Published : 18 Jan 2015 12:52 PM
Last Updated : 18 Jan 2015 12:52 PM

ரோஹித் சதத்தின் துணையுடன் இந்தியா 267 ரன்கள் சேர்ப்பு

மெல்போர்னில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இந்தியா 268 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியின் ரோஹித் சர்மா சதமடித்து, மெல்போர்ன் மைதானத்தில் சதமடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ரோஹித் சர்மா, தவான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரின் 5-வது பந்திலேயே 2 ரன்களுக்கு தவான் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து வந்த ரஹானே 12 ரன்களுக்கும், கோலி 9 ரன்களுக்கும் ஆட்டமிழக்க 13-வது ஓவர் முடிவில் இந்தியா 59 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அடுத்து களமிறங்கிய ரெய்னா, ரோஹித் சர்மாவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சீராக ரன் சேர்க்கத் தொடங்கினர். ரோஹித் சர்மா, 68 பந்துகளில் தன் அரை சதத்தைக் கடந்தார். ரெய்னா 61 பந்துகளில் அரை சதம் எட்டினார்.

ஸ்டார்க் வீசிய பந்தில் 51 ரன்களுக்கு ரெய்னா பெவிலியன் திரும்பினார். ரெய்னா - ரோஹித் சர்மா ஜோடி பார்ட்னர்ஷிப்பில் 126 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து கேப்டன் தோனி களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த ரோஹித் சர்மா 109 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் சதத்தை எட்டினார்.

பேட்டிங் பவர்ப்ளே ஓவர்களில் இந்திய அணி ரன் சேர்ப்பை விட, விக்கெட் இழக்காமல் ஆடுவதிலேயே கவனம் செலுத்தியது. ஸ்டார்க் வீசிய 45-வது ஓவரில் தோனி 19 ரன்கள் வீழ்ந்தார், தொடர்ந்து வந்த அக்‌சர் படேல் 2 பந்துகளை மட்டுமே சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த விக்கெட்டுகளால் இந்திய அணியின் ஸ்கோர் சேர்ப்பு வேகம் குறைந்தது.

49-வது ஓவரில் ரோஹித் சர்மா 138 ரன்களுக்கு ஸ்டார்க் வீசிய ஃபுல்டாஸ் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது ஸ்டார்க்கின் 5-வது விக்கெட்டாகவும் அமைந்தது. அடுத்து ஆட வந்த புவனேஸ்வர் குமார் முதல் பந்திலேயே ஸ்டம்பைப் பறிகொடுத்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்களை எடுத்தது. ஆஸ்திரெலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 10 ஓவர்கள் வீசி 43 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x