Published : 17 Dec 2014 10:52 AM
Last Updated : 17 Dec 2014 10:52 AM

ஐஎஸ்எல்: இறுதிச்சுற்றில் கேரளா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணிக்கு எதிரான அரையிறுதி 2-வது சுற்றின் கூடுதல் நேரத்தில் ஒரு கோல் அடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது கேரளா.

சென்னையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி 2-வது சுற்றில் சென்னை அணி 3 கோல் அடித்து வெற்றி பெற்றது. முதல் சுற்று ஆட்டத்தில் கேரளா 3 கோல் அடித்து வெற்றி பெற்றிருந்ததால், இறுதிச்சுற்றை தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் கேரளா வெற்றி கண்டது.

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே தாக்குதல் ஆட்டத்தில் இறங்கியது சென்னை. 12 மற்றும் 19-வது நிமிடங்களில் சென்னை அணியின் இரு கோல் வாய்ப்பை கேரள கோல் கீப்பர் நேன்டி முறியடித்தார்.

28-வது நிமிடத்தில் சென்னை கேப்டன் மென்டியின் கால் மீது உதைத்ததால் கேரள பின்கள வீரர் மெகாலிஸ்டருக்கு 2-வது யெல்லோ கார்டு கொடுத்தார் நடுவர். அவர் ஏற்கெனவே கார்னர் கிக் வாய்ப்பில் பந்தை உதைக்க தாமதம் செய்ததால் 8-வது நிமிடத்தில் யெல்லோ கார்டு பெற்றிருந்தார்.

2 யெல்லோ கார்டுகளை பெற்றால் அது ரெட் கார்டாக கணக்கில் கொள்ளப்படும். அதனடிப்படையில் மெகாலிஸ்டர் வெளியேற்றப்பட்டார். இதனால் 28-வது நிமிடத்தில் இருந்து கேரள அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பிறகு 42-வது நிமிடத்தில் மெட்டாரஸி கொடுத்த கிராஸில் சில்வர்ஸ்டார் கோலடிக்க சென்னை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி கிடைக்க, அதில் மெட்டாரஸி கோலடித்தார்.

ஆனால் அவர் பந்தை உதைத்தபோது சென்னை ஸ்டிரைக்கர் மவுரிஸ் பெனால்டி பாக்ஸுக்குள் சென்றதால் அதை கோல் இல்லை என நடுவர் அறிவித்தார். 57-வது நிமிடத்தில் சென்னை பின்கள வீரர் நெஸ்டாவுக்கு காயம் ஏற்பட, அவருக்குப் பதிலாக இலானோ களம்புகுந்தார்.

இதன்பிறகு ஆட்டத்தில் மேலும் விறுவிறுப்பு ஏற்பட்டது. 76-வது நிமிடத்தில் கேரளாவின் ஜிங்கான் ஓன் கோலடிக்க, சென்னை 2-0 என முன்னிலை பெற்றது.

77-வது நிமிடத்தில் கேரள கோல் கீப்பர் நேன்டி காயம் காரணமாக வெளியேற, லூயிஸ் களம்புகுந்தார். அவர் 81-வது நிமிடத்தில் சென்னையின் கோல் வாய்ப்பை கடுமையாகப் போராடி தடுத்தார். இந்த நிலையில் 90-வது நிமிடத்தில் ஜேஜே கோலடிக்க, சென்னை 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, 3 கோல்களுடன் சமநிலை பெற, இறுதிச்சுற்றை தீர்மானிக்க கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அதில் 14-வது நிமிடத்தில் மெட்டாரஸிக்கு ரெட் கார்டு கொடுத்தார் நடுவர். இதனால் சென்னை அணியும் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பிறகு கேரளத்தின் பியர்சன் 117-வது நிமிடத்தில் கோலடிக்க, கேரளா இறுதிச்சுற்றை உறுதி செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x