Published : 10 Jan 2015 05:54 PM
Last Updated : 10 Jan 2015 05:54 PM
சிட்னி டெஸ்ட் போட்டி டிரா ஆனதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று ஆஸ்திரேலியா வென்றது. இந்த டெஸ்ட் தொடரில் தொடக்க வீரராக ஆஸ்திரேலியாவில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை முரளி விஜய் பெற்றுள்ளார்.
சிட்னி 2-வது இன்னிங்சில் 80 ரன்கள் எடுத்த விஜய் இந்தத் தொடரில் 482 ரன்களை 6,25 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஒரு தொடரில் இவரது சிறந்த ரன் குவிப்பாகும் இது. முன்னதாக 2012ஆம் ஆண்டு 4 டெஸ்ட்களில் 430 ரன்களை முரளி விஜய் எடுத்திருந்தார்.
மேலும், ஆஸ்திரேலியாவில் இந்திய தொடக்க வீரர் ஒருவரின் அதிகபட்ச மொத்த ரன்களும் முரளி விஜய்யின் 482 ரன்களே.
இது தவிர ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு சதம் 4 அரைசதங்களுடன் 5 அரைசதம் அல்லது அரைசதத்திற்கு கூடுதலான ரன்களை எடுத்தவர் என்ற விதத்திலும் புதிய இந்திய தொடக்க வீரருக்கான சாதனையை விஜய் நிகழ்த்தியுள்ளார்.
டிரா ஆன டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் சராசரி 70.53. அதே போல் டிரா ஆன டெஸ்ட் போட்டிகளில் கோலி 1058 ரன்களை 9 டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார். இதில் 5 சதங்கள் 4 அரைசதங்கள் அடங்கும்.
இந்த டெஸ்ட் தொடரில் கோலி எடுத்தது 692 ரன்கள் (சராசரி 86.50). 4ஆம் நிலையில் களமிறங்கும் இந்திய வீரர்களில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை எடுத்துள்ளவர் தற்போது கோலியே. மேலும் டெஸ்ட் வரலாற்றில் 5-வது அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும் இது. 1947-ல்டி.சி.எஸ். காம்ப்டன் தென் ஆப்பிரிக்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 753 ரன்களையும், 1952-52 தொடரில் இந்தியாவுக்கு எதிராக மே.இ.தீவுகள் வீரர் எவர்டன் வீக்ஸ் 716 ரன்களையும், 2003-04 டெஸ்ட் தொடரில் ஜாக் காலிஸ் மே.இ.தீவுகளுக்கு எதிராக 712 ரன்களையும், 1929-30 தொடரில் ஹெண்ட்ரன் என்ற வீரர் மே.இ.தீவுகளுக்கு எதிராக 693 ரன்களையும் எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 992 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 62.00. இதில் 5 சதங்கள், 2 அரைசதங்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மைதானங்களில் விராட் கோலி அதிக ரன்கள் எடுத்த 4-வது இந்திய வீரராவார். சச்சின் டெண்டுல்கர் 20 டெஸ்ட் போட்டிகளில் 1,809 ரன்களை 53.20 என்ற சராசாரியிலும், லஷ்மண் 15 டெஸ்ட் போட்டிகளில் 1236 ரன்களை 44.14 என்ற சராசரியிலும், ராகுல் திராவிட் 15 டெஸ்ட் போட்டிகளில் 1143 ரன்களை 43.96 என்ற சராசரியிலும் இதற்கு முன்னர் எடுத்துள்ளனர்.
நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 25 முறை ஒரு இன்னிங்ஸில் பவுலர்கள் 100 அல்லது அதற்கும் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்தனர். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறாகும். இதற்கு முன்னர் 1924-25-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து பவுலர்கள் 23 முறை 100 ரன்களுக்கும் மேல் ஒரு இன்னிங்ஸில் விட்டுக் கொடுத்துள்ளனர்.
சுரேஷ் ரெய்னா தனது கடைசி 3 இன்னிங்ஸ்களில் ரன் எதையும் எடுக்கவில்லை. ஹேட்ரிக் ‘டக்’ அவுட்கள் ஆகியுள்ளார். சிட்னியில் 2 இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆன ரெய்னா, இதற்கு முன்னர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், ஒவல் மைதானத்தில் (2011) இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகியுள்ளார். 7 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 5 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். மொகீந்தர் அமர்நாத்திற்குப் பிறகு டாப் இந்திய பேட்ஸ்மென் ஒருவர் டெஸ்ட் வாழ்வில் இருமுறை இரு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகியுள்ள வீரர் சுரேஷ் ரெய்னா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT