Published : 20 Jan 2015 05:57 PM
Last Updated : 20 Jan 2015 05:57 PM
இலங்கைக்கு எதிராக இன்று சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசி. 2-1 என்று முன்னிலை வகித்து வருகிறது.
முதலில் பேட் செய்த இலங்கை 50 ஒவர்களில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய நியூசி. 48.1 ஓவர்களில் வில்லியம்சனின் அபார சதத்துடன் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வெற்றியை துரிதப்படுத்திய நியூசி. விக்கெட் கீப்பர் லூக் ரோஞ்சியின் அதிரடி:
ஆட்டத்தின் 46-வது ஓவர் முடிந்தவுடன் நியூசி. 247/6 என்று இருந்தது. அதாவது 4 ஓவர்களில் வெற்றிக்குத் தேவை 30 ரன்கள். ஓரிரு விக்கெட்டுகளை இலங்கைக் கைப்பற்ற முடிந்திருந்தால் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்திற்குச் சென்றிருக்கும். ஆனால்... அப்போது 5 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருந்தார் ரோஞ்சி.
47-வது ஓவரை குலசேகரா சிறப்பாக வீச 5 ரன்களே கிடைத்தது. 47 ஓவர்களில் 252/6. தேவை 18 பந்துகளில் 25 ரன்கள்.
48-வது ஓவர் பெரேரா வீச வந்தார். ரோஞ்சியின் தாண்டவம் தொடங்கியது. ரவுண்ட் த விக்கெட் உத்தியைக் கடைபிடித்தார். முதல் பந்து மிட்விக்கெட்டில் பவுண்டரி.
அடுத்த பந்து மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆனது. ஆனால் இது ஃபுல் லெந்த் பந்து என்பதால் லாங் ஆனில் சிக்ஸ். 3-வது பந்து தாழ்வான புல்டாஸ். இதில் 2 ரன்கள் எடுக்கப்படுகிறது.
அடுத்த பந்தும் லெந்தில் வீசினார் பெரேரா. இம்முறை லாங் ஆஃபில் பந்து சிக்சர். 6வது பந்தை சற்றே இழுத்து ஸ்லோ பந்தாக வீசினார். அதுவும் லாங் ஆஃப் திசையில் சிக்சர் ஆனது. 24 ரன்கள் விளாசப்பட்டது. அதுவரை 7 ஓவர்கள் 34 ரன்கள் கொடுத்திருந்த பெரேராவின் பந்து வீச்சு 8 ஓவர்களில் 58 ரன்கள் என்று சேதமானது. லூக் ரோஞ்சி 15 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 32 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
49-வது ஓவர் முதல் பந்தில் வெட்டோரி பவுண்டரி அடிக்க நியூசி. வெற்றி பெற்றது. கடைசி வரை சென்றிருக்க வேண்டிய ஆட்டம் பெரேராவினால், ரோஞ்சியினால் ஒரு ஓவரில் முடிந்தே விட்டது.
வில்லியம்சன் அபார சதம்:
மார்டின் கப்தில் (20), மெக்கல்லம் (11) ஆகியோர் சடுதியில் ஆட்டமிழக்க 8வது ஓவரில் நியூசிலாந்து 41/2 என்று சரிவுடன் தொடங்கியது. ராஸ் டெய்லரும் 8 ரன்களில் வெளியேற, 16-வது ஓவரில் 63/3 என்று நியூசி. பிரச்சினைக்குள்ளானது. ஆனால் வில்லியம்சன், டெஸ்ட் போட்டிகளில் இலங்கை ஸ்பின்னர்களை ஆடி பழக்கப்பட்டதால் இந்த போட்டியிலும் திறம்பட ஸ்பின்னர்களை எதிர்கொண்டார்.
கிராண்ட் எலியட் (44) மறு முனையில் சிறப்பாக ஆதரவு அளிக்க இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 88 ரன்களைச் சேர்க்க முடிந்தது.
ரன் விகிதத்தை தனது அனாயாசமான ஆட்டத்தினால் எகிறிவிடாமல் பராமரித்து வந்தார். வில்லியம்சன் 61 பந்துகளில் அரைசதம் கடந்தார். எலியட் ஆட்டமிழந்த பிறகு அதிரடி வீரர் கோரி ஆண்டர்சன் இணைந்தார். இருவரும் 11 ஓவர்களில் 79 ரன்களை சேர்க்க வில்லியம்சன் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் சதம் கண்டார். ஆனால் அவர் 103 ரன்களை 107 பந்துகளில் எடுத்து பெரேராவிடம் ஆட்டமிழந்தார்.
இவர் அவுட் ஆகும் போது ஸ்கோர் 44-வது ஓவரில் 230/5 என்று இருந்தது. கோரி ஆண்டர்சன் 44 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 47 ரன்கள் எடுத்து தில்ஷன் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். 245/6 என்ற நிலையில் 45.4 ஓவர்கள் முடிந்து விட்டிருந்தன. அதன் பிறகே ரோஞ்சியின் அதிரடி ஆட்டத்தை விரைவில் முடித்து வைத்தது.
முன்னதாக இலங்கை அணியில் மகேலா ஜெயவர்தனே 82 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 94 ரன்களை அடித்தார். தில்ஷான் 44 ரன்களையும் சங்கக்காரா 76 ரன்களையும் எடுக்க இலங்கை 33-வது ஓவர் முடிவில் 180/2 என்று இருந்தது. இம்மாதிரி நிலையில் இலங்கை சாதாரணமாக 300 ரன்களை எடுக்கும். ஆனால் கடைசி 6 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. 180 ரன்களாக இருக்கும்போதே, சங்கக்காரா, மேத்யூஸ் ஆகியோரை இழந்தது.
பிறகு கோரி ஆண்டர்சன் ஜெயவர்தனேயை வீழ்த்திய பிறகு டிம் சவுதீ, மெக்லினாகன் அருமையாக வீசி கட்டுப்படுத்த இலங்கை 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT