Published : 21 Dec 2014 10:54 AM
Last Updated : 21 Dec 2014 10:54 AM
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி இஞ்சுரி நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
இதன்மூலம் ஐஎஸ்எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையும் அந்த அணிக்கு கிடைத்துள்ளது.
முகமது ரபீக் கோலடித்து வெற்றி தேடித்தந்திருந்தாலும், கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது அதன் கோல் கீப்பர் எபோலா இடெல்தான். அவர், கேரளாவின் 3-க்கும் மேற்பட்ட கோல் முயற்சியை மிக துல்லியமாக தடுத்தார். இல்லையெனில் கேரளா அபார வெற்றி பெற்றிருக்கும்.
மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் கேரள வீரர் அஹமதுவின் கோல் முயற்சியை கொல்கத்தா கோல் கீப்பர் இடெல் தகர்த்தார். 26-வது நிமிடத்தில் கொல்கத்தாவின் முகமது ரபியை கீழே தள்ளியதற்காக கேரள வீரர் நிர்மல் யெல்லோ கார்டு பெற்றார். இதன்பிறகு 35-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் அர்னால் லிபெர்ட்டின் கோல் முயற்சியை அற்புதமாக தடுத்தார் கேரள கோல் கீப்பர் டேவிட் ஜேம்ஸ்.
இதைத் தொடர்ந்து 40-வது நிமிடத்தில் கேரளாவுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் பந்தை உதைத்த கேப்டன் இயான் ஹியூம், கோல் வலையின் இடது பகுதியில் துல்லியமாக பந்தை செலுத்தினார். ஆனால் அதிவேகமாக பாய்ந்த கொல்கத்தா கோல் கீப்பர் இடெல் மிகத்துல்லியமாக முறியடித்து தனது அணியை காப்பாற்றினார்.
இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் மற்றொரு கோல் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டது கேரளா. இதன்பிறகு 83-வது நிமிடத்தில் கேரளத்தின் மற்றொரு கோல் வாய்ப்பை இடெல் முறியடித்த நிலையில், இஞ்சுரி நேரத்தில் கிடைத்த கார்னர் கிக் வாய்ப்பில் போடி கோல் கம்பத்தை நோக்கி பந்தை கிராஸ் செய்தார். அப்போது கோல் கம்பத்தின் இடதுபுறத்தில் இருந்த மாற்று ஆட்டக்காரர் முகமது ரபீக் தலையால் முட்டி கோலடிக்க, கொல்கத்தா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT