Published : 28 Jan 2015 02:39 PM
Last Updated : 28 Jan 2015 02:39 PM
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் வீனஸ் வில்லியம்சுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெற்றார் சக அமெரிக்க வீராங்கனை மேடிசன் கெய்ஸ்.
இதன் மூலம் 19 வயது வீராங்கனையிடம் 34 வயது வீனஸ் தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளார்.
தரவரிசையில் இல்லாத மேடிசன் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸை 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதன் முறையாக கிராண்ட் ஸ்லாம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
வீனஸை வெளியேற்றிய மேடிசன் அடுத்த சுற்றான அரையிறுதியில் செரினா வில்லியம்சையும் வெளியேற்ற விளையாடுவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
செரினா வில்லியம்ஸ், 11ஆம் தரவரிசை, ஸ்லோவேகிய வீராங்கனை சிபுல்கோவாவை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ஊதித்தள்ளி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
தனது 4 வயதில் மேடிசன், இன்று வீழ்த்திய வீனஸ் வில்லியம்ஸ் ஆடிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் பார்த்துள்ளார். வீனஸ், செரினா ஆடுவதை தொடர்ந்து தான் தனது சிறு வயது முதல் பார்த்து வந்ததாக அவர் ஆட்டம் முடிந்தவுடன் தெரிவித்தார்.
இவர் பெரிய உயரமும் இல்லை. 5 அடிக்கும் சற்று கூடுதலான உயரம் கொண்டவரே மேடிசன் கெய்ஸ். ஆனால் சர்வ்கள் சக்தி வாய்ந்தவை. பலமான கால்கள் என்பதால் விரைவில் மைதானத்தில் தன் எல்லை முழுவதையும் அவரால் சிரமமின்றி ஓடி பந்துகளை எடுக்க முடிகிறது.
மைதானத்தில் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் அவரால் வெற்றிக்கான ஷாட்களை ஆட முடிவதே அவரது சிறப்புத் திறமை என்று அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
முதல் செட்டில் தனது பெரிய சர்வ்கள் மூலம் வீனஸ் வில்லியம்சை திணறடித்த மேடிசன் அந்த செட்டை சுலபமாக 6-3 என்று கைப்பற்றினார்.
2-வது செட்டில் 1-1 என்று சமநிலை வகித்திருந்த போது, இரண்டு ‘டபுள் ஃபால்ட்களை’ செய்ய வீனஸ் 1-3 என்று முன்னிலை பெற்றார். பிறகு பேக்ஹேண்ட் ஷாட்கள் இரண்டில் சோடை போனார் மேடிசன், மீண்டும் தன் சர்வை இழந்தார். அதன் பிறகு மைதானத்தை விட்டு வெளியே சென்று காயத்திற்கு சிகிச்சை பெற்றுத் திரும்பும்போது அவரது இடது தொடையில் இறுக்கமான கட்டு ஒன்று இருந்தது. 2-வது செட்டை இழந்த மேடிசன், 3-வது செட்டில் தனது பெரிய சர்வ்கள் மூலம் 6-4 என்று வெற்றி பெற்று வீனஸை வெளியேற்றினார்.
மொத்தம் 6 ஏஸ்களை அடித்த மேடிசன் முதல் சர்வை 54% துல்லியமாக வீசியதோடு, 2-வது சர்வையும் 43% துல்லியமாக வீசினார். மொத்தம் 34 வின்னர்களை மேடிசன் அடிக்க, வீனஸ் 10 வின்னர்களையே அடிக்க முடிந்தது. அனைத்திற்கும் மேலாக முதல் சர்வில் அவரது வெற்றி விகிதம் 65%.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT