Last Updated : 06 Jan, 2015 06:52 PM

 

Published : 06 Jan 2015 06:52 PM
Last Updated : 06 Jan 2015 06:52 PM

கேள்விகளைச் சந்திக்காத தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல்: செய்தியாளர்கள் அதிர்ச்சி

உலகக்கோப்பை கிரிக்கெட் அணியை அறிவிக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்திய அணித் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கேள்விகளுக்கு பதில் அளிக்காதது செய்தியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சந்தீப் பாட்டீல் தேர்வுக்குழுத்தலைவராகி சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆனால், எந்த ஒரு தருணத்திலும் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.

இந்த முறை உலகக் கோப்பை அணியை அறிவிக்கும் சந்திப்பில் சந்தீப் நிச்சயம் கேள்விகளைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மும்பையில் இன்று பிசிசிஐ அலுவலகம் முன்பு காத்திருந்த பத்திரிகையாளர்களை செயலர் சஞ்சய் படேல் அறிவிப்பின்றி முறையான செய்தியாளர்கள் சந்திப்பிற்கு உள்ளே அழைத்தார்.

சஞ்சய் படேலுடன் சந்தீப் பாட்டீலும் இருந்தார். ஆனால் அணியை அறிவித்ததும் சஞ்சய் படேல், கேள்விகளுக்கு பதில் அளித்ததும் சஞ்சய் படேல். செய்தியாளரக்ள் சந்தீப் பாட்டீலை நோக்கி கேள்விகளைக் கேட்டும் சஞ்சய் படேல்தான் பதிலளித்தார்.

இன்று சிட்னி டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா விளையாடதது ஏன் என்பதற்கு மட்டும் அவருக்கு முழங்கால் காயம் ஏற்பட்டதாக சஞ்சய் படேலிடம் சந்தீப் தெரிவித்தார்.

1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா கபில்தேவ் தலைமையில் வென்ற இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்த சந்தீப் பாட்டீல் ஏன் பதிலளிக்காமல் உடனிருந்தார் என்பது செய்தியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வுக்குழு தலைவராக இருந்த போது விரேந்திர சேவாக் பற்றி செய்தியாளர் ஒருவர் மீண்டும் மீண்டும் கேட்க எரிச்சலடைந்த ஸ்ரீகாந்து அவரை நோக்கி கடும் சொற்களைப் பயன்படுத்தினார். அதிலிருந்து தலைமைத் தேர்வாளர் செய்தியாளர்களுக்கு நேரடியாக பதில் அளிப்பதை பிசிசிஐ நிறுத்தி வைத்துள்ளது போலும்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு அணித் தேர்வுக்குழு கூட்டம் முடிந்த பிறகு பிசிசிஐ தலைமை அலுவலகத்திற்குள் செய்தியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ-யைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x