Published : 02 Jan 2015 07:01 PM
Last Updated : 02 Jan 2015 07:01 PM
இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள விராட் கோலி அதிகம் உணர்ச்சிவசப்படுவராகத் திகழ்கிறார். கேப்டன் பொறுப்பை கையாள அவருக்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார்.
தோனி விட்டுச் சென்ற வெற்றிடத்தை கோலி நிரப்ப இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும் என்று தொலைக்காட்சி சானல் ஒன்றில் அப்ரீடி தெரிவித்துள்ளார்.
“தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்ததை கேள்விப்பட்டு கடும் ஏமாற்றமடைந்தேன், ஏனெனில் அவர் ஒரு போராடும் குணம் படைத்தவர், இந்திய கிரிக்கெட்டின் ஒரு மிகப்பெரிய தலைவராக அவர் திகழ்ந்துள்ளார். அந்த அணியை பலமுறை முன்னே நின்று வழிநடத்திச் சென்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றி அமைத்தவர் தோனி, அவரது கேப்டன்சியை இந்திய அணி பெரிய அளவில் இழந்துள்ளது. அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் அவர் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.
கோலி அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராகத் தெரிகிறார். தோனியின் கேப்டன்சி வெற்றிடத்தை அவர் திறம்பட இட்டு நிரப்புவதற்கு சிறிது காலம் பிடிக்கும்” என்றார் அப்ரீடி.
உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்குப் பிறகு தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளது பற்றி கூறும்போது, “மிகப்பெரிய உலகக் கோப்பை போட்டிகளாக இது எனக்கு அமைந்தாலும், நான் ஓய்வுபெறும் திட்டத்திலிருந்து பின் வாங்கப்போவதில்லை. இதுவே இறுதி. நிறைய யோசனைகளுக்குப் பிறகே தெளிவாக நான் எடுத்த ஓய்வு முடிவாகும் இது. நிறைய முன்னணி வீர்ர்கள் மகிழ்ச்சியற்ற தருணங்களில் ஓய்வு அறிவிக்க வற்புறுத்தப்பட்டதை நான் அறிவேன். எனக்கு அது போன்று நடப்பதை நான் விரும்பவில்லை” என்றார்.
உலகக் கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற்றதாக அறிவித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலிருந்து ஒருவர் கூட இன்னமும் அவரைத் தொடர்பு கொள்ளவில்லை என்றார் அஃப்ரீடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT