Published : 31 Jan 2015 07:29 PM
Last Updated : 31 Jan 2015 07:29 PM
உலகக்கோப்பைக்கு முன்பு கிடைக்கும் இடைவெளி நாட்களை முழு ஓய்வுக்குப் பயன்படுத்துவதே அணியின் மேம்பாட்டுக்குச் சிறந்தது என்று கேப்டன் தோனி கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் தோற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறிய இந்திய அணிக்கு இப்போது தேவை உலகக்கோப்பைக்கு முன்பு சிறிது ஓய்வு என்று தோனி தெரிவித்துள்ளார்.
"இந்தத் தொடர் மிகவும் நீண்ட தொடராகிவிட்டது. இந்த 6 முதல் 10 நாட்களான இடைவெளி அணிக்கு உதவிகரமாக அமையும் என்று கருதுகிறேன். கிரிக்கேட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டியதுதான். கண்ணில் படாத இடத்தில் அதனை வைத்து விட வேண்டும். கிரிக்கெட்டிலிருந்து முற்றிலும் விலகியிருக்க வேண்டும்.” என்றார்.
அணியைத் தூக்கி நிறுத்துவது எப்படி? என்ற கேள்விக்கு பதில் அளித்த தோனி, “நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் என்னால் பதில் கூற முடியாது, அது பொருத்தமான வழியில் கையாளப்படும். ஆனால், இது கிரிக்கெட் ஆடுகளத்தில் செய்யப்பட மாட்டாது. இப்போதைக்கு ஓய்வு மிக முக்கியம் என்றே நான் கருதுகிறேன். வலைப்பயிற்சியை விட இப்போது இந்த இடைவேளையை ஓய்வுக்குப் பயன்படுத்துவதே முக்கியம் என்று நான் கருதுகிறேன்.
ஏனெனில், நாங்கள் இங்கு சுமார் 2 மாத காலங்களாக இருக்கிறோம், அதனால் சூழ்நிலைகளை நாங்கள் நன்கு அறிவோம். இப்போதைக்கு முக்கியம் என்னவெனில் ஓய்வுதான். கிரிக்கெட்டிலிருந்து முற்றிலும் விலகியிருத்தல். என்ன செய்ய வேண்டும் என்பதை மனதளவில் சிந்திக்க இந்த இடைவேளை பயன்படுத்தப்படும்.” என்று கூறியிருக்கிறார் தோனி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT