Last Updated : 12 Dec, 2014 04:36 PM

 

Published : 12 Dec 2014 04:36 PM
Last Updated : 12 Dec 2014 04:36 PM

இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்வோம்: வார்னர்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 5ஆம் நாளான நாளை அனைத்து இந்திய விக்கெட்டுகளையும் வீழ்த்த முயற்சி செய்வோம் என்று சத நாயகன் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று 102 ரன்களை எடுத்த டேவிட் வார்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருமுறை ஒரே டெஸ்டில் இரண்டு சதங்களை அடித்த பெருமையை பெற்றார். இதற்கு முன்னால் கிரெக் சாப்பல் இருமுறை ஒரே டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வார்னர் கூறும் போது, “டெஸ்ட் போட்டியின் இந்த நிலையில் ரன்கள் எடுப்பது கடினம். ஆனால், பவுலர்களின் காலடித்தடம் ஏற்படுத்த்திய ‘ரஃப்’ பகுதியை நேதன் லயன் நாளை சிறப்பாக பயன்படுத்துவார்.

முதல் இன்னிங்சில் ஒவ்வொரு பந்தையும் அவர் ‘ரஃப்’-இல் வீசி பிரச்சினைகளைக் கொடுத்தார். நாளை புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி பந்து பழசானவுடன் ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் நேதன் லயன் ஆகியோரை வைத்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்ற முயற்சி செய்வோம்.

கடந்த 2 ஆண்டுகளாக நேதன் லயன் ஒரு சிறந்த வீச்சாளராக மாறி வருகிறார். இப்போது அடிலெய்டில் முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை அவரால் கைப்பற்ற முடிகிறது. ஆகவே, நாளை வந்து அவர் ஏன் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்ற உதவ முடியாது?

பிட்சும் மாறிவிட்டது 98 ஓவர்கள் எங்களுக்கு இருக்கின்றன. நாங்கள் பேட் செய்ய வந்த போது 70 ரன்களுக்கு சற்று மேல் முன்னிலை பெற்றிருந்தோம். முதலில் சாதாரணமாக விளையாடி அடித்தளம் அமைத்தால் பின்னால் ஸ்மித், மிட்செல் மார்ஷ் பந்துகளை வெளியே அடிக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும்” என்றார்.

பிலிப் ஹியூஸ் நினைவாக அவர் கூறும் போது, “பிலிப் ஹியூஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த அடுத்தடுத்த சதங்களின் ஹைலைட்ஸை நாங்கள் அன்று அமர்ந்து பார்த்தோம். அது எனக்கு இன்றைய அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது” என்றார் வார்னர்.

வருண் ஆரோன் நோ-பாலில் தான் பவுல்டு ஆனது, அதன் பிறகு எழுந்த சர்ச்சைகள் பற்றி அவர் கூறும் போது, “மைதானத்தில் வெயில் 40 டிகிரி செல்சியஸ் அடித்துக் கொண்டிருந்தது. முடிவுகள் நாம் எதிர்பார்க்காத வகையில் செல்லும் போது கிரிக்கெட்டில் இப்படி நிகழ்வது சகஜம்.

வருண் ஆரோன் இன்று நன்றாக வீசினார். ரன்களைக் கட்டுப்படுத்தினார். நான் அவுட் ஆவதை விரும்பாதவன். இந்த நிலையில் பவுல்டு ஆன பிறகு அவர் எனக்கு சிலதைக் கொடுத்தார், நோ-பால் என்றவுடன் நானும் சிலவற்றைக் கொடுத்தேன். நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது. நான் நாக்கைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். இனி அவ்வாறு நடக்காமல் கட்டுப்படுத்த முடியுமா என்பதை முயற்சி செய்யப்போகிறேன்.

வருண் ஆரோனுக்கு விக்கெட் விழ வேண்டும், இன்று அவர் வீசியதற்கு விக்கெட் விழுவது அவசியம். ஆனால் கிரிக்கெட்டில் நோ-பால்களாவது துரதிர்ஷ்டம்தான்” என்றார் வார்னர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x