Published : 23 Jan 2015 03:59 PM
Last Updated : 23 Jan 2015 03:59 PM
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இத்தாலி வீரர் ஆண்ட்ரியாஸ் செப்பி, ரோஜர் பெடரரை 6-4, 7-6, 4-6, 7-6 என்று 4 செட்களில் 3-1 என்று கைப்பற்றி வீழ்த்தினார்.
2001-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இவ்வளவு விரைவில் ரோஜர் பெடரர் வெளியேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செப்பி 11 போட்டிகளில் இப்போதுதான் ரோஜர் பெடரரை வீழ்த்துகிறார். செப்பிக்கு இந்த டென்னிஸ் தொடரில் தரவரிசை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது செட் டைபிரேக்கரில் பெடரர் 4-1 என்று முன்னிலையில் இருந்தார். ஆனால் அடுத்த 7 சர்வ்களில் 6 சர்வ்களில் செப்பி வெற்றி பெற பெடரர் அனுமதித்தார்.
அதேபோல் 4-வது செட் டை பிரேக்கரிலும் 3-1 என்று முன்னிலை பெற்றிருந்த பெடரர் தன் சர்வில் இரட்டைத் தவறைச் செய்தார். இதனால் செப்பி வெற்றி பெற முடிந்தது.
இந்தத் தோல்வியினால் ஆஸி. ஓபன் போட்டிகளில் 8 ஆண்டுகளில் முதன் முதலாக ரோஜர் பெடரர் இல்லாத அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
14 ஆண்டுகளில் முதல் முதலாக 4-வது சுற்றில் பெடரர் விளையாட மாட்டார் என்ற சூழ்நிலை எழுந்துள்ளது.
இதற்கு முன்னால் செப்பி, பெடரரை ஒரேயொரு செட்டில்தான் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் செட்டில் இருவரும் 4-4 என்று சமநிலை வகித்தனர். அப்போது செப்பி, பெடரர் சர்வை முறியடித்தார். அவரது பேக் ஹேண்ட் ஷாட்கள் பெடரரின் ஃபோர் ஹேண்ட் ஷாட்களையே தவறிழைக்கச் செய்தது.
இரண்டாவது செட் டை பிரேக்கர் ஆட்டத்தில் பெடரரின் வாலி எதுவும் சரியாக அமையவில்லை.
3-வது செட்டில் பெடரர் தனக்குத் தானே பேசத்தொடங்கினார். தொடக்கத்திலேயே சில அபாரமான பாஸிங் ஃபோர் ஹேண்ட் ஷாட்களை ஆடி பிரேக் கொடுத்து 2-1 என்று முன்னிலை வகித்தார். பிறகு தன் சர்வ்களை வென்று செட்டை 6-3 என்று கைப்பற்றினார்.
ஆனால் 4-வது செட்டில் களைப்பாகக் காணப்பட்டார் பெடரர். சூரிய ஒளி ஆடுகளத்தை ஒரு புறம் வெளிச்சமாகவும், ஒரு புறம் நிழலாகவும் மாற்றியது இதனால் எதிராளியின் நகர்வு உத்தி ஆகியவற்றை கணிக்க முடியவில்லை. நிழலில் பந்தை வாங்கிய செப்பி பெடரரின் பேக்ஹேண்டிற்கு அடித்துக் கொண்டிருந்தார்.
இந்த செட் டைபிரேக்கரில்தான் பெடரர் ஒரு பேக்ஹேண்ட் வின்னரை சாதிக்க முடிந்தது. அதன் மூலம் 5-4 என்று முன்னிலை வகித்தார்.
சர்வில் 2-ஐ வென்றால் டை பிரேக்கரில் அவரது வெற்றி எண்ணிக்கை 369-ஆக இருந்திருக்கும். டைபிரேக்கில் பெடரர் 189 முறை தோல்வி கண்டிருக்கிறார்.
ஆனால் பெடரரின் அடுத்த பேக்ஹேண்ட் சரியாக அமையவில்லை. செப்பி தனது ஃபோர்ஹேண்ட் ஷாட்டை பிரமாதமாக அடிக்க மேட்ச் பாயிண்ட் வந்தது.
கடைசியில் செப்பியின் சக்தி வாய்ந்த ஃபோர்ஹேண்டை தவிர்க்க பெடரர் நெட்டிற்கு முன்னேற முயல அவரது ஷாட் பெடரரைக் கடந்தது. செப்பியின் வாழ்வில் ஒரு பொன்னான கணம். ஆம். அவரால் நம்ப முடியவில்லை. பெடரரை வீழ்த்தி விட்டோம் என்பதை அவரால் நம்ப முடியவில்லை.
55 முறை பெடரர் தனது ஷாட்களை தவறாக அடித்தது அவருக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
செப்பி தனது வெற்றி குறித்துக் கூறுகையில், “நான் அதிர்ச்சிகரமாக ஆடினேன் என்று நினைக்கவில்லை; மாறாக எனக்குத்தான் இந்த வெற்றி அதிர்ச்சி அளித்துள்ளது.”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT