Published : 21 Jan 2015 12:56 PM
Last Updated : 21 Jan 2015 12:56 PM
முதல் உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி மேலும் பலம் அடைந்தது. ஆனால், அந்த அணிக்குக் கடுமையான சவாலாக விளங்கிய ஆஸ்திரேலிய அணி எதிர்பாராத காரணத்தால் பலவீனம் அடைந்தது. ஆஸ்திரேலியாவில் கெர்ரி பேக்கர் தொடங்கிய தனியார் உலக சீரிஸ் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பிரபல ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடச் சென்றுவிட்டார்கள். முக்கியமான ஆட்டக்காரர்கள் இல்லாமல் பலவீனமான ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. கேப்டன் கிம் ஹியூஸ். இதனால் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சவால் அளிக்கும் அணிகளாக இங்கிலாந்தும் பாகிஸ்தானும் திகழ்ந்தன.
ரிச்சர்ட் ஹேட்லி, லான்ஸ் கெய்ன்ஸ் உள்ளிட்ட ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருந்த நியூசிலாந்து அணிக்கும் ஒரு வாய்ப்பு இருப்பதாக அப்போது கருதப்பட்டாலும், மே.இ. தீவுகள் - பாகிஸ்தான் அணிகளின் இறுதிப் போட்டியையே ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வெற்றி வாய்ப்பைத் தனக்கேயுரிய பாணியில் பாகிஸ்தான் கோட்டைவிட்டது தனிக்கதை.
1975 உலகக் கோப்பை நடத்தப்பட்ட அதே விதிமுறை தொடர்ந்தது. பிரிவு பி-யில் இந்தியா, மே.இ.தீவுகள், நியூசிலாந்து, இலங்கை; பிரிவு ஏ-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், கனடா.
சற்றே மேம்பட்ட இந்திய ஆட்டம்
முதல் போட்டி ஜூன் 9ஆம் தேதி. பர்மிங்ஹாமில் இந்திய அணி பலமான மே.இ.தீவுகளை எதிர்கொண்டது. இந்திய அணிக்கு வெங்கட் ராகவன் கேப்டன், மே.இ.தீவுகளுக்கு கிளைவ் லாய்ட்.
1975 போல் அல்லாமல் இந்திய அணி கொஞ்சம் புத்துணர்வுடன் இருந்தது. காரணம் அணியில் திலிப் வெங்சர்க்கார், கபில்தேவ் ஆகிய புதுமுகங்கள் இருந்ததே.
இந்திய அணி: கவாஸ்கர், கெய்க்வாட், வெங்சர்க்கார், விஸ்வநாத், பிரிஜேஷ் படேல், மொகீந்தர் அமர்நாத், கபில்தேவ், கே.சி.கன்னா (வி,கீ), கர்சான் காவ்ரி, வெங்கட்ராகவன், பிஷன் சிங் பேடி.
வெஸ்ட் இண்டீஸ் அணி: கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், காளிச்சரண், கிளைவ் லாய்ட், காலின்ஸ் கிங், டெரிக் முர்ரே, ஆன்டி ராபர்ட்ஸ், ஜொயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், காலின் கிராஃப்ட்.
களத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்ததால், டாஸ் வென்ற கிளைவ் லாய்ட் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பிட்சில் பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆனதோடு எழும்பவும் செய்தன. இதனால் கவாஸ்கரே திணறினார். அவர் 8 ரன்களில் வெளியேறினார். கெய்க்வாட்-11, வெங்சர்க்கார்-7 ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற 29/3 என்று ஆனது.
ஆனால் ஒரு முனையில் ஜி.ஆர்.விஸ்வநாத் மட்டும் மே.இ.தீவுகள் வேகத்தையும் ஸ்விங்கையும் எதிர்கொண்டு அபாரமாக விளை
யாடினார். அவர் 134 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து 9-வது விக்கெட்டாக அவுட் ஆனார். கபில்தேவ் 12 ரன்கள், வெங்கட்ராகவன், கர்சன் காவ்ரி, பிஷன் பேடி ஆகியோர் தைரியமாக ஆடி இரட்டை இலக்கம் கடக்க இந்தியா 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
விஸ்வநாத்தின் இந்த இன்னிங்ஸ் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆட்டக்களத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சை எப்படி ஆட வேண்டும் என்று விஸ்வநாத் அன்று பாடம் எடுத்ததாகவே வர்ணனையாளர்கள் கூறினார்கள்.
கபில், காவ்ரியின் முயற்சி
தொடர்ந்து ஆடிய மே.இ. தீவுகள் அணிக்கு கிரீனிட்ஜ் (106 நாட் அவுட்), ஹெய்ன்ஸ் (47) ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அனுபவம் அற்ற இளம் வீச்சாளர்களான கபில்தேவ், காவ்ரி ஆகியோர் துல்லியமாக வீசியதாகப் பாராட்டப்பட்டனர். கேப்டன் வெங்கட்ராகவன் 12 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். கர்சன் காவ்ரி, 10 ஓவர்களில் 25 ரன்களையே விட்டுக் கொடுத்தார். விழுந்த ஒரே விக்கெட்டை (ஹெய்ன்ஸ்) கபில்தேவ் கைப்பற்றினார். கபில் 10 ஓவர்களில் 46 ரன்களைக் கொடுத்தார். 191 ரன்கள் இலக்கை எட்ட மே.இ.தீவுகள் 51.3 ஓவர்களை எடுத்துக் கொண்டது.
அதன் பிறகு இந்தியா மீதமுள்ள லீக் ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 182 ரன்களையே எடுத்தது. காரணம், நியூசிலாந்தின் கள வியூகம். நியூசிலாந்து கேப்டன்கள் சதுரங்கக் காய்களை நகர்த்துவது போல் பீல்டர்களை நகர்த்துவதற்குப் பேர்போனவர்கள்.
இந்தியப் பந்து வீச்சாளர்கள் சிக்கனமாக வீசியதில் நியூசிலாந்து 57 ஓவர்களில்தான் வெற்றி இலக்கை எட்ட முடிந்தது. இந்தியாவின் அடுத்த போட்டி கற்றுக்குட்டியான இலங்கையுடன். இதில் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இலங்கை அணியில் ராய் டயஸ், துலிப் மெண்டிஸ், சிதாத் விட்டுமனி, ரஞ்சன் மதுகல்ல போன்ற திறமை மிக்க வீரர்கள் இருந்தனர். இதில் விட்டுமனி, டயஸ், மெண்டிஸ் அரை சதம் எடுக்க அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. கபில், அமர்நாத், காவ்ரி ஆகியோர் பந்துகளில் 3 சிக்சர்களை அடித்தார் மெண்டிஸ்.
இலங்கை அணியில் அப்போது பள்ளி மாணவரான இடது கை பேட்ஸ்மென் பாஸ்குவல் என்பவர் ஆடினார். அவரும் மெண்டிசும் இணைந்து 7 ஓவர்களில் 52 ரன்கள் விளாசினர். பாஸ்குவெல் 23.
காத்திருந்து பெற்ற தோல்வி
இலக்கைத் துரத்த இந்தியா ஒரு நாள் காத்திருக்க வேண்டியிருந்தது. சனிக்கிழமை இலங்கை இன்னிங்ஸ் தாமதமாகத் தொடங்கியதால் இந்திய இன்னிங்ஸ் திங்கள்கிழமையே நடந்தது. கவாஸ்கரும் கெய்க்வாடும் 60 ரன்களைச் சேர்த்தனர். உணவு இடைவேளையின் போது இந்தியா 117/2. 25 ஓவர்களில் வெற்றிக்கு 122 ரன்கள் தேவை என்ற நிலையில், விஸ்வநாத் (22) ரன் அவுட் ஆனார்.
இதுவே திருப்பு முனையாக அமைந்தது. இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. படு ஏமாற்றமான உலகக் கோப்பையாக இது அமைந்தாலும், 1975 அளவுக்கு மோசமில்லை என்றே உணரப்பட்டது.
இத்தனை மோசமாக ஆடிய இந்தியா அடுத்த 4 ஆண்டுகளில் அசகாய சூரர்களையும் வீழ்த்திக் கோப்பையை வெல்லும் என்று அப்போது யார்தான் நினைத்திருப்பார்?
(1975-ன் கதை தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT