Published : 25 Dec 2014 04:39 PM
Last Updated : 25 Dec 2014 04:39 PM
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் அந்த சர்ச்சைக்குரிய 4-ஆம் நாள் ஆட்டத்தின் காலையில் ஷிகர் தவனுக்கும் விராட் கோலிக்கும் தகராறு ஏற்பட்டதாக எழுந்துள்ள செய்திகளை தோனி தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வுடன் மறுத்துள்ளார்.
அதாவது, வலைப்பயிற்சியில் தவன், கோலி இருவருமே காயமடைந்தனர், இந்நிலையில் அன்று தவன் தான் களமிறங்க மறுத்ததாகவும் அதன் பிறகு கோலிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் அப்போது கோலி, தவனை நோக்கி சவாலைச் சந்திப்பதிலிருந்து ஓடுகிறாய் என்று கூறியதாகவும் அணி இயக்குநர் ரவிசாஸ்திரி இருவரையும் சமாதானம் செய்ததாகவும் செய்திகள் எழுந்தன.
இதனை தோனி தனக்கேயுரிய நகைச்சுவையான பாணியில் மறுத்துக் கூறும் போது, “ஆம்! அதுதான் உண்மை (ஜோக் அடித்த தோனி) கத்தியைக் கொண்டு விராட் கோலி, தவனை குத்தினார், அதிலிருந்து அவர் மீண்டவுடன் களத்திற்குள் அவரை தள்ளிவிட்டோம் போங்கள்!
இவையெல்லாம் உண்மைக்கு புறம்பான வெறும் கதைகள். மார்வெல்-வார்னர் பிரதர்ஸ் இதனைக் கொண்டு படம் தயாரித்து விடலாம். எங்கிருந்து இந்தச் செய்திகளெல்லாம் முளைக்கின்றன என்பது எனக்கு புரிவதில்லை. அணியிலிருந்து யாராவது ஒருவர் இதனை உங்களிடம் கூறியிருந்தால் அவர் பெயரை எங்களுக்குத் தெரிவியுங்கள். ஏனெனில் அவரது கற்பனைத்திறன் அபாரம், அவர் உடனடியாக வார்னர் பிரதர்ஸ் போன்ற திரைப்பட நிறுவனத்திற்கு தேவைப்படுகிறார். அந்த நபர் எங்கள் ஓய்வறையில் இருக்க வேண்டிய நபரேயல்ல, ஏனெனில் நடக்காத ஒன்றை அவர் படைக்கிறார் என்றால் அவர் உண்மையில் அபாரத் திறமை கொண்டவர்தானே.
இப்படிப்பட்ட கதைகள் பேப்பர் விற்க பயன்படும். ஆனால் நிஜத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.
ஓய்வறை சூழல் அற்புதமாக உள்ளது, எந்த ஒரு விவகாரமும் இல்லை. நாங்கள் அயல்நாடுகளில் விளையாடும் போது கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போதெல்லாம் மீடியாக்களிடம் இப்படிப்பட்ட செயல்பாடுகள் தோன்றுகின்றன. சில பத்திரிகையாளர்கள் தங்களுக்கேயுரிய பாணியில் கதைகளை உருவாக்குகின்றனர். அதனை வெளியிடவும் செய்து விடுகின்றனர்” என்று கூறினார் தோனி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT