Published : 21 Jan 2015 08:00 PM
Last Updated : 21 Jan 2015 08:00 PM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் தகுதி அமெரிக்க வீரர் டிம் ஸ்மைசெக்கின் அசாத்திய ஆட்டத்தில் நிலைகுலைந்தார் நடால். ஆனால் ஒருவழியாக 5 செட்களில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
உலகத் தரவரிசையில் 112-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் டிம் ஸ்மைசெக்கை ரஃபேல் நடால், 2-6, 6-3, 6-7, 6-3, 7-5 என்ற செட்களில் மிகவும் போராடி வென்றார்.
நடாலின் உடல்நிலை 100% தகுதியில் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அதிகம் அறியப்படாத ஒரு வீரர் இவ்வளவு பிரச்சினைகள் கொடுப்பார் என்று நடால் எதிர்பார்க்கவில்லை என்பதே இதில் முக்கியமானது.
தனது ஃபோர்ஹேண்ட் ஷாட்களை அபாரமான துல்லியத்துடன் விளையாடிய ஸ்மைசெக், பேக்ஹேண்ட் ஷாட்களிலும் சக்தி மற்றும் துல்லியத்தை பரமாரிக்க நடாலின் ஆட்டம் சற்றே நிலைகுலைந்தது.
முதல் செட்டில் சரியாக ஆடாத நடால் 2-6 என்று இழந்தார். 2-வது செட்டில் ஓரளவுக்கு மீண்டு வந்து 6-3 என்று வென்றார்.
ஆனால் 3-வது செட்டில் 5-4 என்று நடால் செட் பாயிண்டுக்கு சர்வ் செய்யும் போது தவறு செய்ய ஆட்டம் டை பிரேக்கிற்கு சென்றது. அதில் ஸ்மைசெக் அபாரமான ஆட்டத்தையும் சர்வையும் வெளிப்படுத்த 2-7 என்று அந்த செட்டையே கோட்டை விட்டு 3 செட்களில் 2 செட்கள் தோல்வி தழுவி பின் தங்கியிருந்தார் நடால்.
4-வது செட்டில் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த நடால் தனது ஆட்டத்தை நிதானப்படுத்தி சீராக ஆடத் தொடங்கினார், அதில் 6-3 என்று வெற்றி பெற்றாலும், ஸ்மைசெக்கின் தன்னம்பிக்கையை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
5-வது செட்டில் எப்போதும் நடால் நன்றாகவே ஆடுவார். ஆனால் இம்முறை ஸ்மைசெக் அவருக்கு சரிசமமாகத் திகழ்ந்தார். 5-வது செட்டின் 7-வது சர்வ் கேமில் நடால் 40-30 என்று முன்னிலை பெற்றிருந்தாலும் ஸ்மைசெக் போராட்டக்குணத்தை விடவில்லை. கடைசி தருணத்தில் கூட நடாலின் 3 மேட்ச் பாயிண்ட்களை அவர் சிறப்பாக தடுத்தார். கடைசியில் தவறிழைத்தார். நடால் வெற்றிப்பெருமூச்செறிந்தார்.
நடால் ஊதித்தள்ளி விடுவார் என்று நினைக்கப்பட்ட நேரத்தில் பலத்த கரகோஷத்துடன் தோல்வியிலும் வெற்றி கண்ட ஸ்மைசெக் தன் ஓய்வறைக்குத் திரும்பினார்.
ஸ்மைசெக் இந்த ஆட்டத்தில் 15 ஏஸ்களை அடிக்க நடாலோ 3-தான் அடித்தார். சர்வில் இரட்டைத் தவறுகளாக 7 முறை செய்தார் நடால், ஆனால் ஸ்மைசெக் ஒரேயொரு முறைதான் அத்தகைய சர்வ் தவற்றைச் செய்தார். மொத்தமாக அறியாமல் செய்த தவறுகளை நடால் 53 முறை செய்தார். ஸ்மைசெக் 50 முறை செய்தார். வின்னர்களிலும் ஸ்மைசெக் 64, நடால் 43. இப்படி ஒவ்வொரு விவரத்திலும் ஸ்மைசெக் முன்னிலை வகித்தாலும் முக்கியத் தருணங்களில் அவர் சறுக்கியதால் தோல்வி ஏற்பட்டது.
3-வது சுற்றில் ரோஜர் பெடரர்:
மற்றொரு ஆட்டத்தில் சுவிஸ். நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், இத்தாலி வீரர் சிமோன் போலெலியை 3-6, 6-3, 6-2, 6-2 என்று 4 செட்களில் வீழ்த்தினார்.
பெடரர் 5-வது ஆஸி. ஒபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை இலக்கு கொண்டு ஆடி வருகிறார். இவர் கடைசியாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றது 2010-ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT