Published : 28 Jan 2015 01:23 PM
Last Updated : 28 Jan 2015 01:23 PM
மிட்செல் ஜான்சனைக் காட்டிலும் மிட்செல் ஸ்டார்க் தனது அபாரமான பந்துவீச்சினால் ஆஸ்திரேலிய அணியை சாம்பியனாக்க முடியும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் இதுவரை 32 ஒருநாள் போட்டிகளில் 20.62 என்ற சராசரியின் கீழ் 61 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் இதே 30க்கும் மேற்பட்ட போட்டிகளில் கிளென் மெக்ரா, பிரெட் லீ, கிரெய்க் மெக்டர்மட், மிட்செல் ஜான்சன் ஆகியோரைக் காட்டிலும் முன்னிலை வகிக்கிறார்.
இந்நிலையில் வாசிம் அக்ரம் கூறியிருப்பதாவது, “ஸ்டார்க்கிடம் அத்தகைய திறமை இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படும் திறமை அவரிடம் உள்ளது.
அவரிடம் வேகம் உள்ளது, ஸ்விங் உள்ளது, மேலும் சாதுரியமாக வீசும் திறமையும் உள்ளது. குறிப்பாக புதிய பேட்ஸ்மென் களமிறங்கும் போது அவர்களை கதிகலங்கச் செய்யும் திறமை மிக முக்கியமானது.
மிட்செல் ஜான்சன், ஸ்டார்க் இருவரும் அணியில் இருப்பது எதிரணியினருக்கு பெரும் அச்சுறுத்தல்தான். இந்த பிட்ச்களில் இவர்கள் வீசும் வேகத்தில் எதிர்கொள்வது மிகக்கடினமான சமாச்சாரம். புதிய பந்தில் வீச இவர்கள் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கக் கூறினால் என்னுடைய தெரிவு மிட்செல் ஸ்டார்க்தான்.
நான் கேப்டனின் பார்வையிலிருந்து பார்க்கும்போது வேகம், ஸ்விங், யார்க்கர்கள் என்று அச்சுறுத்தக்கூடிய 2 பேர் ஒரு அணியில் இருப்பது ஒரு பெரிய விஷயம்.
மேலும் முடிவு ஓவர்களில் ரவுணட் த விக்கெட்டிலிருந்து ஸ்டார்க் யார்க்கர்களை வீசுகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை ரவுண்ட் த விக்கெட்டில் ஆடுவது மிக மிக கடினம்.”
என்றார் வாசிம் அக்ரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT