Published : 18 Jan 2015 03:24 PM
Last Updated : 18 Jan 2015 03:24 PM

1975 முதல் உலகக் கோப்பை: கவாஸ்கரின் காலடியில் கொட்டப்பட்ட உணவு

முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் ஒரு விதத்தில் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று சொல்ல வேண்டும். கிரிக்கெட்டை மக்களிடையே பரவச் செய்வதில் ஒரு நாள் ஆட்டங்கள் பெரும் பங்கு வகித்தன என்றால் அந்த ஒரு நாள் ஆட்டங்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது 1975-ல் நடந்த முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடர்தான்.

இந்தத் தொடருக்கு முன்பாக 18 ஒருநாள் சர்வதேச போட்டிகளே நடைபெற்றிருந்தன. ஒரு நாள் கிரிக்கெட் என்ற அம்சமே புதுமையாகப் பார்க்கப்பட்டது.

ஆட்டம் என்னமோ அதே பாணியில்தான் நடந்தது. கிட்டத்தட்ட டெஸ்ட் அணியே ஒரு நாள் போட்டியிலும் ஆடியது. டெஸ்ட் பாணியிலேயே இதுவும் ஆடப்பட்டது. போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 60 ஓவர்கள், தொழில்நுட்பத்தின் பங்கு எதுவும் இல்லாத போட்டிகள் என்று முயலும் ஆமையும் கலந்த ஆட்டங்களாகத்தான் தொடக்கத்தில் அரங்கேறின. குறிப்பாக இந்தியா இத்தகைய வடிவத்திற்குத் தயாராகாத அணியாகவே அப்போது இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் அதன் தரத்தில் உச்சத்தில் இருந்த காலம். மட்டையாளர்கள் ஹெல்மெட் அணியாமல் உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார்கள். மேற்கிந்தியத் தீவுகளின் ஆன்டி ராபர்ட்ஸ், ஜூலியன் கீத்பாய்ஸ், ஹோல்டர், ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி, ஜெஃப்தாம்சன் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்கள் தங்களது ஆக்ரோஷத்தைக் காட்டி மட்டையாளர்களை மிரட்டிய காலகட்டம் அது.

யார் பெரியவர்?

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து முன்னணியிலும் அடுத்த வரிசையில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் அதற்கு அடுத்த வரிசையில் இந்தியா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற அணிகளும் இருந்தன. மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளில் புகழ் பெற்ற வீரர்கள் இருந்தனர். நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் பிரபலமான வீரர்கள் இருந்தனர்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் சுனில் கவாஸ்கர், ஜி.ஆர்.விஸ்வநாத் தவிர உலக அரங்கில் மட்டையாளர்கள் பெயர் எடுக்கவில்லை. ஆனால் இந்திய சுழல் பந்து வீச்சு உலகப் பிரசித்தி பெற்றது. மே.இ.தீவுகளின் மாபெரும் ஆட்டக்காரரான கேரி சோபர்ஸ் புகழ்ந்த வெங்கட்ராகவன் தலைமையில் இந்தியா 1975 உலகக் கோப்பை போட்டியில் அடியெடுத்து வைத்தது.

ஆனாலும், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் ஏதோ மே.இ.தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயான போட்டியாகவே கருதப்பட்டது. இதற்குக் காரணம் மற்ற அணிகளின் பலவீனம். மூன்று அணிகளுக்குள் நடக்கும் பலப் பரீட்சையை உலகக் கோப்பை என்று ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்தாலும் புதிய தொடர் நடைபெற்றதால் இதன் மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் திரும்பியது.

மிகவும் பெருந்தன்மையாக புருடென்ஷியல் காப்பீட்டு நிறுவனம் இந்த உலகக் கோப்பையை ஸ்பான்ஸராக இருந்து நடத்தியது. அப்போதே 1,00,000 பவுண்டுகள் தொகையை அளித்தது. விளையாட இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்க அணியை அழைத்தார்கள். கிழக்கு ஆப்பிரிக்கா என்பது கென்யா, தான்சானியா, உகாண்டா மற்றும் ஜாம்பியா நாடுகளின் கிளப் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி.

இந்தியாவின் மோசமான தொடக்கம்

ஜூன் 7-ம் தேதி இந்தியாவும் இங்கிலாந்தும் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. இங்கிலாந்தின் கேப்டன் மைக் டென்னஸ். இந்தியாவுக்கு வெங்கட்ராகவன்.

இந்திய அணியில் 4 ஸ்விங் பவுலர்கள்: மதன்லால், அமர்நாத், அபிட் அலி, கர்சன் காவ்ரி (இவர் வேகம், ஸ்பின் இரண்டும் வீசுவார்). 2 ஸ்பின்னர்கள்: வெங்கட்ராகவன், ஏக்நாத் சோல்கர். பேட்டிங்கில் கவாஸ்கர், சோல்கர், கெய்க்வாட், விஸ்வநாத், பிரிஜேஷ் படேல், அமர்நாத். விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினியரும் நன்கு ஆடக்கூடியவர்.

இங்கிலாந்து 60 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. டென்னிஸ் அமிஸ் 137 ரன்கள் எடுத்தார். இந்திய பவுலர்களில் வெங்கட் ராகவன் மட்டுமே சிக்கனமாக வீசி 12 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக் கொடுத்தார். கர்சன் காவ்ரி 11 ஓவர்களில் 83 ரன்களை வாரி வழங்கினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் கொடுத்ததற்கான சாதனையாக இது நீண்ட காலத்திற்கு நிலைத்திருந்தது.

335 ரன் என்னும் இலக்கை எதிர்கொண்டு இந்தியா களமிறங்கியது. மாபெரும் மட்டையாளரான சுனில் கவாஸ்கர் மீது பெரிய எதிர்பார்ப்பு. தொடக்கத்தில் கிறிஸ் ஓல்ட், ஜான் ஸ்னோ வீசிய டொக்…டொக்… என்று தடுத்தாடினார். புதிய பந்து என்பதால் நிதானமாக ஆடுகிறார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போலவே ஆடினார். இன்னும் சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அவர் கொஞ்சம் வேகமாக ரன்களை எடுத்திருப்பார். 174 பந்துகளைச் சந்தித்து 36 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் ஒரே ஒரு பவுண்டரி. ஜி.ஆர்.விஸ்வநாத் 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். கவாஸ்கர் அன்று ஆடிய ஆட்டம் இன்று வரையிலும் புரியாத புதிர்தான். 60 ஓவர்களில் 132/3 எடுத்த இந்தியா முதல் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் மோசமாகத் தோற்றது.

ரசிகர்கள் ஆத்திரம்

போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மைதானத்தில் இந்திய ரசிகர்கள் இறங்கி கவாஸ்கரைக் கேலி செய்தார்கள். ஒரு ரசிகர் ஆத்திரத்துடன் கவாஸ்கரின் காலடியில் தனது மதிய உணவைக் கொட்டினார் என்று செய்தி வந்தது. வெங்கட்ராகவனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது அவரை இதுபோல ஆடச் செய்தது என்ற விமர்சனங்களும் எழுந்தன. கவாஸ்கரே பின்னர் தனது அந்த ஆட்டத்தைத் தன் வாழ்நாளின் மோசமான ஆட்டம் என்று கூறியது தனிக் கதை.

அடுத்தடுத்த போட்டிகளில் இவ்வளவு மோசமாக இந்தியா ஆடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 230 ரன்கள் எடுத்தது. அபித் அலி 98 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 70 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 58.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. பிஷன் பேடி 12 ஓவர்களில் 6 மெய்டன்களுடன் 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எனச் சிக்கனம் காட்டினார். அபித் அலி பந்துவீச்சிலும் (12 ஓவர் 2 மெய்டன்கள் 35 ரன்கள் 2 விக்கெட்) திறமையை வெளிப்படுத்தினார்.



(1975-ன் கதை தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x