Last Updated : 11 Jan, 2015 04:03 PM

 

Published : 11 Jan 2015 04:03 PM
Last Updated : 11 Jan 2015 04:03 PM

தோல்வியை வெறுக்கிறேன் - விராட் கோலி ஆவேசம்

கிரிக்கெட் போட்டியில் நமது அணி தோல்வியடைவதை நான் வெறுக்கிறேன் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

களத்தில் ஆவேசமாக விளையாடுவதற்கு பெயர்போன கோலி, இப்போது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாகியுள்ளார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா போராடி டிரா செய்தது.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தாலும், விராட் கோலி தனிப்பட்ட வகையில் மிகச் சிறப்பாக விளையாடி ரன் குவித்தார். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக முக்கியமாக பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனுடன் எதிராக கோலி மோதல் போக்கை கையாண்டது இந்த டெஸ்ட் தொடரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

4-வது டெஸ்ட் போட்டி முடிவுக்கு பிறகு கோலி கூறியது: இந்திய அணி தோல்வியடைவதை நான் வெறுக்கிறேன். எதிரணியினர் களத்தில் எப்போதும் நம்மை மரியாதையுடன் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நமது வீரர்களை எதோ சாதாரண இளைஞர்கள் என்ற நோக்கில் எதிரணியினர் பார்க்கக் கூடாது. நமது சிறப்பான ஆட்டம் குறித்த பயம் அவர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விகளில் இருந்து தனிப்பட்ட முறையில் நான் பல விஷயங் களை கற்றுக் கொண்டேன். அதனை வைத்து பல புதிய திட்டங்களை வகுத்துள்ளேன். அதனை அணியில் நடைமுறைப் படுத்துவேன். ஒவ்வொரு பேட்ஸ் மேனும் நம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் எனது ஆட்டம் சிறப்பாக அமைந்தது.

அதிக ரன்களை குவிக்க முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆஸ்திரேலிய அணியினர் விளையாடிய விதத்தில் இருந்தும் நிறைய புதிய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நாம் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும். முக்கியமாக பந்து வீச்சில் முன்னேற்றம் வேண்டும். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து சீராக பந்து வீசுகிறார்கள். நாம் அதில் பலம் பெற வேண்டும். டெஸ்ட் போட்டியில் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் எடுப்பது மிகவும் முக்கியம்.

அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த டெஸ்ட் போட்டி மூலம் பல நேர்மறையான விஷயங்களை பெற்றுள்ளோம். அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை போட்டிக்கு இது மிகவும் அவசியம். அடுத்து ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறோம்.

அது உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட கூடுதல் பலன் அளிக்கும். உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு சுமார் 2 மாதங்கள் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடுவது சிறப்பான முன்னேற்பாடாக எங்கள் அணிக்கு அமைந்துள்ளது என்று கோலி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x