Published : 06 Jan 2015 02:59 PM
Last Updated : 06 Jan 2015 02:59 PM

சிட்னி டெஸ்ட்: வறண்ட ஆடுகளம்; கோட்டை விடப்பட்ட கேட்ச்கள்; திருந்தாத பந்து வீச்சு

சிட்னி டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் இந்திய அணிக்கு பலவிதங்களிலும் மறக்கப் படவேண்டிய தினமாக அமைந்தது. டாஸில் தோல்வி, வறண்ட தார்ச்சாலையாக ஆடுகளம், விடப்பட்ட கேட்ச்கள் என்று இந்திய அணி ஒரு சாதாரணத்திற்கும் கீழான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆஸ்திரேலிய அணியில் எதிர்பார்த்தது போல் ஜான்சன் இல்லை. இந்திய அணியில் தோனிக்குப் பதில் சஹா என்பது முடிவான விஷயம். ஆனால் மற்ற நீக்கங்களில் அதிர்ச்சி அளித்தது புஜாராவின் நீக்கமே.

ஷிகர் தவனுக்கு ஒரு பாடம் கற்பிப்பது நல்லதுதான். அதனால் அவரை அமர வைத்தது ஓரளவுக்கு சரியே. அந்த வாய்ப்பை தொடக்க வீரராகக் களமிறங்கும் ராகுல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், ஆனால் இந்த இளம் வீரர் தனது பீல்டிங்கில் இன்று கேப்டன் கோலியையும் இந்திய ரசிகர்களையும் வெறுப்பேற்றினார் என்றால் மிகையாகாது. ஆனால் புஜாராவை உட்கார வைத்தது சாரி, கொஞ்சம் ஓவர் என்றுதான் தெரிகிறது. ரெய்னாவின் டெஸ்ட் ஃபார்ம் பற்றி நிர்ணயமில்லா நிலை இருக்கும் போது புஜாராவை உட்கார வைத்தது சரியென்று படவில்லை. வர்ணனையாளர்களும் புஜாராவை நீக்கியது பற்றி மாற்றுக் கருத்துகளையே தெரிவித்தனர்.

புஜாராவுக்கு பதில் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது எந்த அடிப்படையில் என்பது புரியாத புதிர்.

அதே போல் இசாந்த் சர்மாவா, உமேஷ் யாதவ்வா என்றால் இசாந்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும், ஏனெனில் அவர் குறைந்தது டேவிட் வார்னரின் பேட்டிங் மீது சில சந்தேகங்களை உருவாக்கியிருந்தார். ஓரளவுக்கு லைன், லெந்த்தில் வீசி வந்தார். அவரை உட்கார வைத்ததும் இந்திய பந்துவீச்சுக்கு பின்னடைவு கொடுத்தது. புவனேஷ் குமார் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார், ஆனால் அவருக்கு ஸ்விங்கும் இல்லை, பந்தில் வேகமும் இல்லை.

சிட்னியில் கொளுத்தும் வெயிலில் வேகப்பந்து வீச்சாளர்கள் லைன் மற்றும் லெந்த்தை பிடித்து வீச வேண்டியது போக, ஷாட் பிட்ச், லெக் திசையில் ஓவர் பிட்ச் பந்துகள் என்று பவுண்டரிகளை வாரி வழங்கினர். மொகமது ஷமி மற்ற போட்டிகளை ஒப்பிடுகையில் இன்று தொடக்க ஓவர்களை நன்றாகவே வீசினார்.

கிறிஸ் ராஜர்ஸிற்கு அவர் வீசிய சில பந்துகள் அவரை நிறையவே தடுமாறச் செய்தன. இந்நிலையில்தான் ஏகப்பட்ட பவுண்டரிகள் அடிக்கப்பட்டு 7-வது ஓவர் முடிவில் 46 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்து அதிரடி தொடக்கம் கண்டது.

8-வது ஓவரில் மொகமது ஷமி அருமையான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினார். கிறிஸ் ராஜர்ஸ் அப்போது 19 ரன்களை எடுத்திருந்தார். ஒரு பந்து லெந்த்தில் பிட்ச் ஆகி எழும்பி வெளியே செல்ல ராஜர்ஸ் அதனை ஆட முயன்று பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு நேராக 2-வது ஸ்லிப்பில் கேட்ச் பிடிக்கக் கூடிய உயரத்தில் மிக எளிதான ஒரு கேட்சாக சென்றது. ஆனால இளம் வீரர் ராகுல் கையை பூமியை நோக்கி விரித்த படியே அவர் கேட்சைப் பிடிக்க முயல பந்து நழுவி விழுந்தது. அடுத்த பந்தே பவுண்டரி ஆஸ்திரேலியா 50 ரன்களை 8-வது ஓவரில் எட்டியது.

பிறகு வார்னர் 62 ரன்களில் இருந்த போது பாயிண்ட் திசையில் நின்று கொண்டிருந்த ராகுல், அஸ்வின் வீசிய பந்தை வார்னர் கட் செய்ய விரைவாக நகராமல் மந்தமாகச் செயல்பட்டு மற்றுமொரு வாய்ப்பைத் தவறவிட்டார்.

இது போதாதென்று ஆட்டம் முடியும் தறுவாயில் வாட்சன், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை அஸ்வின் ஸ்லிப்பில் கோட்டை விட்டார்.

சிட்னி டெஸ்ட் போட்டியின் முதல் தினத்தை கேட்சை விட்டு தொடங்கிய இந்திய அணி கேட்சை கோட்டை விட்டே முடித்தது.

ராஜர்ஸ், வார்னர் ஆகியோருக்கு விடப்பட்ட கேட்ச்களால் இருவரும் இணைந்து 200 ரன்களைக் குவித்தனர்.

உமேஷ் யாதவ் ஓவருக்கு 6.06 என்ற வீதத்தில் ரன்களை விட்டுக் கொடுத்தார். புவனேஷ் குமாரின் பந்து வீச்சில் ஒரு தாக்கமும் இல்லை. அஸ்வின் மட்டுமே இன்று குறைந்த அளவில் வாய்ப்புகளை ஏற்ப்டுத்தினார். ரெய்னா, வாட்சனுக்கும், ஸ்மித்திற்கும் அதிகம் வீசியதால் அவர்கள் இருவரும் நன்றாக செட்டில் ஆகியுள்ளனர்.

இன்று உண்மையில் 400 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருக்க வேண்டும். வாட்சன் கொஞ்சம் மந்தமாக ஆடியதால் 348 ரன்களுடன் முடிந்தது.

நிச்சயம் ஆஸ்திரேலியா நாளை தேநீர் இடைவேளை வரை ஆடி 650-700 ரன்களை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கலாம். காரணம் இந்திய பவுலர்கள் அதிகம் பவுண்டரி பந்துகளை வீசுகின்றனர். அதாவது ஓவருக்கு 2 பவுண்டரி பந்துகள் வீசப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டைக் கொல்லும் பந்து வீச்சாக இந்திய பந்து வீச்சு உள்ளது. 3 ஸ்பின்னர்களை வைத்துக்கொண்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது.

இந்திய பவுலிங்கும், பீல்டிங்கும் எந்த வித நம்பிக்கையையும் அளிக்கவில்லை. மீண்டும் பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி ஏற்படும் டெஸ்ட் போட்டியாகவே இது அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x