Last Updated : 20 Jan, 2015 09:09 PM

 

Published : 20 Jan 2015 09:09 PM
Last Updated : 20 Jan 2015 09:09 PM

டிவிலியர்ஸ் சாதனையை முறியடிக்க முயற்சி செய்வேன்: ஷாகித் அஃப்ரீடி

டிவிலியர்ஸ் 31 பந்துகளில் ஒருநாள் போட்டியில் சதம் எடுத்த உலக சாதனையை முறியடிக்க முயற்சி செய்வேன் என்கிறார் பாக். ஆல்ரவுண்டர் அப்ரீடி.

உலகக்கோப்பை போட்டிகளிலோ அல்லது நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலோ அதிவேக ஒருநாள் போட்டிக்கான தற்போதைய டிவிலியர்ஸின் சாதனையை முறியடிக்க முயற்சி செய்யப்போவதாக ஷாகித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார்.

முதலில் 37 பந்துகளில் இலங்கைக்கு எதிராக சதம் கண்டு அப்ரீடி வைத்திருந்த சாதனையை நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் முறியடிக்க, தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி.டிவிலியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து புதிய சாதனை நிகழ்த்தினார்.

அதனை முறியடிக்க முயற்சி செய்வேன் என்று தற்போது பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார்.

"இது போன்ற சாதனைகளை திட்டமிட முடியாது, அன்றைய தினம் நம் தினமாக அமைந்தால்தான் அது முடியும். மேலும் நமது தன்னம்பிக்கை வானாளவ இருக்க வேண்டும். அனைத்தும் என் பொருட்டு சாதகமாக நிகழ்ந்தால்... அன்றைய தினம் என்னுடைய தினமாக இருந்தால், நியூசிலாந்திலோ அல்லது உலகக்கோப்பை போட்டிகளிலோ டிவிலியர்ஸ் சாதனையைக் கடக்க முயற்சி செய்வேன்.

டிவிலியர்ஸ் ஒரு உண்மையான சாம்பியனாக அன்று விளையாடினார். அவருக்கு அது சிறப்பு வாய்ந்த தினமாக அமைந்தது.

நான் அன்று சாதனை நிகழ்த்தும் போது அனைத்தும் எனக்குச் சாதகமாகச் சென்றது. ஆகவே, வரும் உலகக்கோப்பைப் போட்டிகளில் எனக்கான தினம் அமையும் என்று நம்புகிறேன். அன்றைய தினம் எனது கர்வமான அந்த ஒருநாள் அதிவேக சத சாதனையை மீண்டும் என் பெயருக்கு இழுத்துக் கொள்வேன்.

ஆனால், எதார்த்தமாகப் பார்த்தால், நான் இப்போதெல்லாம் களமிறங்கும் நிலையில் அரைசதம் எடுக்கத்தான் முடியும். சதம் எடுப்பது கடினம், ஆனால் யாருக்குத் தெரியும்? ஒரு தினம் எனது சிறப்பு தினமாக அமைந்தால்...”

இவ்வாறு கூறியுள்ளார் அஃப்ரீடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x