Published : 28 Dec 2014 02:11 PM
Last Updated : 28 Dec 2014 02:11 PM
1981-ல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் ஆஸி. வீரர்களின் வாய்ப் பேச்சுக்குப் பதிலடியாக மறுமுனையில் இருந்த பேட்ஸ் மேனையும் அழைத்துக்கொண்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறிய சம்பவத்துக்கு முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
1981-ல், இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அப்போது இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்த கவாஸ்கர், டென்னிஸ் லில்லி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். பந்து முதலில் பேட்டில் பட்டு பிறகு கால்காப்பில் பட்டதாக கவாஸ்கர் நினைத்தார்.
ஆனால் நடுவர் ரெக்ஸ் ஒயிட்ஹெட் எல்பிடபிள்யூ அவுட் கொடுத்ததால் அதிர்ச்சியடைந்த கவாஸ்கர், கிரீஸிலேயே சில நொடிகள் நின்றார். கோபத்தில் தன்னுடைய பேட்டை கொண்டு கால்காப்பில் ஓங்கி அடித்தார். பிறகு வேறு வழியில்லாமல் பெவிலியன் நோக்கி செல்ல ஆரம்பித்த கவாஸ்கரை லில்லி உள்ளிட்ட ஆஸி. வீரர்கள் வெறுப்பேற்றினார்கள்.
இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர், உடனே மறுமுனையில் இருந்த மற்றொரு இந்திய தொடக்க வீரரான சேத்தன் சவுகானையும் தன்னுடன் வெளியேறுமாறு அழைத்தார். அவரும் அதற்குப் பணிந்தார். வழக்கத்துக்கு மாறாக, இரு தொடக்க வீரர்களும் ஆடுகளத்தை விட்டு வெளியேறியதைப் பார்த்து ஆஸி. வீரர்களும் நடுவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இருவரும் பவுண்டரி கோட்டுக்கு அருகே வந்தபோது, இந்திய அணி மேலாளர் சாகித் துர்ரானி தலையிட்டு சவுகானை மீண்டும் ஆடச்செல்லுமாறு கட்டளையிட்டார். ஒருவேளை இருவரும் வெளியேறியிருந்தால் இந்திய அணி ஆட்டத்தைப் புறக்கணித்ததாகக் கூறி ஆஸி. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கும்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக் காட்சியில் இதுதொடர்பான விவாதத்தில் நேற்று கலந்து கொண்ட கவாஸ்கர் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித் தார். இதுபற்றி அவர் மேலும் கூறும்போது: என்னுடைய முடிவுக் காக நான் வருத்தப்படுகிறேன். மிகப்பெரிய தவறு அது. ஒரு இந்திய கேப்டனாக நான் அப்படி செய்திருக்கக்கூடாது. எனக்கு அவுட் கொடுத்தது தவறு என்றாலும் என் நடவடிக்கையை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT