Published : 14 Jan 2015 12:58 PM
Last Updated : 14 Jan 2015 12:58 PM

தேசிய போட்டியில் பங்கேற்றபின் ரயிலில் திரும்பிய ஹாக்கி வீராங்கனை மாயம்: அணி மேலாளர் மீது பெற்றோர் புகார்

17 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய பள்ளி ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுவிட்டு ரயிலில் தனியாக வீடு திரும்பிய வீராங்கனை மாயமானார். போதிய ஏற்பாடுகளைச் செய்து தராத பயிற்சியாளர் மீது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியைச் சேர்ந்தவர் கரீஷ்மா சோங்கர் (16). இவர், கடந்த 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ராஞ்சியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பினார் பைசாபாத் நகரிலிருந்து பேரலிக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார்.

அவருக்கு ரயிலில் முன்பதிவு வசதி செய்யப்படவில்லை. தனியாக வந்த அவர் மாயமானார். அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை. இதுதொடர்பாக பரேலி ரயில்வே காவல்துறையிடம் கரீஷ்மாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். கரீஷ்மா காணாமல் போனதற்கு பயிற்சியாளர்தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.

பயிற்சியாளரும், அணி மேலாளருமான ராகுல் சிங் கூறும்போது, “பைசாபாத் நகரைத்தான் அனைத்து வீராங்கனைகளும் ராஞ்சி செல்வதற்குக் கூடுவதற்காகத்தேர்வு செய்தோம். திரும்பி வரும்போது, அவர் காணாமல் போயுள்ளார். பைசாபாத் வரைதான் முன்பதிவு என முன்பே அனைவருக்கும் தெரிவித்து விட்டோம். வீராங்கனைகளை பைசாபாத்திலிருந்து திரும்ப அழைத்துச் செல்வது பெற்றோர்களின் பொறுப்பு எனக் கூறப்பட்டு விட்டது.

பைசாபாத்திலிருந்து வீடு திரும்பும்போது கரீஷ்மாவின் பெற்றோர் அங்கு வரவில்லை. என் முன்பாக, தனது பெற்றோரைத் தொடர்பு கொண்ட கரீஷ்மா தான் வீடு திரும்பவிருக்கும் ரயில் குறித்த விவரங்களைத் தெரிவித்தார்” என்றார்.

கரீஷ்மாவின் மொபைல் போனை அது இருந்த டவர் பகுதி வைத்து போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, லக்னோவில் இருப்பதாக பெற்றோரிடம் கரீஷ்மா போனில் தெரிவித்தபோது அவர் உண்மையில் பரபங்கி பகுதியில்தான் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், கரீஷ்மாவைத் தேடும்பணியில் தீவிரமாக காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்மா தெரிவித்துள்ளார்.

கரீஷ்மாவின் சகோதரர் சவுரவ், பயிற்சியாளர் கவனக்குறைவாக இருந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறும்போது, “பைசாபாத்திலிருந்து பரேலி வருவதற்கு கரீஷ்மாவுக்கு முன்பதிவு செய்யப்படவில்லை. மற்ற வீராங்கனைகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களே பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி விளையாட்டு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x