Published : 01 Dec 2014 08:34 PM
Last Updated : 01 Dec 2014 08:34 PM
பிலிப் ஹியூஸ் தலையை பவுன்சர் தாக்கிய அன்று மைதானத்தில் இருந்தவர் ஜெஃப் லாசன். இவர் எதிரணியான நியூசவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிலிப் ஹியூஸ் துயரத்தை அடுத்து கிரிக்கெட் ஆட்டத்தில் சில தினங்களுக்கு ஆக்ரோஷம் இருக்காது என்றும் மீண்டும் ஆக்ரோஷ வழிக்கு கிரிக்கெட் திரும்பிவிடும், ஆனாலும் சில நாட்களுக்கு பழைய ஆக்ரோஷம் கிரிக்கெட் அரங்கில் இருக்காது என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு தின ஆட்டம் பிலிப் ஹியூஸ் மரணத்தினால் நிறுத்தப்பட்டது. மறுநாள் ஒரு பவுன்சர் கூட வீசப்படவில்லை. இது மிகவும் நெகிழ்ச்சியான செய்கை, உணர்வு என்கிறார் ஜெஃப் லாசன்.
மேலும், “யாராவது அவுட் ஆகிச் சென்றால் கூட அணி வீரர்களிடத்தில் பெரிய கொண்டாட்டங்கள் இல்லை. 'விக்கெட் விழுந்தது அவ்வளவுதான் விடுங்கள்’ என்பது போல் இருந்தது வீரர்களின் செய்கை. மேலும் பவுன்சர்களே அன்று வீசப்படவில்லை என்பதும் என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
ஆனாலும், கிரிக்கெட் ஆட்டம் மீண்டும் தனது பழைய ஆக்ரோஷ நிலைக்கு திரும்பும். ஆனாலும், நான் ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெறும் கிரிக்கெட் ஆட்டங்களின் எண்ணிக்கையை நினைத்துப் பார்க்கிறேன்.
ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமைகளில் மட்டும் 10,000 கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறும் என்று நினைக்கிறேன், மில்லியன் பந்துகள் வீசப்படுகின்றன. இதில் குறைந்தது 50,000 பவுன்சர்கள் அடங்கும்.
ஆனால்... இவற்றில் எந்தப் பந்து தலையைத் தாக்கி உயிரைப்பறிக்கும் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்காக உணர்ச்சி வசப்பட்டு விதிவிலக்கான துர்சம்பவங்களுக்காக விதிமுறைகளை கடுமையாக்குவது கூடாது” என்றார் ஜெஃப் லாசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT