Last Updated : 28 Jan, 2015 09:42 AM

 

Published : 28 Jan 2015 09:42 AM
Last Updated : 28 Jan 2015 09:42 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி, அரையிறுதிக்கு முன்னேறினார் மரியா ஷரபோவா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

செக். குடியரசின் தாமஸ் பெர்டிச்சிடம் அவர் தோல்வியடைந்தார். ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் நடால் 3-வது இடத்திலும், பெர்டிச் 7-வது இடத்திலும் உள்ளனர்.

நடால்- பெர்டிச் இடையே நேற்று நடைபெற்ற இந்த காலிறுதி ஆட்டம் 2 மணி நேரம் 13 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய பெர்டிச், 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நடாலை திணறடித்தார்.

முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் பெர்டிச் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்து பெர்டிச் அதனை 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி நடாலை திணறடித்தார்.

மூன்றாவது செட்டில் நடால் சற்று போராடினார். எனினும் அவரால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 7-6(7-5) என்ற கணக்கில் 3-வது செட்டையும் பெர்டிச் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் பெர்டிச் தொடர்ந்து 18-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். நடாலுக்கு எதிரான ஆட்டத்தில் பெர்டிச்சின் சர்வீ்ஸ் அபாரமாக அமைந்தது. அவர் மொத்தம் 10 ஏஸ் சர்வீஸ்களை செய்தார். சர்வீஸின்போது 82 சதவீதம் புள்ளிகளை அவர் தனது வசமாக்கினார்.

தோல்வி குறித்து நடால் கூறியது: சமீபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு இதுபோன்ற சில தோல்விகளை தவிர்க்க முடியவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வந்து விளையாடும்போது நாம் நினைப்பதை விட எளிதாக தோல்வியடைந்துவிடுவது வழக்கமானதுதான் என்றார்.

அரையிறுதி ஆட்டத்தில் ஸ்காட்லாந்து வீரர் ஆன்டி முர்ரேவை, பெர்டிச் எதிர்கொள்கிறார். முர்ரே தனது காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நைக் கைரிஜியஸை தோற்கடித்தார்.

அரையிறுதியில் ஷரபோவா

மகளிர் ஒற்றையர் பிரிவு ரஷ்யாவின் மரியா ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடைபெற்ற காலிறுதிச்சுற்றில் கனடாவின் போச்சார்டை ஷரபோவா எதிர்கொண்டார். இதில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஷரபோவா எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் தனது சகநாட்டு வீராங்கனையான மகரோவாவை ஷரபோவா எதிர்கொள்ள இருக்கிறார். மகளிர் டென்னிஸ் தரவரிசையில் மகரோவா 11-வது இடத்தில் உள்ளார். ஷரபோவா 2-வது இடத்திலும் உள்ளனர்.

முன்னதாக மகரோவா தனது காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள கனடாவின் சிமோனா ஹெலப்பை 6-4, 6-0 என்ற நேர் செட்களில் அதிரடியாக வீழ்த்தினார். எனவே மகரோவா அரையிறுதி ஆட்டத்தில் ஷரபோவாவுக்கு கடும் சவாலாக இருப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x