Published : 29 Jan 2015 10:26 AM
Last Updated : 29 Jan 2015 10:26 AM
இறுதிப் போட்டியை உறுதியாக எட்டும் எனக் கருதப்பட்ட இந்தியா அரையிறுதியில் மும்பையில் இங்கிலாந்தைச் சந்தித்தது. இந்திய ஸ்பின்னர்களைச் சமாளிக்க இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் கிராஹாம் கூச் ஒரு வியூகத்தோடு களமிறங்கினார். அன்று அவர் ஒரு காலில்தான் ஆடினார் எனக் கூறலாம்.
ரவி சாஸ்திரி, மணீந்தர் சிங் ஆகியோரது பந்துகளை ஒரு காலில் முட்டி போட்டு போட்டு ‘ஸ்வீப்’ (துடைப்பத்தால் பெருக்குவது போல்…) ஷாட்டை ஆடிக்கொண்டேயிருந்தார். பெருக்கி, பெருக்கியே’ ஸ்கோரைக் கூட்டிய கூச், 115 பந்துகளில் 136 ரன் எடுத்து ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். இந்தியா, வெற்றி இலக்கான 255-ஐ எட்ட முடியாமல் 219 ரன்னில் ஆட்டமிழந்து போட்டியை விட்டு வெளியேறியது.
ஆனால், அதே ஸ்வீப் ஷாட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்று யாரும் அப்போது கணித்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்து கேப்டன் கேட்டிங், இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்துகொண்டிருந்தார். இங்கிலாந்தின் வெற்றி உறுதி என்று ஆஸ்திரேலிய வீரர்களும் எண்ணியிருப்பார்கள். ஆனால், அப்போது ஒரு திருப்பம் நிகழ்ந்தது.
பகுதி நேர ஸ்பின்னரான ஆஸி. கேப்டன் ஆலன் பார்டர், தானே பந்து வீச முடிவெடுத்தார். தனது பந்தினை அலட்சியமாக எண்ணி அடித்து அடித்து ஆட கேட்டிங் முற்படுவார்; அப்போது விக்கெட் விழலாம் என்ற அவரது கணிப்பு பலித்தது. அவரது முதல் பந்தையே, ‘ரிவர்ஸ் ஸ்வீப்’’ செய்ய கேட்டிங் முயன்றார்.
ஆனால், பந்தோ, கிளவுஸில் பட்டு கீப்பரிடம் கேட்சாக மாறியது. 7 ரன் வித்தியாசத்தில் ஆஸி. வென்றது. கேட்டிங் இருந்திருந்தால் இங்கிலாந்து வென்றிருக்கக்கூடும். கூச்சின் திறமையான பெருக்கலால்’ இறுதியை அடைந்த அந்த அணி, கேப்டனின் சமயோசிதமற்ற (ரிவர்ஸ்) ‘பெருக்கலால்’ கோப்பையை இழந்தது.
களங்கத்தைத் துடைத்த ஹாட்டிரிக்
சேத்தன் ஷர்மா என்றாலே 1986-ல் ஷார்ஜா கோப்பை இறுதிப் போட்டியின் கடைசி ஓவரில் அவரது பந்தில் மியாண்டட் அடித்த ‘வெற்றி’ சிக்ஸர்தான் நினைவுக்கு வரும். போட்டிகளில் அது சகஜம்தான் என்றாலும், சர்மாவை ஏதோ ஒரு குற்றவாளி போலவே தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் கருதினர். அந்த அவப் பெயரினை நிரந்தரமாக அழிக்க உலகக் கோப்பையில் அவர் நிகழ்த்திய ஹாட்ரிக் சாதனை உதவியது.
நன்றாக ஆடிக்கொண்டிருந்த கென்ரூதர்ஃபோர்டின் ஸ்டெம்பைத் தனது இன்கட்டரால் சாய்த்தார் ஷர்மா. தொடர்ந்து, இயன் ஸ்மித் வந்தார். மீண்டும் இன்கட்டரை ஷர்மா வீச மீண்டும் ஸ்டெம்ப் கழன்றது. நாக்பூர் ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். ஹாட்ரிக் பரபரப்பு எங்கும் தொற்றிக்கொண்டது. கேப்டன் கபில் தேவ் ஷர்மாவின் அருகில் சென்று சற்று நேரம் பேசினார்.
பிறகு ஷர்மா அடுத்த பந்தை வீசினார். அது சாட்பீல்டின் கால்களுக்குள் புகுந்து ஸ்டம்பைத் தாக்கியது. உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல் ஹாட்ரிக் எடுத்தவர் என்னும் பெருமையை ஷர்மா பெற்றார். அந்தச் சாதனையைப் புரிந்த முதல் இந்தியரும் அவரே.
அந்த இரு ரன்கள்!
ஒரு நிமிடத்தின் மதிப்பு என்ன என்பதை ஒரு நிமிடத்தில் ரயிலைத் தவறவிட்டவரைக் கேட்டால்தான் தெரியும். ஒரு ரன்னில் தோற்ற அணிக்குத்தான அந்த ஒரு ரன்னின் அருமை புரியும். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் லீக் போட்டியில் இந்தியா ஒரு ரன்னில் தோல்வியடைந்தது. அதற்கு ஸ்டீவ் வா சிறப்பாக வீசிய கடைசி ஓவர் காரணமாக இருந்தாலும் மற்றொரு சுவாரசியமான பின்னணியும் உள்ளது.
முன்னதாக, ஆஸி இன்னிங்ஸின்போது ரவி சாஸ்திரி வீசிய ஓவரில் ‘லாங் ஆன்’ திசையில் பந்தினைத் தூக்கி அடித்தார் டீன் ஜோன்ஸ். அது பவுண்டரியா, சிக்ஸரா என்று நடுவர் டிக்கி பேர்டால் கணிக்கமுடியவில்லை. பந்தினை வீசிய சாஸ்திரியோ, அது பவுண்டரி என்று கூறியதும், நடுவரும் பவுண்டரி என சிக்னல் கொடுத்துவிட்டார். ஆனால் ஆஸி தரப்போ அது சிக்ஸர் என்று கருதியது. அந்த இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா 268 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளையின் போது, போட்டி நடுவர் ஹனீப் முகம்மதுவிடம், சிக்ஸர் பற்றி ஆஸ்திரேலியா முறையிட்டது. கபில் தேவிடம் போட்டி நடுவர் விவாதித்தார். கபில்தேவோ 2 ரன்கள்தானே என நினைத்து அதை சிக்ஸராகக் கணக்கில் எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டார். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 270 ஆனது. தொடர்ந்து ஆடிய இந்தியா, 269 ரன்களை எடுத்து ஒரு ரன்னில் தோல்வியடைந்தது.
ஆனால், அடுத்த லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து இந்தியா பழிதீர்த்துக்கொண்டது. அதுதான் அத்தொடரில் ஆஸி பெற்ற ஒரே தோல்வி.
பெருந்தன்மையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த அணி
வெற்றி பெற்றால் அரையிறுதிக்குப் போகலாம் என்ற நிலையில் பாகிஸ்தானுடன் தனது கடைசி லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவு விளையாடியது. இம்ரான் கானின் சிறப்பான பந்து வீச்சால் 216 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது கரீபியன் அணி. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 183-க்கு 5 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தது. வால்ஷ், பேட்டர்சனின் பந்து வீச்சால், மேலும் 20 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
அதனால், கடைசி ஓவரில், ஒரு விக்கெட் மட்டும் கைவசம் இருக்க, 14 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. வால்ஷ் வீசிய அந்த ஓவரில் அப்துல் காதிர் சிக்ஸர் அடித்ததால் ஆட்டத்தின் போக்கு மாறியது. கடைசி பந்தில் 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
கடைசிப் பந்தை வீச ஓடி வந்தபோது, ரன்னர் சலீம் ஜாபர் அவசரப்பட்டு கிரீஸைத் தாண்டிப் போய்விட்டார். வால்ஷ் நினைத்திருந்தால் அவரை ரன் அவுட் ஆக்கியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் வெறுமனே எச்சரித்துவிட்டு மீண்டும் பந்து வீசினார். அந்தப் பந்தில் அப்துல் காதிர் 2 ரன்னை எடுத்தார். பாகிஸ்தான் வென்றது. வேறு எந்த பவுலராக இருந்தாலும், அரையிறுதி செல்லும் வாய்ப்பை நழுவவிட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. 1983-ல் இழந்ததை மீண்டும் வெல்லலாம் என்ற கனவில் விவ் ரிச்சர்ட்ஸின் தலைமையில் வந்திருந்த அந்த அணி, வால்ஷின் பெருந்தன்மையால் வாய்ப்பை நழுவவிட்டது.
வால்ஷ் செய்த்து சரியா என்று போட்டி முடிந்ததும் ரிச்சர்ட்ஸிடம் கேட்கப்பட்டது. அவர் வால்ஷை முழுமையாக ஆதரித்தார். “நாங்கள் அப்படியேல்லாம் போட்டியை வெல்வதில்லை” என்றார் ரிச்சர்ட்ஸ். அதுதான் ரிச்சர்ட்ஸ். அதுதான் மே.இ. தீவுகள் அணியின் கம்பீரம்.
கவாஸ்கரின் ஒண்ணே ஒண்ணு.!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான கவாஸ்கர், டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்களைக் கண்டிருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்தார். 13 ஆண்டுகளில் சுமார் 100 போட்டிகளில் ஆடி, 27 அரைசதங்கள் அடித்திருந்தாலும், சதம் அடிக்காதது ஒரு பெரிய குறையாகவே இருந்துவந்தது.
அந்தத் தருணத்தைத் தனது கடைசி சர்வதேசத் தொடரான 1987 உலகக் கோப்பைக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாரோ என்னவோ? அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதுவதைத் தவிர்க்க, கடைசி லீக் ஆட்டத்தில் (சேத்தன் சர்மா ஹாட்ரிக் போட்டி) நியூசிலாந்தை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடிக்கவேண்டியிருந்தது. அப்போட்டியில் 88 பந்துகளில் தனது முதல் சதத்தினை (103) எடுத்த கவாஸ்கர், வெற்றி இலக்கான 222-ஐ, 32.1-ம் ஓவரிலேயே எட்ட உதவினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT