Published : 16 Dec 2014 03:20 PM
Last Updated : 16 Dec 2014 03:20 PM

2-வது டெஸ்ட் போட்டிக்கு ரோஹித் சர்மா தேவையா?

அதிவேக பிட்ச் கொண்ட பிரிஸ்பன் மைதானத்தில் நாளை 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்திய அணிக்கு கேப்டனாக தோனி திரும்பியுள்ளார். அணியில் ரோஹித் சர்மாவின் இடம் என்ன என்பதை பரிசீலிக்க வேண்டிய நேரம் இதுவே.

7 பேட்ஸ்மென்கள் 4 பவுலர்கள் என்ற அணிச் சேர்க்கையினால் ரோஹித் சர்மா இடம்பெறுகிறார். ஆஸ்திரேலிய பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்டிங் பலப்படுத்த வேண்டும் என்பது ஒரு புறம் இருந்தாலும், ரோஹித் சர்மா எந்த அள்வுக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அவர் களமிறங்குவதோ 6ஆம் நிலையில் அவருக்குப் பிறகு தோனி, பிறகு 2 அல்லது 3 பந்துகளே தாக்குப் பிடிக்கும் பவுலர்கள், இந்நிலையில் அவரது ஆட்டம் தோனி எவ்வளவு நேரம் நிற்கிறாரோ அதனைப் பொறுத்து அமையும். தோனி விரைவில் ஆட்டமிழந்தால், நமது டெய்ல் எண்டர்களை வைத்துக் கொண்டு அவரால் பெரிதாக பேட்டிங்கில் பங்களிப்பு செய்ய முடியாது.

ஆகவே 30 அல்லது 40 ரன்கள் மிஞ்சிப்போனால் ஒரு அரைசதத்திற்கு மேல் பங்களிப்பு செய்ய முடியாத ஒருவரை அணியில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை இந்திய அணி நிர்வாகம் பரிசீலனை செய்வது அவசியம்.

மேலும், அவர் இறங்கும் போது பந்து பழையதாகிப் போன நிலையிலும் அவரால் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை சரியாக விளையாட முடிவதில்லை என்பதை நாம் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய தொடரிலிருந்தே பார்த்து வருகிறோம்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் உண்மையில் விராட் கோலியுடன் அவர் நின்று ஆடியிருந்தால் போதும், இந்தியாவை வெற்றிக்கு அவர் இட்டுச் சென்றிருப்பார். ஆனால், விராட் கோலிக்கு நாம் பக்க வாத்தியமாக இருப்பதா என்ற ‘மும்பை ஈகோ’ அவரை ஆட்டமிழக்கச் செய்ததோ என்ற ஐயம் எழுகிறது.

எனவே அவர் இறங்கும் டவுன் ஆர்டரில் அவரால் பெரிய அளவுக்கு பங்களிப்பு செய்ய முடியாது காரணம் மிக மிக பலவீனமான டெய்ல் எண்டர்கள் இந்திய அணியில் உள்ளனர். 2-வது முக்கிய வீரர் ஒருவர் ஆடிவரும் போது, அவருக்கு பக்க பலமாகவும் அவரால் செயல்பட முடியவில்லை.

ஆனால், இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா நம் இந்தியா அணி நிர்வாகத்தினால், இருக்கவே இருக்கிறார், பலிகடா கரன் சர்மா அவரை தூக்கி விட்டு அஸ்வினைக் கொண்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று யோசிப்பார்கள். அதுதான் நடக்கும் என்று தோனி போட்டிக்கு முன்னால் பேசிய செய்தியாளர்கள் கூட்டமும் நிரூபித்துள்ளது.

"பின்களத்தில் அஸ்வினைப் போல் ஒரு வீரர் இருப்பது பேட்டிங்கை பலமாக்குவதோடு, ஆஃப் ஸ்பின்னர்களுக்கான ஸ்பாட் கிடைக்கும் போது பயனுள்ளதாக இருப்பார். இந்த இடத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளரோ (ஜடேஜா) அல்லது லெக் ஸ்பின்னரோ (கரன் சர்மா) அதிகம் பயனளிக்க மாட்டார்கள்” என்று கூறிவிட்டார்.

எனவே பங்கஜ் சிங் கதி கரன் சர்மாவுக்கும் ஏற்பட்டுவிட்டது என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியுள்ளது. உண்மையில் ரோஹித் சர்மா எடுக்கும் 30 அல்லது 40 ரன்களை அஸ்வின் எடுப்பார். அப்படியிருக்கையில் கரன் சர்மாவையும் வைத்துக் கொள்ளலாம். அல்லது அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவை அணியில் கொண்டு வந்தால் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆஃப் ஸ்பின்னிற்கு அஸ்வின் என்று அணிச் சேர்க்கை கச்சிதமாக அமையும்.

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவினால் முன்கள வீரராகக் களமிறங்க முடியாத நிலையில் 6ஆம் நிலையில் அவர் தேவையில்லை என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x