்நிலையில் 135 பந்துகளில் முரளி விஜய் அரை சதம் தொட்டார். இதைத் தொடர்ந்து லயான் வீசிய ஒரு ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என 16 ரன்களை விஜய் குவித்தார்.

தேநீர் இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்களை எடுத்திருந்தது. கோலி, விஜய் இணை இந்தியாவை கரை சேர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது 80 ரன்களுக்கு விஜய் வீழ்ந்தார். தொடர்ந்து கோலியும் 46 ரன்களுக்கு அடுத்த சில ஓவர்களில் ஆட்டமிழந்தார்.

சென்ற இன்னிங்ஸில் முதல் பந்தில் ஆட்டமிழந்த ரெய்னா, இம்முறை 3-வது பந்தில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து பெருத்த ஏமாற்றமளித்தார். சாஹா, அஸ்வின் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, தோல்வியின் விளிம்புக்கு இந்தியா சென்றது.

நாள் முடிய 11 ஓவர்கள் மட்டுமே இருக்க, இந்தியாவின் வசம் 3 விக்கெடுகள் மட்டுமே மீதமிருந்தது. ரஹானே, புவனேஸ்வர் குமார் இணை மேற்கொண்டு ஆட்டமிழக்காமல் ஆடுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆடு களமும் அதற்கேற்றார் போல் மோசமாக இருக்க, கடைசி பத்து ஓவர்கள் சற்று பரபரப்பாகவே அமைந்தது.

ஆனால் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை எடுத்திருந்தது. ரஹானே 38 ரன்களுடனும், புவனேஸ்வர் குமார் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-ல் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக, ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x