Published : 14 Jan 2015 12:41 PM
Last Updated : 14 Jan 2015 12:41 PM
இந்தியாவின் மட்டை வலு எவ்வளவுதான் கூடினாலும் 20 விக்கெட்களை வீழ்த்தக்கூடிய பந்து வீச்சு இல்லாமல் வெற்றிகளைக் குவிப்பது பற்றிக் கனவு காண முடியாது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை இரண்டு முறை மட்டுமே இந்தியாவால் முழுக்க ஆட்டமிழக்கச் செய்ய முடிந்திருக்கிறது. அந்த இரண்டு சமயங்களிலும் ஆஸ்திரேலியா 500 ரன்களைக் கடந்த பிறகே ஆட்டமிழந்தது. இந்தியாவால் சில சமயங்களில் வெற்றிக்கு அருகே செல்ல முடிந்தது என்றால் அதற்கு ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ததுதான் காரணம். பந்து வீச்சின் மூலம் இந்தியா அந்த நிலையை எட்டவில்லை. பிரிஸ்பேனில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே இந்திய வேகப்பந்து வீச்சு வீரியத்துடன் வெளிப்பட்டது (130-6).
மற்ற சமயங்களில் யார் வேண்டுமானாலும் இரண்டு சாத்து சாத்திவிட்டுப் போகலாம் என்ற லட்சணத்தில்தான் இருந்தது.
சரியான அளவிலும் வரிசையிலும் போடும் கட்டுப்பாடு இல்லாததுதான் இந்தியப் பந்து வீச்சின் ஆகப் பெரிய பலவீனம். ஆஃப் திசையில் அடிக்கத் தோதாக வெளியில் போடுவது, எளிதில் ஃப்லிக் செய்ய ஏதுவாகக் கால் திசையில் உபத்திரவமில்லாத பந்துகளைப் போடுவது, எகிறு பந்துகளைத் தவறாக வீசுவது ஆகியவை இந்திய வேகப் பந்தின் அடையாளங்களாகவே மாறிவிட்டன. பந்து கழுத்துக்கு மேல் எழும்பினால் மட்டும் போதாது. எளிதாக கட் அல்லது புல் செய்யும் விதத்தில் தவறான வரிசையில் வீசினால் மட்டையாளர்களுக்கு ஒவ்வொரு ஓவரும் தீபாவளிதான். இப்படித்தான் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தார்கள் இந்திய வீச்சாளர்கள்.
உமேஷ் யாதவ் இதில் புதிய வரலாறே படைத்துவிட்டார். கடைசி டெஸ்ட் போட்டி நடந்த சிட்னியில் அவர் போட்ட விதமே இதற்குச் சான்று. இன்னும் கிட்டத்தட்ட ஒன்றே கால் நாள் ஆட்டம் மீதி இருக்கும் நிலையில் விரைவாக ரன் குவித்து டிக்ளேர் செய்து இந்தியாவை ஆடவைக்க வேண்டும் என்பது ஆஸ்திரேலியாவின் திட்டம். அவர்கள் விருப்பத்தை நிறை
வேற்றுவதற்காக அவர்களைக் காட்டிலும் அதிகம் உழைத்தவர்கள் இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள். குறிப்பாக மூன்று ஓவர்களில் 45 ரன்களை வழங்கிய உமேஷ் யாதவ்.
முகம்மது ஷமி அவ்வளவு மோசமில்லை என்றாலும் அவரும் அச்சுறுத்தும் பந்து எதையும் வீசிவிடவில்லை. முழு உடல் தகுதி இல்லாமல் பந்து வீசிய புவனேஸ்வர் குமார், மிகவும் மெதுவாகப் பந்து வீசி எதிரணியினரின் சுமையைக் குறைத்தார். அவர் ஸ்விங் பந்து வீச்சாளர் எனப் பெயர் எடுத்தவர். இனி, புவனேஸ்வர் ஸ்விங் குமார் என்று அவர் தன் பெயரை மாற்றிக்
கொண்டாலொழிய அவருடன் ஸ்விங்கைச் சேர்த்துச் சொல்வது சாத்தியமில்லை. புவனேஸ்வர் வீசும்போது விக்கெட் காப்பாளர் சுழல் பந்து வீச்சாளருக்கு நிற்பதைப் போல ஸ்டெம்புக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டார். வேகப் பந்து வீச்சாளருக்கு இதைவிடப் பெரிய அவமானம் இருக்க முடியாது.
வேகமும் இல்லை, ஸ்விங்கும் இல்லை. அளவிலோ வரிசையிலோ கட்டுப்பாடும் இல்லை. யார்க்கர்களையும் துல்லியமாக வீசுவதில்லை. பின் எதை வைத்து எதிரணியின் விக்கெட்டை வீழ்த்த முடியும்? மட்டையாளர் அபத்தமாகத் தவறு செய்ய வேண்டும்; அல்லது ரன் அவுட் ஆக வேண்டும்; அல்லது கருணை காட்ட வேண்டும். இதுதான் இந்திய வேகப் பந்து வீச்சின் நிலை. போதாக்குறைக்கு ஸ்லிப் பகுதியில் நன்றாகக் கேட்ச் பிடிக்கக்கூடியவர்களும் இல்லை. வேகப் பந்துக்கு உதவி செய்யும் களங்களிலேயே இந்த நிலை என்றால் பிற களங்களில் இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
சீரான தரத்துடன் தொடர்ந்து நன்கு வீசியவர் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே. அவரும் ஆஸ்திரேலிய அணியின் நாதன் லயனுக்கு இணையாக வீசினார் என்று சொல்ல முடியாது. அதுவும் கடைசிப் போட்டியில் மட்டுமே அவரால் தன்னுடைய இருப்பை நிரூபிக்க முடிந்தது.
பந்து வீச்சை ஒரே நாளில் மேம்படுத்திவிட முடியாது. பந்தை ஸ்விங் செய்யும் திறமையோ அபாயகரமான கட்டர்களை வீசும் திறமையோ அவ்வளவு எளிதாக வந்துவிடாது. ஆனால் துல்லியமான அளவிலும் வரிசையிலும் போடும் திறமையை பயிற்சி, முனைப்பு ஆகியவற்றால் வளர்த்துக்கொள்ள முடியும். குறைந்த அளவுள்ள பந்துகளைச் சரியான விதத்தில் பயன்படுத்துவதும் திறமையை விடவும் பயிற்சி சம்பந்தப்பட்ட விஷயம்தான். இந்திய வீச்சாளர்களால் ஏன் இதில் தேர்ச்சிபெற முடியவில்லை என்பது புரியாத புதிர். தங்கள் செயல்திறனை வளர்த்துக்கொள்ள விடாமல் அவர்களைத் தடுப்பது எது என்பது அணி நிர்வாகம் விளக்க வேண்டிய விஷயம்.
தலைமையின் தவறுகள் அணியின் தலைமையிலும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. இரண்டு போட்டிகளில் கோலியும் இரண்டில் தோனியும் அணிக்குத் தலைமை வகித்தார்கள். அவர்கள் அமைத்த தடுப்பு வியூகங்கள் பல சமயம் கேள்விக்குரியனவாக இருந்தன. கோலி பொதுவாகத் தாக்குதல் வியூகம் அமைத்தாலும் பல சமயம் அவரும் தோனியைப் போலவே தற்காப்பு வியூகத்தைச் சார்ந்திருந்தார். முதல் போட்டியில் அஸ்வினுக்குப் பதில் கரண் ஷர்மாவைச் சேர்த்ததும் சுழலுக்குச் சாதகமான சிட்னி மைதானத்தில் இரண்டாவது சுழல்பந்து வீச்சாளரைச் சேர்க்காமல் இருந்ததும் தலைமையின் தவறுதான். ஆஸ்திரேலியாவில் பெர்த், பிரிஸ்பேன் மைதானங்களைத் தவிர மற்ற மைதானங்களில் இந்தியா இரண்டு சுழலர்களை வைத்து ஆடியிருக்கிறது. அதற்குப் பலனும் கிடைத்திருக்கிறது. கடைசிப் போட்டியின் நான்காவது நாளில் அஸ்வினுக்கு மறுமுனையில் ஒரு ஸ்பின்னர் இருந்திருந்தால் ஆஸ்திரேலியாவால் அவ்வளவு விரைவாக ரன் குவித்திருக்க முடியாது. இந்தியாவுக்கான இலக்கும் குறைந்திருக்கும்.
முதல் போட்டி நடந்த அடிலெய்டில் கடைசி நாளில் 300க்கு மேற்பட்ட இலக்கைத் துரத்தி ஆடியது தீரமிக்க செயல்தான். கோலி ஆட்டமிழக்கும்வரை இந்த வியூகம் சரியானதுதான். ஆனா அவர் ஆட்டமிழந்த பிறகு வியூகம் மாறியிருக்க வேண்டும். அப்போது களத்தில் முன்னணி மட்டையாளர் யாரும் இல்லை. அதிக ஓவர்களும் மீதி இல்லை. இந்நிலையில் டிரா செய்ய முயலும்படி கடைநிலை மட்டையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
முதல் போட்டியில் டிரா செய்திருந்தால் ஆஸ்திரேலியாவின் நெருக்கடி கூடியிருக்கும். தடுமாறும் பந்து வீச்சு, தேறாத தடுப்பு வியூகம் ஆகியவற்றுக்கு மத்தியில் விஜய், கோலி, ரஹானே ஆகியோரின் மட்டை வலுவை வைத்துக்கொண்டு இந்திய அணி மானத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. இதர மட்டையாளர்களும் பந்து வீச்சாளர்களும் தங்கள் பொறுப்புக்கு ஏற்ற செயல்திறனை வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில் இந்திய டெஸ்ட் அணியால் சர்வதேச அணிகளுக்குச் சவாலாக விளங்க முடியும்.
இன்னும் சில மாதங்களுக்கு டெஸ்ட் ஆட்டம் எதுவும் இருக்கப்போவதில்லை என்பதால் உடனடியாக இதில் யாரும் கவனம் செலுத்தப்போவதில்லை. ஆனால் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆகப் பெரிய சவாலான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா எப்படிச் செயல்படுகிறது என்பதுதான் கிரிக்கெட்டில் அதன் தரத்தைத் தீர்மானிக்கும் என்பதால் இந்தக் கவலையை அணி நிர்வாகம் ஒரு கணமும் மறக்க முடியாது. மறக்கவும் கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT