Published : 08 Dec 2014 04:31 PM
Last Updated : 08 Dec 2014 04:31 PM
பிலிப் ஹியூஸ் அகால மரணத்திற்குப் பிறகு கனத்த இதயத்துடன் ஆஸ்திரேலியா நாளை அடிலெய்டில் கிளார்க் தலைமையில் களமிறங்குகிறது. மாறாக உற்சாகமான கோலியின் தலைமையில் புதிய திருப்பம் காண இந்தியா எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.
இந்திய அணியில் புவனேஷ் குமார் ஆடமுடியாது போயுள்ளது ஒரு பின்னடைவே. ஆனாலும் நாளை காலைதான் கூற முடியும் என்று கூறியுள்ளார் கோலி.
புவனேஷ் குமார் சிக்கனமாக வீசுவதோடு, தொடக்கத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்றும் திறமையை சமீபமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நிரூபித்துள்ளார். மேலும், பின்னால் பேட்டிங்கில் களமிறங்கி அருமையான திறமையை வெளிப்படுத்தி ஒரு முழுமையான டெஸ்ட் ஆல்ரவுண்டராக மாறும் சூழலில் அவருக்குக் கணுக்கால் காயம் ஏற்பட்டுள்ளது.
மொகமது ஷமி, ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்தில் சோபிக்காமல் பெரும் ஏமாற்றமளித்தார். அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் கூட இவரை விட ஆஸ்திரேலிய பிட்ச்களில் அனுபவமிக்க உமேஷ் யாதவ் விளையாடுவதுதான் சிறந்தது. கடந்த முறை தோனி தலைமையில் இந்தியா 4-0 என்று படுதோல்வி கண்ட தொடரில் உமேஷ் யாதவ் சற்றும் எதிர்பாராத வகையில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது வேகம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு ஒரு ஆச்சரியமான எதிர்கொள்ளலாக அமைந்தது.
ஆனால் தோனியின் விசித்திரமான பீல்ட் செட்டினால் உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா என்று அனைவருமே கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
வருண் ஆரோன், இசாந்த் சர்மா, மொகமது ஷமி, உமேஷ் யாதவ் என்று 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் நல்லதுதான், ஏனெனில் இது பேட்டிங் பிட்ச். பவுலர்கள் விரைவில் களைப்படைய வாய்ப்பிருக்கிறது.
மேலும், மைக்கேல் கிளார்க், மிட்செல் ஜான்சனை எப்படி பயன்படுத்துகிறாரோ அப்படித்தான் விராட் கோலி, வருண் ஆரோனைப் பயன்படுத்த வேண்டும். தொடக்கத்தில் புதிய பந்தை ஆரோனிடம் கொடுக்க வேண்டும். 4 அல்லது 5 ஓவர்கள் ஸ்பெல்களாக அவரது பந்து வீச்சை விராட் கோலி பிரித்துக் கொள்வது அவசியம்.
முதலில் இந்திய ஸ்லிப் பீல்டர்கள் கேட்ச்களை கோட்டை விடுதல் கூடாது. ஆஸ்திரேலியாவில் இந்தியா அவமானங்களைத் தவிர்க்க ஸ்லிப் கேட்சிங் தரமானதாக இருப்பது அவசியம்.
தோனி செய்த தவறுகளை அறிந்து கோலி செயல்படுவது அவசியம்:
அயல்நாட்டுத் தொடர்களில் தோனி கடுமையான தவறுகளை இழைத்துள்ளார். களவியூகம் முதல் புதிய பந்தை எப்போது எடுப்பது என்பது வரை மோசமான முடிவுகளை எடுத்து வெற்றி பெற வாய்ப்பிருந்த போட்டிகளிலும் தோல்வியடையச் செய்த முடிவுகளாக தோனியின் முடிவுகள் அமைந்தன.
டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்பின்னரை வைத்து முதல் ஓவரைத் தொடங்குவது, அதுவும் டீப் பாயிண்ட், ஸ்வீப்பர் கவர் வைத்து அஸ்வினை வீசச் செய்வது, மறு முனையில் வேகப்பந்து வீச்சுக்கு ஸ்லிப் இல்லாமல் களவியூகம் அமைப்பது. முதல் ஸ்லிப்பை தள்ளி நிறுத்துவது என்று தோனியின் ‘திருவிளையாடல்கள்’ ஏராளம் ஏராளம்.
அந்தத் தவறுகளை கோலி செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.
கோலி முதலில் இங்கிலாந்தில் அவர் கோட்டை விட்ட பார்மை இங்கு கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடிலெய்ட் பிட்ச் உதவும். இங்கிலாந்தில் கோலியின் சராசரி 12.5. பார்ம் சரிவுக்கு பாதிகாரணம் ஜேம்ஸ் ஆண்டர்சன், மீதி காரணம் அனுஷ்கா சர்மா என்று கூறப்படுகிறது.
இந்த முறை அவருக்கு நல்ல பேட்டிங் பிட்ச் கிடைத்துள்ளது. தொடக்கத்தில் ஒரு சதத்துடன் ஆரம்பித்தால் ஆஸ்திரேலியா அணியினர் சற்றே பதட்டமடைய வாய்ப்புள்ளது.
முரளி விஜய் நல்ல பார்மில் உள்ளார். புஜாரா இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஷிகர் தவன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ரன்களை எடுக்கிறாரா என்பதைப் பார்க்கவுள்ளனர். இல்லையெனில் அவருக்கு பதிலாக கர்நாடகாவின் இளம் வீரர் ராகுல் அணிக்குள் வருவார்.
பயிற்சி ஆட்டங்களில் அஜிங்கிய ரஹானே சரியான ‘டச்’-ல் இருந்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்களே தெரிவிக்கின்றன. இந்த தொடரில் ரஹானேவிற்கு அருமையான வாய்ப்பு. ஏனெனில் அவர் பெரும்பாலும் உணவு இடைவேளைக்குப் பிறகே களமிறங்க வாய்ப்புள்ளதால், பிட்ச் பேட்டிங்கிற்கு நன்றாக மாறிவிடும். எனவே அவர் கவனத்துடன் ஆடினால் சீரான முறையில் ஆஸ்திரேலியாவில் ரன்களை எடுக்க முடியும்.
ஜான்சன், ரியான் ஹேரிஸ் பந்து வீச்சுகளை அடித்து ஆடி ரன்களைக் குவித்து விட்டால் ஆஸ்திரேலியா நிச்சயம் பதட்டமடையும், அது அவர்களது பேட்டிங்கிலும் பிரதிபலிக்கும்.
ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மிக மிக முக்கியமான பேட்ஸ்மென்கள், அடிலெய்ட் மைதானத்தில் கிளார்க் 9 டெஸ்ட் போட்டிகளில் 1279 ரன்களை 6 சதங்களுடன் 98.38 என்ற சராசரியில் எடுத்துள்ளார். எனவே கிளார்க்கை முதலில் குறி வைப்பது முக்கியம்.
ஆஸ்திரேலிய பேட்டிங் அதன் பந்து வீச்சை விட பலவீனமானது என்பது அதன் சமீபத்திய பாகிஸ்தான் தொடருக்கு எதிராக நிரூபணமானது. இதனை இந்திய அணியும் தொடர வேண்டும்.
டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 6-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்தத் தொடரில் 0-3 என்று இந்தியா தோல்வி அடைந்தால் 7-வது இடத்திற்கு சரிவடையும் என்பது உறுதி.
நாளை காலை இந்திய நேரம் 5.30 மணிக்கு டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
இந்திய அணி (உத்தேசமாக): விஜய், ஷிகர் தவன், புஜாரா, கோலி, ரோஹித் சர்மா, அஜ்ங்கிய ரஹானே, விருத்திமான் சஹா, அஸ்வின், வருண் ஆரோன், இசாந்த் சர்மா, மொகமது ஷமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT