Published : 31 Jan 2015 05:10 PM
Last Updated : 31 Jan 2015 05:10 PM
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
சற்று முன் முடிந்த இறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவை 6-3, 7-6 (7/5) என்ற நேர் செட்களில் வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை செரீனா தனது 19-வது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தையும், 6-வது ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்.
மேலும், மரியா ஷரபோவாவுக்கு எதிராக 16-வது நேரடி வெற்றியைப் பெற்றார் செரீனா. மேலும் 33 வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே வீராங்கனையும் ஆனார் செரீனா வில்லியம்ஸ்.
ஆக்ரோஷமாக விளையாடிய செரீனா ஒரு 203 கிமீ வேக சர்வுடன் மொத்தம் 18 ஏஸ் சர்வ்களை அடித்து ஷரபோவாவை நிலைகுலையச் செய்தார்.
மாறாக ஷரபோவா முதல் செட்டிலேயே சர்வில் ‘டபுள் ஃபால்ட்’ செய்து பிரேக் பாயிண்ட் கொடுத்தார். முதல் செட்டில் ஆட்டம் மழை காரணமாக 13 நிமிடங்கள் பாதித்தது. அதன் பிறகு வில்லியம்ஸ் ஆக்ரோஷமாக ஆடினாலும் ஆட்டத்தின் போக்கில் அவரும் ஒரு டபுள் ஃபால்ட் செய்தார். ஆனால் அதனையும் ஷரபோவா பயன்படுத்திக் கொள்ளவில்லை. உடனேயே ஷரபோவா சர்வை பிரேக் செய்து செரீனா முதல் செட்டை 6-3 என்று வென்றார்.
2-வது செட்டில் ஷரபோவா ஆட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. சர்வ்கள் சரியாக விழத் தொடங்கின. தனது சர்வ்களை விட்டுக் கொடுக்காமல் ஆடினார். மேலும் செரீனாவின் சர்வ்களை ரிடர்ன் எடுப்பதிலும் சிறப்பாகச் செயல் பட்டார். ஆனால் செரீனா 3 ஏஸ்களை அடித்து அதனை முறியடித்தார்.
2-வது செட்டின் 9-வது சர்வ் கேமில் ஷரபோவாவுக்கு செரீனா சர்வை முறியடிக்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் செரீனாவின் சக்தி வாய்ந்த ஃபோர் ஹேண்ட் ஷாட்டை திருப்பி அடிக்கையில் வெளியே அடித்தார் ஷரபோவா.
ஆட்டம் டை பிரேக்கிற்குச் சென்றது. இதில் ஷரபோவா சமமாக ஆடினார். 6-5 என்று வில்லியம்ஸ் முன்னிலை வகித்தபோது செரீனா ஒரு சர்வை பலமாக அடிக்க அது ஏஸ் என்று நினைத்து வெற்றி பெற்றதாக செரீனா நினைத்தார். ஆனால் அது அவுட் என்று நடுவர் தீர்ப்பளிக்க அடுத்ததாக இன்னொரு ஏஸ் அடித்து 7-5 என்று டைபிரேக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். செரீனா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT