Published : 24 Dec 2014 03:12 PM
Last Updated : 24 Dec 2014 03:12 PM
ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் சாதனை 264 ரன்கள், எப்போது முடியும் என்று கேள்வி எழுப்பும் அயல்நாட்டுத் தோல்விகள், ஐபிஎல்-6-ல் குறித்த நீதிமன்ற வழக்குகள், பிசிசிஐ-யிலிருந்து சீனிவாசன் விலகியிருக்கக் காரணமான ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டுகள் என்று 2014-ல் இந்திய கிரிக்கெட் பன்முகம் எய்தியுள்ளது.
ஈடன் கார்டனில் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச 264 ரன்கள் சாதனை இந்த ஆண்டின் பிரதான கிரிக்கெட் உற்சாகமாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அணி 264 ரன்கள் எடுத்தால் அது வெற்றிக்கான ஸ்கோர் என்ற நிலை மாறி ஒரு தனிப்பட்ட வீரர் 264 ரன்கள் என்பதாக ஒருநாள் கிரிக்கெட் வளர்ச்சி கண்டுள்ளது.
மற்றொரு முக்கியமான நிகழ்வு 1989ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலில் 2014-ஆம் ஆண்டே முதன் முதலாக சச்சின் டெண்டுல்கர் பெயர் இடம்பெறாமல் இருந்தது.
சச்சின் இல்லாத இந்திய கிரிக்கெட் என்பது உண்மையில் 2014-ஆம் ஆண்டுதான் தொடங்கியது. மேலும் சச்சின், திராவிட், லஷ்மண், கும்ளே போன்ற மிகப்பெரிய வீரர்கள் இல்லாத இந்திய அணியை ரசிகர்கள் பார்க்கப் பழகியதும் 2014ஆம் ஆண்டுதான்.
சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் தாக்கம் செலுத்திய விரேந்திர சேவாக் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆட முடியாது என்பதை விட இனி இந்தியாவுக்கு அவர் ஆட முடியுமா என்ற சோகமான கேள்வியும் எழுந்தது இந்த ஆண்டில்தான்.
அதே போல் தோனியின் கேப்டன்சி வெற்றிகளுக்கு பெரிதும் காரணமாக அமைந்த சேவாக் தவிர, கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகியோருக்கு இந்திய அணியின் கதவு மூடப்பட்டு விட்டதும் இந்த ஆண்டில்தான்.
களத்திற்கு வெளியே ஐபிஎல் முறைகேடுகள் குறித்த முத்கல் அறிக்கை, தொடர்ந்த நீதிமன்ற விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தல்கள், இதனையும் மீறி அதிகார ஏணியில் ஐசிசி தலைவராக சீனிவாசன் ஆனது. இதன் மூலம் ஐசிசி வருவாயில் இந்திய வாரியத்திற்கு கணிசமான பங்கு வருவதும் நிகழ்ந்துள்ளது என்று 2014ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அனைத்து முகங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது.
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா தக்க வைக்குமா என்ற கேள்வியுடன் தொடங்குவதோடு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை கட்டுப்படுத்தப் போவது யார் என்ற கேள்வியுடனும் தொடங்கவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT